Published:Updated:

வாரணாசி தொகுதி: அய்யாக்கண்ணுவின் பின்வாங்கலும்... பிற விவசாயிகளின் மனுத்தாக்கலும்!

வாரணாசி தொகுதி: அய்யாக்கண்ணுவின் பின்வாங்கலும்... பிற விவசாயிகளின் மனுத்தாக்கலும்!
வாரணாசி தொகுதி: அய்யாக்கண்ணுவின் பின்வாங்கலும்... பிற விவசாயிகளின் மனுத்தாக்கலும்!

அகில இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தெய்வ சிகாமணி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாரணாசி சென்று வேட்புமனுத் தாக்கல் செய்ய முயன்றுள்ளனர். அவர்களுடைய இந்த நடவடிக்கைக்கு, அங்கு பலமான தடை ஏற்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், அவருக்கு எதிராகப் போட்டியிடப் போவதாகத் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கடந்த மாதம் அறிவித்திருந்தார். இந்திய அளவில் கவனிக்கப்பட்ட இந்த விவகாரம், பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அய்யாக்கண்ணுவை அழைத்து, அமித் ஷா பேசியதைத் தொடர்ந்து அறிவிப்பைத் திரும்பப் பெற்றார் அவர்.

.

அவருடைய இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனமும் எழுந்தது. இந்த நிலையில், திடீரென அகில இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தெய்வ சிகாமணி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாரணாசி சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய முயன்றுள்ளனர். அவர்களுடைய இந்த நடவடிக்கைக்கு, அங்கு பலமான தடை ஏற்பட்டது.

இதுகுறித்து தெய்வ சிகாமணியிடம் பேசியபோது, ``பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். லாபகரமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளோம். குறிப்பாக 2014-ல் தேர்தல் அறிக்கையில் பி.ஜே.பி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை இன்றுவரை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, விவசாயிகளின் கடன்தான் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் வலியுறுத்தி மோடியை எதிர்த்துப் போட்டியிட்டால், விவசாயிகளின் பிரச்னைகள் இந்திய அளவில் கவனிக்கப்படும் என்று எண்ணியே அங்கு சென்றோம். தொடக்கத்தில் வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு, வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு அங்குள்ளவர்கள் 10 பேர் பரிந்துரை செய்ய வேண்டும். அதன்படியே ஒவ்வொரு வேட்பாளருக்கும் கையொப்பம் வாங்கிக்கொண்டு தாக்கல் செய்யச் சென்றார்கள்.  உள்ளேபோனால், உடனடியாகக் கையொப்பம் போட்டவர்களே ஓடிவந்து முன்மொழிதலைத் திரும்பப் பெறுவதாகப் பின்வாங்கிக் கொண்டார்கள். தொடர்ந்து இப்படியே நடந்துகொண்டிருந்தது.

இப்படிக் கையொப்பமிட்டவர்கள் பின்வாங்கக் காரணம், பி.ஜே.பி ஆட்கள்தான். அவர்கள் வந்து மிரட்டுவதால் உள்ளூர் விவசாயிகள் எங்களுக்குத் தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார்கள். இப்படியான தடை ஒருபுறம் என்றால், மறுபுறம் வேட்பாளர் தவிர, வேறு யாரும் உள்ளே செல்லக் கூடாது. அதை ஏற்றுக்கொண்டு வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சென்றால்... அங்கு, ’முன்மொழியக்கூடியவர்கள் எங்கே’ எனக் கேட்டார்கள். இப்படியே பலவகையில் எங்களை அலைக்கழிப்பதும் மிரட்டுவதுமாக இருந்தனர். கடைசியாக எங்களை அனுமதிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டோம். அதன் பின்னரே, அந்த மாவட்ட ஆட்சியர் எங்களை அனுமதித்தார். இதில் 40-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளோம். இதில் எத்தனை மனுக்கள் ஏற்கப்படும் என்று தெரியவில்லை. இப்படியான போராட்டத்தின்மூலமே தற்போது விவசாயிகள் கோரிக்கை இந்திய அளவில் பேசப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, ``விவசாயிகள், விவசாயிகளுக்காகப் போராடுவதை வரவேற்கிறேன். அதே நேரத்தில், விவசாயிகளுக்காக நாம் வாரணாசி சென்று மோடியை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய வேண்டுமென்றால், சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. குறிப்பாக,  நாம் இந்த ஊரில்தான்  வசிக்கிறோம் என்பதற்கான சான்றை நமது தாசில்தாரிடம் வாங்க வேண்டும். அதோடு, அந்த மாநிலத்தில் உள்ளவர்கள் நாம் வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது அவர்களில் 10 பேர் நமக்காக முன்மொழிய வேண்டும். அந்த நடைமுறைகளைப் பின்பற்றினால்தான் அங்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியும். அந்த நடைமுறைகளை நமது விவசாயிகள் பின்பற்றினார்களா என்பது தெரியவில்லை. எது, எப்படி இருப்பினும் விவசாயிகளுக்காக இந்தப் போராட்டத்தை வரவேற்கிறேன்" என்றார்.  

அடுத்த கட்டுரைக்கு