Published:Updated:

இவர்கள் ஜெயித்தால்... தோற்றால்... என்னாகும்? மே 23-க்குப் பின் அரங்கேறப்போகும் அரசியல்!

இவர்கள் ஜெயித்தால்... தோற்றால்... என்னாகும்? மே 23-க்குப் பின் அரங்கேறப்போகும் அரசியல்!
இவர்கள் ஜெயித்தால்... தோற்றால்... என்னாகும்? மே 23-க்குப் பின் அரங்கேறப்போகும் அரசியல்!

மே 23 அன்று தேர்தல் முடிவுகள் வெளியானதும் தமிழக அரசியல் அதகளமாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலில் ஜெயித்தால் அல்லது தோற்றால் தமிழக அரசியல் என்ன ஆகும்? எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் என்ன செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இப்போதே எகிறியுள்ளது.

இன்னும் 12 யுகங்களைக் கடக்க வேண்டும். தேர்தலில் நேரடியாகத் தொடர்புடையவர்களுக்கு மட்டுமல்ல; தமிழக மக்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்வரை ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகத்தான் கழிகிறது. மே 23-ம் தேதி அன்று வெளியாகவிருக்கும் தேர்தல் முடிவுகள், தேசத்தில் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதைவிட, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதுதான் ஏழரைக்கோடி மக்களின் எதிர்பார்ப்பாகவும் ஏக்கமாகவும் இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின்படியே, தேர்தல் முடிவுகள் அமையுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.  

ஏனெனில், வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் தேர்தல் விதிமீறல்கள் கொடிகட்டிப் பறந்துள்ளன. பணம் பத்தில்லை, நூறு செய்திருக்கிறது. இரு பெரும் திராவிடக்கட்சிகளும் தங்களின் சக்திக்குத் தகுந்தாற்போல பணத்தை வாரியிறைத்திருக்கின்றன. அதிலும் பணபலத்தைக் காட்டியே சீட் வாங்கிய பலரும் தேர்தல் செலவு உச்சவரம்பின் மீது எச்சில் துப்பிவிட்டு, 100 கோடி, 200 கோடி என்று செலவழித்திருக்கிறார்கள். மாட்டிக்கொண்டது துரைமுருகன் மட்டுமே. மாட்டாத துரைகள் ஏராளம். 

இவர்கள் ஜெயித்தால்... தோற்றால்... என்னாகும்? மே 23-க்குப் பின் அரங்கேறப்போகும் அரசியல்!

எதிர்க்கட்சியினரைக் குறிவைத்துத் தூக்கிய வருமானவரித்துறையும், தேர்தல் ஆணையமும் ஆளும்கட்சி வேட்பாளர்களிடம் காட்டியது ‘வேற லெவல்’ பாசம். ஆளும்கட்சியின் அதிகாரபூர்வ ஏஜென்ட்டாகவே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி செயல்பட்டிருப்பதாகத் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் அளவுக்கு மிக மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன. தேர்தல் முடிவுகள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக வந்தால் இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் அழுத்தம் பெறும். தேர்தல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும் குறைந்துபோக வாய்ப்புண்டு.

ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி தோல்வியைச் சந்தித்தால், குறிப்பாக பி.ஜே.பி சார்பில் நிறுத்தப்பட்ட வி.ஐ.பி-க்கள் அனைவரும் தோற்றுப்போனால் அதன்பின் அ.தி.மு.க மீது பி.ஜே.பி காண்பிக்கும் முகம் மிகக்கொடூரமானதாகவே இருக்கும். அதிலும் இங்கே தோற்று, மத்தியில் மீண்டும் ஆட்சியை பி.ஜே.பி தக்கவைத்துக்கொண்டால் கேட்கவே வேண்டாம். அ.தி.மு.க ஆட்சியின் செயல்பாடின்மையாலும் ஊழலாலும்தான் தங்களுக்குத் தோல்வி கிடைத்துவிட்டதாகச் சொல்லி, அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளைத் தோண்ட ஆரம்பித்துவிடுவார்கள். பலர் உள்ளே போகலாம். சொத்துகள் முடக்கப்படலாம். அ.தி.மு.க அழிப்புப்படலம் தீவிரமாகலாம்.

மறுபுறத்தில்... ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்காமல், தி.மு.க-வின் ஆதரவை நாட வேண்டிய தேவையிருந்தால் அதையும் பி.ஜே.பி செய்யும். அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், ‘எல்லாக்கோட்டையும் அழிங்க, நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்’ என்று மறுபடியும் தனது வேலையை ஆரம்பித்துவிடும். பி.ஜே.பி ஆதரவு கேட்கலாம், தி.மு.க ஆதரிக்குமா என்றும் விவாதங்கள் நடக்கின்றன. 

மோடியை ‘சாடிஸ்ட்’ என்று பகிரங்கமாக வசைபாடி ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த மு.க.ஸ்டாலினால் அவ்வளவு எளிதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களைக் கழற்றிவிட்டுவிட முடியாதுதான். ஆனால், ஆட்சிக்கலைப்பு, அமைச்சர்கள் மீது ரெய்டு நடவடிக்கைகள், முதல்வர் பதவி என சில உறுதிகளை பி.ஜே.பி கொடுத்தால், ஸ்டாலின் அதைச் செய்ய மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காரணங்களை எங்கேயும் தேட வேண்டாம். ஒரே காரணம்தான்... அவர் கருணாநிதியின் மகன்.

'வேண்டுமானால் மோடிக்குப் பதிலாக நிதின் கட்கரியைப் பிரதமராக்குங்கள்' என்று சொல்லலாம். எட்டு வழிச்சாலை வராது, நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும், ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்படும் போன்ற வாக்குறுதிகளைத் தரலாம். அது பின்னாளில் காப்பாற்றப்படுமா என்றெல்லாம் கேக்கப்புடாது. 

இப்படி நடந்தாலும் நடக்குமென்றுதான், அ.தி.மு.க-வின் வி.ஐ.பி-க்கள் பலரும் வெவ்வேறு வழிகளில் பி.ஜே.பி தலைமையைக் ‘கரெக்ட்’ செய்யும் வேலைகளில் இறங்கிவிட்டனர். தேவைப்பட்டால் தங்களின் சொத்துகளைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பி.ஜே.பி-யில் சேரவும் அமைச்சர்கள் சிலர் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. வாரணாசிக்குப் போய் மோடியின் வேட்புமனு தாக்கலில் ஓ.பி.எஸ், வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டதும் இதுபோன்ற சந்தேகங்களைத்தான் கிளப்பியது. ஓ.பி.எஸ் மறுத்துவிட்டார். இன்னும் சில ‘மணியான’ அமைச்சர்கள், அதற்குத் தயாராக இருப்பதாகவே தெரிகிறது. ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படிப்போய் கலந்து கொண்டிருக்க முடியுமா என்று தங்க தமிழ்ச்செல்வன் கேட்ட கேள்வி, பந்துவீச்சாளர் ரபாடாவின் யார்க்கர். 

இன்னொரு பா.ம.க-வாக மாறுகிறதா அ.தி.மு.க?

இவற்றையெல்லாம் பி.ஜே.பி ஜெயிப்பதையும் தோற்பதையும் வைத்து கற்பனையாக வரையப்படும் சித்திரங்கள். தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் மாறாவிட்டாலும் இன்னுமிருக்கும் இரண்டு ஆண்டுகளில் எத்தகைய ஆட்சியைக் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே 2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளின் சேவை இனி தேவையா இல்லையா என்பதைத் தமிழக மக்கள் முடிவு செய்வார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் செய்ய வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன... 

அ.தி.மு.க ஆட்சி தொடர்ந்தால் எடப்பாடி என்ன செய்ய வேண்டும்..?

இன்றைய நிலையில் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி அ.தி.மு.க. மாநிலக் கட்சிகளைக் கலைக்கப்போகிறார்கள் என்ற அச்சத்தில் அகில இந்திய என்ற அடைமொழியைத் தாங்கிய அ.தி.மு.க இந்த அங்கீகாரத்தைப் பெற்றது 2014 நாடாளுமன்றத் தேர்தலில்தான். அகில இந்தியக் கட்சியாக ஜெயலலிதா விட்டுச்சென்ற கட்சியைக் கொங்கு மண்டலத்துக்கான குறுகிய கட்சியாக, இன்னொரு பா.ம.க-வாக மாற்றிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி என்று கொதித்துக் கிடக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

இவர்கள் ஜெயித்தால்... தோற்றால்... என்னாகும்? மே 23-க்குப் பின் அரங்கேறப்போகும் அரசியல்!

கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடப்பாடியும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் கட்சிக்குத் தொடர்பில்லாத சிலருமே எடுக்கின்றனர் என்ற பேச்சு கிளம்பிவிட்டது. ஜெயலலிதா இருக்கும்போது வெளிவட்டத்தில் இருந்த அமைச்சர்கள், அவரது மறைவுக்குப் பின் புதிய சசிகலாக்களாக உருவெடுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன. எடப்பாடி உட்பட அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடமே அதிகாரமும் பசையும் இருக்கும் அரசுத்துறைகளும், கட்சியின் முக்கியப் பொறுப்புகளும் இருக்கின்றன. அவர்களின் சம்பாத்தியம் பற்றி ஆயிரமாயிரம் தகவல்கள் உலா வருகின்றன. இவற்றை வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தர வேண்டுமென்ற கோஷம் கட்சிக்குள்ளேயே வலுத்துள்ளது. 

இவையெல்லாம் கட்சிக்காரர்களின் எதிர்பார்ப்புகள். மக்களின் மன்றாட்டுகள் வேறு... எல்லா அரசுத்துறைகளிலும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுவது மக்களைக் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. அரசுத்துறைகளில் பணி மாறுதல், நியமனங்களுக்கான லஞ்சம் கற்பனைக்கு எட்டாததாக எகிறியிருக்கிறது. கட்டுமான அனுமதி, மனைப்பிரிவு அங்கீகாரம் வாங்குவதற்குத் தனியாக பட்ஜெட் போட வேண்டியிருப்பதால் கட்டுமானத்துறை கடும் நெருக்கடியில் தவிக்கிறது. விவசாயிகள் மற்றும் தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்னைகளை எளிதில் பட்டியலிடவே முடியாது. 

விமான நிலையங்கள் விரிவாக்கம், சாலை விரிவாக்கங்கள், புதிய புறவழிச்சாலைகள் என வளர்ச்சிப்பணிகள் முடங்கிக்கிடக்கின்றன. சிலருடைய நலனுக்காகப் பல லட்சம் மக்கள் பயன் பெறும் பாலங்களின் வடிவங்கள் இஷ்டம்போல மாற்றப்படுகின்றன. 24 x 7 குடிநீர் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வருவேன் என்ற அ.தி.மு.க-வின் ஆட்சியில் 24 x 7 நேரமும் டாஸ்மாக் சரக்கு விற்பனைதான் தங்கு தடையின்றி நடக்கிறது. பாலியல் வக்கிரங்கள் எல்லை மீறிக்கொண்டிருக்கின்றன. எல்லா விவகாரங்களிலும் ஆளுங்கட்சியினரின் பெயர் அடிபடுகிறது. குடியால் கெடும் குடும்பங்கள் பெருகிவிட்டன. மதுக்கடைகளைப் படிப்படியாக மூடுவதாகக் கூறிய அ.தி.மு.க அரசு, மனமகிழ் மன்றம், கிளப் என்ற பெயர்களில் புதிது புதிதாக அவற்றைத் திறந்துகொண்டிருக்கிறது. அத்தனையும் முக்கிய அமைச்சர்களின் பினாமிகள் என்று ஊரே பேசுகிறது.

சாதிய ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. மணல் கொள்ளை, மனித-வனஉயிரின மோதல், வன ஆக்கிரமிப்பு, நீர் மாசு, பிளாஸ்டிக் தடை எனச் சூழல் பிரச்னைகளை இந்த அரசு கையாளும் விதம் கவலையளிக்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப்பங்கீடு மேலும் சிக்கலாகிறது. பேரிடர் பாதிப்புக்கான இழப்பீடுகள் பெறுவதில் தொடங்கி மத்திய அரசின் புறக்கணிப்பை மாநிலஅரசு எதிர்கொண்ட விதம் கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. இத்தனை விஷயங்களுக்கும் இனிவரும் நாள்களிலாவது தீர்வு வேண்டியது அவசியம். முதல்வர் சீட்டைத் தவிர வேறு எதுவுமே முக்கியமானதில்லை என்று எடப்பாடி முடிவெடுத்துச் செயல்பட்டால் 2021 தேர்தல் அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரையாக அமையுமென்பது நிச்சயம்.

திடமாகச் செய்யுமா தி.மு.க...

மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் கனவு ஸ்டாலினாகவே மாறிவிட்டார். தவறில்லை... பெரியகுளம் பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அனுபவித்த முதல்வர் பதவியை ஸ்டாலினுக்கு அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று தமிழக மக்களே அனுதாபப்பட ஆரம்பித்துவிட்டனர். அமெரிக்க அதிபர் தேர்தலைப்போலத் தமிழக முதல்வருக்கு நேரடியாக வாக்களிக்கும் முறையில் தேர்தல் நடத்தினால் தி.மு.க-வைத் தோற்கடித்தாலும் ஸ்டாலினை முதல்வராக உட்கார வைத்துவிடுவார்கள் தமிழக மக்கள்.
ஆனால், அவர் முதல்வரானால் தமிழகத்தில் என்ன நடக்குமென்ற கற்பனை, அவர்களுக்கு அச்சமூட்டுகிறது. எட்டு ஆண்டுகளாக உடன்பிறப்புகளின் கைகளைக் கட்டிப்போட்டிருந்தது தமிழக அரசியல் சூழ்நிலை. ஜெயலலிதா இருந்தபோது சம்பாதித்ததைவிட இரட்டிப்பாக அ.தி.மு.க-வினர் இப்போது சம்பாதிப்பதைப் பார்த்துப் பார்த்து பொறாமையில் பொங்கிக்கொண்டிருக்கிற தி.மு.க-வினர் ‘‘நம்ம ஆட்சி வந்தால் எது எதில் எப்படி எப்படிச் சம்பாதிக்கலாம்’’ என்று ‘பிளான்’ போட்டுக்கொண்டிருக்கின்றனர். 

இவர்கள் ஜெயித்தால்... தோற்றால்... என்னாகும்? மே 23-க்குப் பின் அரங்கேறப்போகும் அரசியல்!

இந்த முறை எப்படியாவது இந்தத் துறையை வாங்கிவிட வேண்டுமென்று கட்சியின் சீனியர்கள் பலரும் கணக்குப்போட, கதி கலங்கித்தான் போயிருக்கிறார் கருணாநிதியின் மகன். ஸ்டாலின் முதல்வராகிவிட்டால், ஜெயலலிதாவைவிடச் சர்வாதிகாரியாக மாறிவிடுவார் என்று கட்சிக்குள்ளும் ஒரு கலக்கம் இருக்கிறது. அவரின் மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஆகியோரும், அவர்களின் பெயரை வைத்துக்கொண்டு மற்றவர்களும் என்னென்ன செய்வார்களோ என்று தொழில்முனைவோர் தூக்கம் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். மீண்டும் ரவுடியிசம் தலை தூக்குமோ, சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுமோ, நிலஅபகரிப்பு பலமாக நடக்குமோ எனப் பலவிதமான கேள்விகள், மூளைக்குள்ளிருந்து புற்றீசலாகப் புறப்படுகின்றன.

இவற்றுக்கெல்லாம் ஸ்டாலின் பதில் தர வேண்டும். அத்துடன்... லஞ்சம், ஊழல் இருக்காது, சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும், மாநில உரிமைகள் விட்டுத்தரப்படாது. வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்படாது, அதேநேரத்தில் சூழல் பாதுகாக்கப்படும். அரசுத்துறைகள் புத்துருவாக்கப்படும், விவசாயம் காக்கப்படும், தொழில்துறை மேம்படுத்தப்படும். கட்டமைப்பு வசதிகள் பெருகும் எனப் பல உத்தரவாதங்களையும் அவர் கொடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, குடும்பத்தின் ஆதிக்கம் இருக்காது என்பதைத் தமிழக மக்களிடத்தில் பகிரங்கமாக அவர் பிரகடனம் செய்ய வேண்டும். வாக்குறுதி கொடுப்பது பெரிதில்லை. அதைச் செய்துகாட்ட வேண்டும்.

பி.ஜே.பி.யும் காங்கிரசும் செய்ய வேண்டியது...

திராவிடக் கட்சிகள் இரண்டின் மீதும் தமிழக மக்களுக்கு அபிப்பிராயம் அதிகமிருந்தாலும் அதிருப்தியும் குறைவாகவில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புக்கு இணையாகத் தனியாரின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. மனிதவளமும் அமைதியும் கட்டமைப்பு வசதிகளும் நிறைந்த ஒரு மாநிலத்தில் தொழில் வளர்ச்சி என்பது முயல் வேகத்தில் இருப்பதே நியாயம். ஆனால், இங்கே ஆமை வேகத்தில்தான் இருக்கிறது. காரணம், லஞ்சமும் ஊழலும். மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை மட்டுமன்றி மாநிலத்தின் வளர்ச்சியையே அது முடக்கிப்போடுகிறது. 

இதனால் ஊழலில் ஊறித்திளைக்கும் அரசியல்வாதிகளையும் லஞ்சத்தில் விஞ்சும் அதிகாரிகளையும் கண்டறிந்து கடுமையாகத் தண்டிக்கும் நடவடிக்கையை புதிய அரசு எடுக்க வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு மாறாக மைனாரிட்டி அ.தி.மு.க அரசையும் ஊழல் அமைச்சர்களையும் காப்பாற்றியதே பி.ஜே.பி மீது தமிழக மக்களின் கோபத்தை அதிகரிக்க வைத்தது. அதே தவற்றை மீண்டும் பி.ஜே.பி தொடரக் கூடாது. தி.மு.க இதே தவற்றைச் செய்தால் காங்கிரசும் காப்பாற்றக் கூடாது.

தமிழக மக்களின் கனவு இதுதான். கனவு மெய்ப்பட வேண்டும். 

அடுத்த கட்டுரைக்கு