Published:Updated:

`அம்மா, நான் பொய் சொல்ல மாட்டேன்!'- சூலூரில் மதுவிலக்கு குறித்துப் பேசிய கமல்ஹாசன்

`அம்மா, நான் பொய் சொல்ல மாட்டேன்!'- சூலூரில் மதுவிலக்கு குறித்துப் பேசிய கமல்ஹாசன்
`அம்மா, நான் பொய் சொல்ல மாட்டேன்!'- சூலூரில் மதுவிலக்கு குறித்துப் பேசிய கமல்ஹாசன்
`அம்மா, நான் பொய் சொல்ல மாட்டேன்!'- சூலூரில் மதுவிலக்கு குறித்துப் பேசிய கமல்ஹாசன்

"உலகத்தில், எங்கும் ஒரே நாளில் மதுவிலக்கை கொண்டுவந்தால், தனியாக ஒரு மாஃபியா உருவாகியே தீரும். அப்படி நடந்தால், கோட்டையில் இருப்பவர்கள் எல்லாம் சாராயம் காய்ச்சப் போய்விடுவார்கள்.  ஏதாவது அநியாயம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்ற வாழ்க்கையில் உந்தல். நாம் அதை அனுமதிக்க மாட்டோம். மெதுமெதுவாகத்தான் கொண்டுவருவது. நம்முடைய ஆரோக்கியத்திற்கும் சமூகத்தினுடைய ஆரோக்கியத்திற்கும் அதுதான் நல்லது" என்று சூலூரில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

கோவை சூலூர் தொகுதி இடைத்தேர்தலில், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், " அரசியலுக்கு மிகவும் தாமதமாக வந்ததற்கு நான் வருத்தப்படுகிறேன். ஆனால், இப்பொழுது வந்து சேர்ந்துவிட்டேன் என்கிற சந்தோஷம் எனக்கு இருக்கிறது. சூலூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் மயில்சாமியை அறிமுகப்படுத்துவதில்  பெருமைகொள்கிறேன். தமிழகமெங்கும் நாங்கள் சுற்றிவரும்போது, நாங்கள் பார்க்கும் ஆதார தேவையை கவனிக்காமல் வேறு தண்ணியில் கவனம் செலுத்திவிட்டது அரசு. சாராய கங்கை பெருகி ஓடிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில்,  நம் ஜீவநதிகளெல்லாம் பாழாகிக்கொண்டிருக்கிறது.

குடிநீருக்கும் சாக்கடைக்கும் வித்தியாசம் தெரியாத இவர்கள், நாடாளத் தகுதியற்றவர்கள். இதுகூடத் தெரியாமல், இவர்கள் எப்படி இங்கே வந்தார்கள் என்று மக்களே வியக்கும் அளவுக்கு இவர்கள், தவறுகளையும் பித்தலாட்டங்களையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் குறைசொல்வதை விடுத்து, மக்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறோம். இவர் அவ்வளவு திருடினார், அவர் அவ்வளவு திருடினார், மக்களுக்கு துரோகங்கள் செய்துள்ளார் என்று பட்டியலிட்டுச் சொல்வதற்கு நிறைய இருந்தாலும், எங்களுக்குச் செய்வதற்கு நேரம் வேண்டும். அதனால், அதைச் சுருக்கிக்கொண்டு நாங்கள் செய்யப்போகும் விஷயங்களின் பட்டியலைச் சொல்கிறேன்.

இங்கே, குடிநீர்ப் பிரச்னை தீர்க்கவே முடியாத உலக சோகம் என்றாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அது தீர்க்கவே முடியாத பிரச்னை அல்ல என்று நம்புகிறது மக்கள் நீதி மய்யம். நேர்மையான அரசியல் நிகழ்ந்தால், கண்டிப்பாக குடிநீர் வீடுதேடி வந்தடையும் என்பதை என்னால் திட்டவட்டமாகச் சொல்ல முடியும். அதற்கான வாய்ப்பையும் நேரத்தையும் மக்கள் எங்களுக்குத் தர வேண்டும். எத்தனை பெட்டிகள் கடத்தப்பட்டாலும், மக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. இந்தக் கட்சியை தூக்கிப் பிடிக்கிறவர்கள் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, மக்களும்தான். நீர்நிலை ஆய்வாளர்களுடன் பேசியபோது, தண்ணீர்ப் பிரச்னை தீர்க்கவே முடியாதது கிடையாது. நல்ல மனமும் நேர்மையும் இருந்தால் எளிதாக தீர்த்துவிடலாம் என்றார்கள். அந்த இரண்டும் எங்களிடம் இருக்கிறது. அவர்களிடம் அது இருக்கிறதா? 

அவர்களுடைய கூட்டங்களுக்கு சாராய போனஸ் கொடுத்துதான் ஆள்களை அழைத்துவருகிறார்கள். போதையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்துக்குள்போக தாய்மார்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால், இங்கே தாய்மார்கள் வருகிறார்கள். ஓரிரு டாஸ்மாக் பார்ட்டிகள் எங்கள் கூட்டத்தில் நுழைந்திருக்கலாம். அவர்களை அழகாக சகோதரத்துவத்துடன் அப்புறப்படுத்தி வைக்கவேண்டிய மூலையில் எங்கள் தொண்டர்கள் வைப்பார்கள். மக்கள் நீதி மய்யம், நீங்கள் நினைக்கும் இடத்தில் வந்து சேர்ந்துவிட்டால், மதுப் பழக்கத்தையும் அவ்வாறே செய்யும்.

நீங்கள் வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவீர்களா என்று வட சென்னை மக்கள் என்னைக் கேட்டார்கள். நான் சொன்னேன்.. அம்மா நான் பொய் சொல்ல மாட்டேன். அதற்கு மற்ற கட்சிகள் இருக்கிறார்கள் அவர்கள் சொல்லிக் கொள்ளட்டும். உலகத்தில் எங்கும் ஒரே நாளில் மதுவிலக்கை கொண்டுவந்தால், தனியாக ஒரு மாஃபியா உருவாகியே தீரும். அப்படி நடந்தால், கோட்டையில் இருப்பவர்கள் எல்லாம் சாரயம் காய்ச்சப் போய்விடுவார்கள்.  ஏதாவது அநியாயம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்ற வாழ்க்கையில் உந்தல். நாம் அதை அனுமதிக்க மாட்டோம். மெதுமெதுவாகத்தான் கொண்டுவருவது. நம்முடைய ஆரோக்கியத்திற்கும் சமூகத்தினுடைய ஆரோக்கியத்திற்கும் அதுதான் நல்லது. அதை அவ்வாறே செய்வோம். பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து உங்களை ஏமாற்ற மாட்டோம். சூலூருக்கு தேவையானவற்றை மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மயில்சாமி பட்டியல்போட்டு வைத்துள்ளார்.  உங்கள் ஊரில் உள்ள பிரச்னையை  அடிப்படையாகவைத்தே அதையே நாங்கள் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறோம். மாற்றத்திற்கு மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களியுங்கள்" என்றார்.