Published:Updated:

அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தம்பிதுரை ஓரம்கட்டப்பட்டது ஏன்?

துரை.வேம்பையன்

எட்டு அமைச்சர்கள், எண்ணற்ற மாவட்ட நிர்வாகிகள் அரவக்குறிச்சி அ.தி.மு.க வேட்பாளர் வெற்றிக்காகப் பிரசாரத்தில் இருக்க, தம்பிதுரை கிருஷ்ணகிரிக்கு `பேக்கப்' ஆனதால், அவரது ஆதரவாளர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தம்பிதுரை ஓரம்கட்டப்பட்டது ஏன்?
அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தம்பிதுரை ஓரம்கட்டப்பட்டது ஏன்?

ரூர் மாவட்ட அ.தி.மு.க-வில் மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை, முற்றிலும் ஓரங்கட்டப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் புலம்பத் தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்பின்னே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாய்ப்பைப் பயன்படுத்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பிதுரையை ஓரங்கட்டிவிட்டதாக அவரது தரப்பில் விசும்பல் கிளம்பியிருக்கிறது. எட்டு அமைச்சர்கள், எண்ணற்ற மாவட்ட நிர்வாகிகள் அரவக்குறிச்சி அ.தி.மு.க வேட்பாளர் வெற்றிக்காகப் பிரசாரத்தில் இருக்க, தம்பிதுரை கிருஷ்ணகிரிக்கு `பேக்கப்' ஆனதால், அவரது ஆதரவாளர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

இதுபற்றி, விசாரித்தோம். நம்மிடம் பேசிய தம்பிதுரை ஆதரவாளர்கள் சிலர், ``2011 - 2016-ம் பீரியடில் மாவட்டச் செயலாளர் மற்றும்  அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை குப்புறத் தள்ள தம்பிதுரையால், உருவாக்கப்பட்டவர்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அந்த ஆட்சியின் இறுதியில் செந்தில் பாலாஜி பற்றி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார்கள் சொல்லி, அவர் வகித்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடுங்கவைத்தார். அதன்பிறகு, தம்பிதுரை சிபாரிசில் மாவட்டச் செயலாளர் ஆக்கப்பட்டவர்தான் இப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அதன்பிறகு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்ததும் தம்பிதுரைதான். ஆனால், அண்ணன்மீது வெளிப்படையாக விஸ்வாசம் காட்டுவதுபோல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாவ்லா காட்டினாலும், உள்ளுக்குள் அவருக்கு கீழ் கரூர் மாவட்டத்தில் அரசியல் செய்வதை விரும்பாமல்தான் இருந்தார். கரூரில் கடந்த வருடம் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, முதல்வர் முன்னிலையில், 'விழாவைப் பிரமாதப்படுத்தியது தான்தான்' என்று தம்பிதுரையின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் விதமாகப் பேசினார். அதன்பிறகு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கரூர் நாடாளுமன்றத் தொகுதி முழுக்க மக்களிடம் மனு வாங்கும் நிகழ்ச்சியில் தம்பிதுரை கலந்துகொண்டார். ஆனால், போகும் இடங்களில் எல்லாம் தம்பிதுரைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. இதனால், பல பகுதிகளுக்கு தம்பிதுரையோடு போகாமல் மட்டம் போட்டார், அமைச்சர். 

அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தம்பிதுரை ஓரம்கட்டப்பட்டது ஏன்?

அதோடு, தன்னிடம் மக்கள் வழங்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை சம்பந்தபட்ட அதிகாரிகள் மட்டும் ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள் என்று வெளிப்படையாகவே புலம்பினார், தம்பிதுரை. எம்.ஆர்.விஜயபாஸ்கர்தான் தனது துறை அதிகாரிகளைக் கண்டும்காணாமல் இருக்கச் சொல்வதாகத் தனது ஆதரவாளர்களிடம் புலம்பினார் தம்பிதுரை. அதேபோல், பி.ஜே.பி-யை தம்பிதுரை தொடர்ந்து அட்டாக் செய்து வந்தார். தம்பிதுரையின் வாயை அடைக்க, அவருக்கு எதிராகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியை கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கேட்க வைத்தார்கள். இதன்பின்னே இருந்ததும், எம்.ஆர்.விஜயபாஸ்கர்தான் என்று தம்பிதுரை புழுங்கினார். ஆனால், ஒருவழியாக எம்.பி தேர்தலில் சீட் வாங்கிய தம்பிதுரை, வாக்கு கேட்டு போகும் இடங்களில் எல்லாம் மக்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தார். இதனால், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிகளில் தம்பிதுரையோடு பிரசாரம் செய்யப்போவதைத் தவிர்த்தார். கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் வேண்டாவெறுப்பாகக் கலந்துகொண்டார். அதற்குக் காரணம், கரூர் சட்டமன்ற உறுப்பினராகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, கரூர் அ.தி.மு.க அரசியலில்தான் பெரிய அசைக்கமுடியாத சக்தியாக உருவாகியும், இன்னமும் தம்பிதுரை தயவில் இருப்பதுபோல் ஒரு தோற்றம் வருவதை விரும்பாமலும் இருந்தார். 

இந்நிலையில்தான், நடந்துமுடிந்த எம்.பி தேர்தலில் தம்பிதுரை தோற்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். அதனால், `தம்பிதுரையை கரூர் மாவட்ட அரசியலைவிட்டு நிரந்தரமாக விரட்ட இதுதான் தருணம்' என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் நினைக்கிறார். அதாவது, இப்போது நடக்கும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வி.வி.செந்தில்நாதனுக்கு, தம்பிதுரைக்கு எழுந்த அளவுக்கு எதிர்ப்பு இல்லை. சொல்லப்போனால், இளைஞர், பெண்கள் மத்தியில் செந்தில்நாதனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், `செந்தில்நாதனோடு தம்பிதுரை பிரசாரத்துக்கு வந்தால், அவரைப் பார்த்து மக்கள் கோபப்படுவார்கள். அதுவே, செந்தில்நாதனை மண்ணைக் கவ்வவைக்கும் காரணியாயிடும்' என்று முதல்வரிடம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொன்னாராம். அதனால், முதல்வர் தம்பிதுரையிடம், `நீங்க அரவக்குறிச்சி பிரசாரத்தில் கலந்துகொள்ள வேண்டாம்' என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். `வளர்த்த கிடா மார்புல பாயுதா'னு எம்.ஆர்.விஜயபாஸ்கரின் துரோகத்தை நினைத்து வேதனைபட்டிருக்கிறார். இருந்தாலும், `சீனியரான என்னைத் தடுப்பதா' என்று வி.வி.செந்தில்நாதன் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது, இருண்ட முகத்துடன் கலந்துகொண்டார். அதோடு, க.பரமத்தியில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், அழையா விருந்தாளியாகக் கலந்துகொண்டார். துணை முதல்வர் ஓ.பி.எஸ் பிரசாரத்துக்கு வந்தபோது, மரியாதை நிமித்தமாக அவரைப் போய்ச் சந்தித்தார். 

அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தம்பிதுரை ஓரம்கட்டப்பட்டது ஏன்?

அப்போது, தனது நிலைமையை ஓ.பி.எஸ்.சிடம் சொல்லி, குமுறி இருக்கிறார் தம்பிதுரை. ஆனால், ஓ.பி.எஸ்ஸோ, `என் நிலைமை அதைவிட மோசமா இருக்கு. நான் பிரசாரத்துக்கு வரும்போது, எனக்கு அதிகம் கூட்டம் கூட்டக் கூடாது' என முதல்வர் கட்டளைபோடுறார். என்னத்த சொல்ல!' என்று தன்பங்குக்குப் புலம்பி இருக்கிறார். ஆனால், ஓ.பி.எஸ்ஸோடுகூட தம்பிதுரையை, பிரசார வாகனத்தில் ஏற அமைச்சர் தரப்பு அனுமதிக்கவில்லை. ஓ.பி.எஸ்ஸோடு எம்.ஆர்.விஜயபாஸ்கர்தான் பிரசார வாகனத்தில் இருந்தார். இதற்கிடையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தொகுதியில் தலைகாட்டும் தம்பிதுரை குறித்த தகவலை மறுபடியும் முதல்வரிடம் பாஸ் செய்ய, தம்பிதுரையை அழைத்து வறுத்து எடுத்துவிட்டாராம் முதல்வர். இதனால், கரூரைவிட்டு கிருஷ்ணகிரிக்கு பேக்கப் ஆகிவிட்டார் தம்பிதுரை. எட்டு அமைச்சர்கள், தமிழகம் முழுக்க உள்ள நிர்வாகிகள் என எல்லோரும் கரூரில் முகாமிட்டிருக்கிறார்கள். ஆனால், நான்கு முறை எம்.பி-யாக இருந்த தம்பிதுரை, கரூரில் பிரசாரம் செய்யவில்லை. சொந்த ஊருக்கு நிரந்தரமாகப் பெட்டி, படுக்கையைக் கட்ட முடிவெடுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். அரவக்குறிச்சியில் தேர்தல் ஏற்பாடுகள் தாம்தூம் என நடக்க, தம்பிதுரையோ கோயில் கோயிலாகச் செல்ல ஆரம்பித்துவிட்டார். கரூர் அரசியலில் தம்பிதுரைக்கு, எண்டுகார்டு விழுந்துவிட்டது" என்றார்கள் சோகமாக.

இதுசம்பந்தமாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் பேச முயன்றோம். முடியவில்லை. அவர் சார்பில் பேசிய அவரது ஆதரவாளர்கள் சிலர், ``அண்ணன்மீது நீங்கள் வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் வடிகட்டிய பொய். அண்ணன் பழசை மறக்காதவர். சாதாரண ஒன்றியச் செயலாளராக இருந்தவரை, மாவட்டச் செயலாளர், அமைச்சர் என்று உயர்த்தி அழகுபார்த்தவர், தம்பிதுரை. அந்த நன்றியை இப்போதும் நெஞ்சில் தாங்கிக்கொண்டிருக்கிறார் அமைச்சர். `தம்பிதுரையைப் பிரசாரத்துக்கு வரவேண்டாம்' என்று முதல்வர் சொன்னதாகச் சொல்வது பொய்யான தகவல். தம்பிதுரையேதான், `என்னால் செந்தில்நாதன் வெற்றிக்கு எந்தக் குந்தகமும் வந்துவிடக் கூடாது'னு வரவில்லை. மற்றபடி, கரூர் அரசியலில் என்றைக்கும் தம்பிதுரைக்குதான் முதல் உரிமை" என்றார்கள்.

கரூர் தொகுதி, தம்பிதுரை கையிலா என்பது மே 23-ம் தேதி தெரிந்துவிடும்.

Vikatan