Published:Updated:

ஆந்திரத்தில் ஜெகனுக்கு `ஜெயம்’! சரிந்தார் சந்திரபாபு நாயுடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆந்திரத்தில் ஜெகனுக்கு `ஜெயம்’! சரிந்தார் சந்திரபாபு நாயுடு
ஆந்திரத்தில் ஜெகனுக்கு `ஜெயம்’! சரிந்தார் சந்திரபாபு நாயுடு

ராஜசேகர ரெட்டியிடம், எப்போதுமே அறிவுஜீவித்தனம் இருக்காது. எதையுமே எளிமையாக மக்களின் பார்வையில் இருந்தே பார்ப்பார். அதே பார்வை, ஜெகனிடமும் தொடர்கிறது. பாதயாத்திரையிலும் தந்தையை அநாயசமாக விஞ்சியிருக்கிறார் தனயன். கிட்டத்தட்ட, 4,000 கிலோமீட்டர் கால்முட்டுகள் தேய நடந்து கட்சியை அரியணை ஏற்றியிருக்கிறார், ஜெகன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திர்பார்த்ததுபோலவே, ஜெகனுக்கு `ஜே’ போட்டிருக்கிறது, ஆந்திரப் பிரதேசம். சித்தூர் முதல் ஸ்ரீகாகுலம்வரை `ஜெகன் அலை’ சுழன்றடித்திருக்கிறது. இருக்கும் 25 நாடாளுமன்றத் தொகுதிகளில், 22 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். சட்டசபைத் தேர்தலிலும், ஜெகன் காட்டு காட்டென்று காட்டியிருக்கிறார். பிற்பகல் முடிவுகளின்படி, 150 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். அங்கே, இருப்பதே 175 தொகுதிகள்தான். அப்படியென்றால், எவ்வளவு பெரிய வெற்றி என்று கணக்குப் போட்டுக்கொள்ளவும். ஆந்திரத்தின் அனுபவ அரசியல்வாதி சந்திரபாபு நாயுடு, வரலாறு காணாத சரிவைச் சந்தித்திருக்கிறார். ராஜசேகர ரெட்டியிடம்கூட இப்படி வீழ்ந்ததில்லை, நாயுடு. அதே பிற்பகல் நிலவரப்படி, அவரது தெலுங்கு தேசம், 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கிறது.

ஆந்திரத்தில் ஜெகனுக்கு `ஜெயம்’! சரிந்தார் சந்திரபாபு நாயுடு

சட்டசபைத் தேர்தலில் அதைவிடவும் மோசம். மொத்தம் 24 தொகுதிகளில் மட்டுமே தெலுங்குதேசம் முன்னிலை வகித்திருக்கிறது. அதுவும், குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடுவே வெற்றிக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் (30,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை). ஆனால், ஜெகன்மோகன் தனது புலிவெண்டுலா தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இப்போதே, முதலைச்சர் பதவியேற்பு விழாவுக்கு தேதியும் குறித்துவிட்டார். வரும், 30-ம் தேதி பதவியேற்கிறாராம்.

ஜெகன், சாகசம் நிகழ்த்தியிருக்கிறார். தெலுங்கு தேசத்தின் கோட்டையான ராயலசீமாவிலேயே தெறிக்க விட்டிருக்கிறாரென்றால், சாதாரணம் இல்லை. கடலோர மாவட்டங்களையும் விட்டுவைக்கவில்லை, அவர். அங்கேயும் கலக்கியிருக்கிறார். சும்மா சொல்லிவிட முடியாது... இந்தியாவிலேயே, ஜெகன் எதிர்த்த அளவுக்கு எந்த எதிர்க்கட்சித் தலைவரேனும் ஓர் ஆளுங்கட்சியை எதிர்த்திருப்பார்களா தெரியவில்லை. சந்திரபாபு ஆட்சியின் ஊழல்களையும், வாரிசு அரசியல் அட்டூழியங்களையும், அமராவதி கட்டுமானத்தின் அபத்தங்களையும், நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் கெடுதல்களையும் எதிர்த்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார் ஜெகன். புள்ளிவிவரப்புலி சந்திரபாபுவுக்கே, நிறைய நேரங்களில் நெற்றி வியர்த்தது. அதுவும், சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் ஜெகன் போட்ட போடு, பெரிய போடு. இதோ இப்போது, முடிவுகளுக்குப் பிறகுகூட, `ஆந்திரத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வாங்கித் தருவேன்’ என்றே முதல் சொல்லெடுத்திருக்கிறார். ஜெகன், மோடிக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறார்!

ஆந்திரத்தில் ஜெகனுக்கு `ஜெயம்’! சரிந்தார் சந்திரபாபு நாயுடு

ராஜசேகர ரெட்டியிடம், எப்போதுமே அறிவுஜீவித்தனம் இருக்காது. எதையுமே எளிமையாக மக்களின் பார்வையில் இருந்தே பார்ப்பார். அதே பார்வை, ஜெகனிடமும் தொடர்கிறது. பாதயாத்திரையிலும் தந்தையை அநாயசமாக விஞ்சியிருக்கிறார் தனயன். கிட்டத்தட்ட, 4,000 கிலோமீட்டர் கால்முட்டுகள் தேய நடந்து கட்சியை அரியணை ஏற்றியிருக்கிறார், ஜெகன். அதுவும் போக, தாய்க்குலங்களின் ஆதரவும் ஜெகனுக்குப் பெரியளவில் கைகொடுத்திருக்கிறது. இது ஆச்சர்யமில்லை! ஆரம்பத்திலிருந்தே, ராஜசேகர ரெட்டிக்குத்  தாய்க்குலங்களின் ஆதரவு அதிகமாக உண்டு. அவர் இறந்ததும், அது அப்படியே இரட்டிப்பானது. அதை, அழகாக அறுவடை செய்திருக்கிறார் ஜெகன்.

2011-ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து பிரிந்து, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை ஜெகன் ஆரம்பித்தபோது, அவரைச் சட்டையே செய்யவில்லை சந்திரபாபு. `ஜெகன் பெரிய தலைவராக உருவெடுப்பார்’ என்று, கட்சிக்காரர்கள் எச்சரித்தபோதெல்லாம், `அவன் அப்பனையே பார்த்தவன் நான்’ என்று சவடால் பேசினார். ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் `இரண்டாம் ராஜண்ணா’வாக சந்திரபாபுவை சூழ்ந்தார், ஜெகன். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில், 44 சதவிகித வாக்குகளை வாங்கி, இன்னும் அதிகமாகப் பயம் காட்டினார். அப்போதே, சந்திரபாபு சுதாரித்திருக்க வேண்டும். ஆனால், வீண்சவடால் பேசிக்கொண்டும், பிரதமர் ஆசையில் அலைந்துகொண்டும், அரியணையைக் கோட்டைவிட்டுவிட்டார். சந்தேகமே இல்லை. ஜெகனை ஆரம்பத்திலிருந்தே குறைத்து மதிப்பிட்டார், அவர். அதற்கான பலனை அவர் அனுபவித்துதான் ஆகவேண்டும். 

ஆந்திரத்தில் ஜெகனுக்கு `ஜெயம்’! சரிந்தார் சந்திரபாபு நாயுடு

பவன் கல்யாணின் ஜனசேனா, சொற்பத் தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கிறது. கடலோர மாவட்டங்களில் மட்டும் கணிசமான வாக்குகளைப் பெற்று வருகிறார்கள். ஆனால், வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு, அவர்களின் வாக்குகள் இல்லை. `வாரிசு அரசியலையும் ஊழல் ஆட்சியையும் ஒழிக்க எனக்கு வாக்களியுங்கள்’ என்று வாக்கு கேட்டார், பவன். ஆனால், மீண்டும் ஒரு நடிகரை அரியணையில் அமரவைக்க மறுத்துவிட்டார்கள், ஆந்திர மக்கள். `காபு’ மக்கள் கவிழ்த்ததையும் கல்யாண் எதிர்பார்த்திருக்க மாட்டார். களத்தில் தொடர்ந்து நின்றால், அவருக்கு எதிர்காலத்தில் வெற்றிகள் கைகூடலாம். ஆனால், நிற்பாரா என்பது சந்தேகமே. `அண்ணன் வழியே என் வழி’ என்று, மீண்டும் சினிமாவுக்கே திரும்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்படி வந்தால், `அத்தாரிண்டிக்கி தாரேதி’யின் அடுத்த பாகத்தை எடுங்கள் பவன். காத்திருக்கிறோம்!

ஆக, ஒரு பழைய அரசியல்வாதி. ஒரு புதிய அரசியல்வாதி... இருவரையும் வீழ்த்தி ஆந்திரத்தின் தனிப்பெரும் தலைவர் ஆகியிருக்கிறார், ஜெகன். 

மகனுக்குச் சுத்திப்போடுங்கள் விஜயம்மா!

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு