Published:Updated:

மானாமதுரைத் தொகுதி: அ.தி.மு.க வெற்றிக்காக அமைச்சரும் மா.செ-வும் செய்தது என்ன?

மானாமதுரைத் தொகுதி: அ.தி.மு.க வெற்றிக்காக அமைச்சரும் மா.செ-வும் செய்தது என்ன?
மானாமதுரைத் தொகுதி: அ.தி.மு.க வெற்றிக்காக அமைச்சரும் மா.செ-வும் செய்தது என்ன?

இரவு 8 மணிக்கு மேல் இளையான்குடி பகுதியில் உள்ள பி.அய்யம்பட்டி வாக்கு மையத்தில் இருந்த வாக்கு எந்திரம் நாடாளுமன்றம் வாக்கு எந்திரங்கள் இருக்கும் ஸ்டாங்ரூம்க்குத் தவறுதலாக மாறிப்போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு தி.மு.க வேட்பாளர் இலக்கியதாசன், பவர் ஏஜென்ட் சேங்கைமாறன், வழக்கறிஞர் போன்றவர்கள் எல்லாம் ஆட்சேபனை தெரிவித்தார்கள்.

நடந்து முடிந்த 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில், மானாமதுரை தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது அ.தி.மு.க, தி.மு.க என இரண்டு கட்சிகளும் மிகவும் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் இழுபறி நீடித்துக்கொண்டே இருந்தது. முதல் சுற்றில் எண்ணப்பட்ட வாக்குகள் திருப்புவனம் ஒன்றியம். இந்த ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள்தாம் தி.மு.க வேட்பாளர் இலக்கியதாசனும் அ.ம.மு.க வேட்பாளர் மாரியப்பன் கென்னடியும். சொந்த பகுதியாக இருந்தாலும் தி.மு.க வேட்பாளருக்கு முன்னிலை என்பது ஏற்றம் இறக்கமாகவே இருந்தது. மானாமதுரை, இளையான்குடி பகுதி வாக்குகளை எண்ணியபோது அ.தி.மு.க கலங்கிப்போனது. காரணம், அ.தி.மு.க வேட்பாளர் இளையான்குடி ஒன்றியத்தைச் சேர்ந்தவர். அந்தப் பகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் என்பதால் அ.தி.மு.க வேட்பாளரைவிட தி.மு.க வேட்பாளர் 18-வது சுற்றில் 3,000 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலையில் இருந்த தி.மு.க வேட்பாளரை வீழ்த்தி, கடைசி நேரத்தில் அ.தி.மு.க வேட்பாளர் நாகராஜன் 8,153 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். இந்த வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு நள்ளிரவு 1 மணியைத் தாண்டியது. அதுவரைக்கும் ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது பிரச்னைகள் கிளம்பின. தேர்தல் அதிகாரிகள் முதல் போலீஸ் அதிகாரிகள் வரைக்கும் டென்ஷனின் உச்சக்கட்டத்தில் இருந்தார்கள்.

மானாமதுரைத் தொகுதி: அ.தி.மு.க வெற்றிக்காக அமைச்சரும் மா.செ-வும் செய்தது என்ன?

மானாமதுரை தொகுதியை அ.தி.மு.க கைப்பற்ற வேண்டும் என்பது முதல்வர் எடப்பாடியின் உத்தரவு. இதற்காகவே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இங்கே முகாமிட்டு கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டார். அதன் பிறகு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் போன்றவர்கள் தொகுதியைச் சுற்றி வலம் வந்துகொண்டே இருந்தார்கள். உளவுத்துறை ரிப்போர்ட்; ஊடகங்களின் சர்வே இது எதிலும் அ.தி.மு.க இந்தத் தொகுதியில் கரைசேருவதற்கு வாய்ப்பு இல்லை என்று சொன்னார்கள். அதன் பிறகுதான் மக்களைக் கவர் பண்ண வேண்டும் என்பதற்காகத் தொகுதியில் வாக்காளர்களுக்குத் தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மானாமதுரை (தனி) தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் தனியாக எண்ணப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே இலக்கியதாசனுக்கும் நாகராஜனுக்கும் இடையேதான் இழுபறி நீடித்து வந்தது.

இரவு 8 மணிக்கு மேல் இளையான்குடி பகுதியில் உள்ள பி.அய்யம்பட்டி வாக்கு மையத்தில் இருந்த வாக்கு எந்திரம் நாடாளுமன்றம் வாக்கு எந்திரங்கள் இருக்கும் ஸ்டாங்ரூம்க்குத் தவறுதலாக மாறிப்போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு தி.மு.க வேட்பாளர் இலக்கியதாசன், பவர் ஏஜென்ட் சேங்கைமாறன், வழக்கறிஞர் போன்றவர்கள் எல்லாம் ஆட்சேபனை தெரிவித்தார்கள். அதன் பிறகு, விவிபேட் பாக்ஸை எடுத்து வந்து எண்ணச் சொன்னார்கள். அந்த பாக்ஸைத் திறந்து வாக்குகளை எண்ணியபோது 301 வாக்குகள் இருக்க வேண்டிய இடத்தில் 540 வாக்குகளுக்கான ரசீது இருந்ததால் மீண்டும் கூச்சல், குழப்பம், பதற்றம் நீடித்தது. உடனே அ.ம.மு.க வழக்கறிஞர் குருமுருகானந்தம் இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்திருக்கிறது. எனவே, அந்த வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்திய பிறகுதான் தேர்தல் முடிவு அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலரான திருவாசகத்திடம் புகார் கொடுத்தார். தி.மு.க-வும் அதே புகாரைக் கொடுத்தது. இந்தத் தகவல் தி.மு.க தலைமைக்கழகம் வரைக்கும் சென்றது. அங்கிருந்து தலைமைத் தேர்தல் அதிகாரிக்குப் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் அறிந்ததும் மாவட்டத் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஜெயகாந்தன் வந்து பிரச்னைக்குரிய எந்திரத்தைப் பார்வையிட்டார். அதன் பிறகுதான் தெரிந்தது விவிபேட் எந்திரம் சீரியல் எண் மாறியிருக்கிறது என்று. அதன் பிறகு சரியான எண் உள்ள எந்திரம் கொண்டுவந்து அதில் இருக்கும் ஒப்புகைச் சீட்டை எண்ணியபோது சரியாக இருந்தது.

மானாமதுரைத் தொகுதி: அ.தி.மு.க வெற்றிக்காக அமைச்சரும் மா.செ-வும் செய்தது என்ன?

அதன் பிறகு, இன்னொரு பிரச்னையை எழுப்பினார் தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன். " ‘மானாமதுரை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் எவ்வளவு’ என்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டோம். அதற்கு அவரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. வாக்குப்பதிவு அன்று தேர்தல் அதிகாரி கொடுத்த புள்ளிவிவரம்படி 2,01,144 வாக்குகள் பதிவானதாகச் சொல்லப்படுகிறது. அடுத்ததாக 1,97,073 வாக்குகள் பதிவானதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 1,96,763 வாக்குகள் எண்ணப்பட்டிருக்கிறது. இதேபோக தபால் ஓட்டுகள் 1,853 சேர்த்தால் மொத்த வாக்குகள் கூடுதலாக வருகிறது. மானாமதுரைத் தொகுதியைப் பொறுத்தவரையில் மொத்த வாக்குகளும் எண்ணப்பட்ட வாக்குகளும் சரியாக ஒத்துப்போகவில்லை. இதில் ஏதோ குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதற்குப் பதில் சொல்லுங்கள் என்று கேட்டோம்.

மானாமதுரைத் தொகுதி: அ.தி.மு.க வெற்றிக்காக அமைச்சரும் மா.செ-வும் செய்தது என்ன?

தேர்தல் நடத்தும் அலுவலரும் தேர்தல் ஆணையத்துக்கு அந்தப் புகாரை அனுப்பினார். தேர்தல் முடிவுகள் சொல்லக் காலதாமதம் ஏற்படுவதால், அ.தி.மு.க-வினர் கடுகடுத்தார்கள். முடிவை அறிவித்துவிடுங்கள். எங்கள் பொறுமையைச் சோதித்துப் பார்க்காதீர்கள்’ என்றெல்லாம் தேர்தல் அதிகாரியான திருவாசகத்திடம் பேசினார்கள். `தேர்தல் ஆணையத்திலிருந்து பதில் வரும்வரைக்கும் முடிவு அறிவிக்க முடியாது’ என்று சொல்லிவிட்டார், தேர்தல் நடத்தும் அதிகாரி. இதற்கிடையில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாஸ்கரன் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், ஆவின் சேர்மன் அசோகன் போன்றவர்கள் உள்ளே வந்ததும், அ.தி.மு.க வேட்பாளர் நாகராஜன் வெற்றிபெற்றதாக மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலரும் அறிவித்து அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நள்ளிரவு 1.30 மணிக்கு வழங்கினர். உடனே, `நீங்கள் அறிவிக்கும் முடிவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’ என்று சொல்லி நாங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தைவிட்டு வெளியே வந்துவிட்டோம்” என்றார் சேங்கைமாறன்.

"மானாமதுரை தொகுதியில் தி.மு.க அல்லது அ.ம.மு.க வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் சென்றது. அதன் பிறகுதான் முதல்வர் எடப்பாடி, அ.ம.மு.க வேட்பாளர் மாரியப்பன் கென்னடி, எந்த வகையிலும் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்று அமைச்சர்களுக்கும் மாவட்டச் செயலாளருக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஒருவேளை, இந்தத் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெறவில்லையெனில், ``உங்கள் பதவிகளை நீங்களே ராஜினாமா செய்துவிடுங்கள்” என்று சொன்னாராம் முதல்வர் எடப்பாடி. இதை, மானப்பிரச்னையாக எடுத்துக்கொண்டு அமைச்சரும் மாவட்டச் செயலாளரும் தொகுதிக்குள் பணத்தைத் தண்ணியாகச் செலவு செய்து கஷ்டப்பட்டுத் தொகுதியை மீட்டெடுத்திருக்கிறார்கள்!" என்று சொல்கிறார்கள் அங்குள்ள அரசியல் ஆர்வலர்கள்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு