Published:Updated:

மோடி அரசு 2.0... அடுத்த ஐந்தாண்டுகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்!?

மோடி அரசு 2.0... அடுத்த ஐந்தாண்டுகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்!?
மோடி அரசு 2.0... அடுத்த ஐந்தாண்டுகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்!?

ஆற்றல் குறைபாடு, தண்ணீர் தட்டுப்பாடு, விவசாயம், வெள்ளம், வறட்சி என்று பல்வேறு விதத்தில் இந்திய சுற்றுச்சூழலை அழிக்கக் காத்திருக்கும் காலநிலை அவசரம் பதவி ஏற்கவுள்ள மோடியின் ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக நிற்கப்போகிறது.

வ்வொரு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் ஆட்சிப் பொறுப்பேற்கும் அரசாங்கம் சந்திக்கக் கூடிய சவால்கள் ஏராளம் இருக்கின்றன. வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டையும் சரி சமமாகக் கையாள வேண்டும். இது எல்லா அரசுகளுக்குமே சவாலான ஒன்றுதான். நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், மக்களின் மிக முக்கியத் தேவையான சூழலியல் பாதுகாப்பையும் சமமாகச் செயல்படுத்துவதில் பெரும்பாலான கட்சிகள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி இதுவரையிலான கடந்த ஐந்தாண்டுகளிலும், எதிர்வரும் ஐந்தாண்டு காலத்திலும், இத்தகைய சவால்கள் இல்லாமல் இல்லை. அந்தச் சவாலை அவர் சரிசமமாகச் சமாளிக்கவில்லை என்பதே உண்மை. காலநிலை அவசரம் உண்டாக்கியிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் எதிர்கால சவால்கள் அவருக்கு இன்னமும் கூடுதலாக உள்ளது என்றே சொல்ல வேண்டும். வறட்சி, புயல், சூறாவளி, வெள்ளம் போன்ற பேரழிவுகள் அவ்வப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் உருவான ஃபானி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சேதங்களையும் உதாரணமாகக் கொள்ளலாம். ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்தப் புயலால் சுமார் 12,000 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசு 2.0... அடுத்த ஐந்தாண்டுகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்!?

இந்தியாவில் சுமார் ஆறு கோடி மக்கள் இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்கிறார்கள். கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நகரங்களான மும்பை, கொல்கத்தா, சென்னை போன்றவை மிகப்பெரிய கடல்மட்ட உயர்வையும் வெள்ளம் போன்ற பிரச்னைகளையும் அவ்வப்போது சந்திக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகளவு ஏழைகள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் வாழ்கிறார்கள். எதிர்வரும் காலங்களில் வறட்சியும், வெப்பமும் அதிகரிக்கக்கூடும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். அதுபோன்ற சூழ்நிலையில் அத்தகைய பாதிப்புகள், இந்தியாவின் விவசாய உற்பத்தியை வெகுவாகப் பாதிக்கும் என்று தெரிய வருகிறது. அதேசமயம் தண்ணீர் தட்டுப்பாடு, மனிதவள ஆற்றல் குறைவு போன்ற பல சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என்று தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.

ஆற்றல் குறைபாடு, தண்ணீர்த் தட்டுப்பாடு, விவசாயம், வெள்ளம், வறட்சி என்று பல்வேறுவிதங்களில் இந்தியச் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய இயற்கைப் பேரிடர்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் மோடியின் இப்போதைய ஆட்சிக்கும் உள்ளது. அண்டை நாடுகள் ஏற்கெனவே இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கிக் குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அதற்குக் காரணம், விவசாயம் நலிவடைவதும் வேலையில்லாத் திண்டாட்டமும் என்று சொல்லலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, விவசாய உற்பத்தியானது பத்து சதவிகிதம் அளவுக்கு அண்மைக்காலமாக குறைந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியாவில் காலநிலை மாற்றத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறது, காற்று மாசுபடுவதைத் தடுத்தல், ஆறுகள் சீரமைப்பு போன்ற பல சவால்கள் காத்திருக்கின்றன. அழிந்துகொண்டிருக்கும் நதிகள் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாத்து, மீட்கவேண்டிய பெரும் பொறுப்பு இந்த அரசுக்குக் காத்திருக்கிறது. அதேசமயம், நாட்டில் அதிகரித்துவரும் தொற்றுநோய்த் தாக்கங்களையும் கட்டுப்படுத்தி, அதுபோன்ற நோய்கள் ஏற்படும்போது அவற்றுக்குத் தீர்வுகாண வேண்டியதும் அவசியமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வளிமண்டலத்தில் மாறி மாறி நிகழ்கின்ற மாற்றங்கள், மக்கள் தொகை அதிகரிப்பு, சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்ற பிரச்னைகளும் நம் முன் உள்ளன. சுற்றுச்சூழல் அமைச்சகமும், அவரை வழிநடத்தும் பிரதமர் மோடியும் இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். 

மோடி அரசு 2.0... அடுத்த ஐந்தாண்டுகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்!?

மோடி அரசு கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்கொண்ட சவால்களில் ஒன்று வேலையில்லாத் திண்டாட்டம். தவிர, சர்வதேச அளவில் பத்து லட்சம் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலும் அவற்றில் பல உயிரினங்கள் இருக்கின்றன. உலக வெப்பமயமாதலைத் தடுக்க, வனப்பாதுகாப்பு மற்றும் உயிரினங்களை அழியாமல் பாதுகாத்து பராமரிப்பது அவசியம். இந்த விஷயங்களில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

வளர்ச்சிக்குத் தேவையான அஸ்திவாரமே இயற்கைப் பாதுகாப்புதான் என்பதை புதிய அரசு அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும். வளர்ச்சிக்குப் புதிய கோணத்தில் சூத்திரங்களை வகுக்க வேண்டும். இனி சூழலியல் பாதுகாப்பு, இயற்கைப் பேரிடர்களைப் பற்றிச் சிந்திக்காமல் அவர்களால் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவற்றைச் சிந்திப்பது சவால் நிறைந்ததாக இருக்கும். சூரிய சக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினால் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு, நாட்டின் பொருளாதாரமும் உயரும். நீர்நிலைகளைச் சரிசெய்வது, நகர்ப்புற, கிராமப்புற, கடலோரக் காடுகளை மீட்டுருவாக்கம் செய்வது போன்றவை மிக மிக முக்கியமானது. கடந்த முறை மோடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய கடலோர ஒழுங்குமுறை மண்டல சட்ட விதிகளை ரத்து செய்ய வேண்டும். 

மோடி அரசு 2.0... அடுத்த ஐந்தாண்டுகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்!?

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைப் போன்ற திட்டங்களை மீண்டும் கொண்டுவந்தால் கிராமப்புற வேலைவாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்தலாம். சூழலியல்ரீதியிலான வளர்ச்சியில் கவனம் செலுத்தினால் புதிய அரசு தன் முன்னால் இருக்கக்கூடிய சவால்களை பெருமளவுக்குச் சமாளிக்கமுடியும். எப்போதுமே பழைய ஆட்டத்தை ஓரங்கட்டிப் புதிய ஆட்டத்தைத் தொடங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது, தொழில்நுட்பங்கள்தான். அதிலும் கவனம் செலுத்த வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தைக் கூடுதல் உத்வேகத்துடன் வெற்றிகரமாக தொடர்ந்து செயல்படுத்துவதுடன், கங்கை நதி தூய்மைப்படுத்துதலை தொடர்ந்து மேற்கொள்வது, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றி, புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவருவது போன்ற மிக முக்கியமான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும்.  

மோடி அரசு 2.0... அடுத்த ஐந்தாண்டுகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்!?

தொழில்நுட்பரீதியாக ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதைவிட, சூழல்ரீதியாக ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவது மிகச் சிறப்பான திட்டமாக இருக்கும். புதிய அரசாங்கம் அதற்கான முயற்சிகளைச் செய்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் அடுத்தகட்டத்துக்குச் செல்லலாம். கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களைப் போலவே நகரங்களிலும் சுகாதாரம், ஆரோக்கியம், மரம் வளர்ப்பு, நகர்ப்புற நீர்நிலைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தகுந்தவாறு சீரமைப்பது போன்றவை அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். 
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் அது ஒரு பங்காகவே இருக்கிறது. இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுப்பதுடன், பல்வேறு முதன்மையான பணிகளை பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது இன்னிங்ஸ் அரசு எடுக்க வேண்டும். எடுக்கும் என்று நம்புவோம். இந்த அரசின் முன் இருக்கும் இதுபோன்ற சவால்களை வெற்றிகரமாகச் சமாளிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு