Published:Updated:

டெல்லியை ஜெயிக்கப்போகும் கில்லி யாரு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்
பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

விறுவிறு தேர்தல் ரிப்போர்ட்

பிரீமியம் ஸ்டோரி

தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற விருக்கும் சட்டமன்றத் தேர்தல், இப்போதே எதிர்பார்ப்பு சூட்டைக் கிளப்பிவருகிறது.

காரணம், 2015-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், வரலாற்றுச் சாதனையாக காங்கிரஸ், பா.ஜ.க என இரு பெரும்கட்சிகளையும் துடைத்தெறிந்துவிட்டு அரியணையில் அமர்ந்தது ‘ஆம் ஆத்மி’ கட்சி. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், 67 இடங்களைப் பிடித்தது இந்தக் கட்சி. இந்திய அரசியல் வரலாற்றிலேயே உண்மையான அதிசயத்தையும் அற்புதத்தையும் ஏற்படுத்திய இந்த நிகழ்வு, அரசியல் ஜாம்பவான்களான காங்கிரஸ் - பா.ஜ.க-வுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்தியது.

சமூக ஆர்வலரான அண்ணா ஹஜாரேவின் தலைமையில் நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ‘ஊழல் எதிர்ப்பு இயக்கம்’. இதன் செயற்பாட்டாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் களமாடிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் டெல்லி மக்களின் ரட்சகராகவே விஸ்வரூப மெடுத்தார்.

இதையடுத்து ‘ஆம் ஆத்மி’ என்ற பெயரில், 2012-ம் ஆண்டு கட்சி ஆரம்பித்து, அரசியலிலும் காலடி வைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். 2013-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி. பி.ஜே.பி 31 இடங்களை வென்று முதல் இடத்தைப் பிடித்தாலும், மெஜாரிட்டி இல்லாததால் ஆட்சி அமைக்க இயல வில்லை. அதனால் 8 உறுப்பினர்களை வைத்திருந்த காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி. முதல்வர் பதவியில் அமர்ந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால், உட்கட்சிப் பூசல் மற்றும் பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகளின் தொடர் குடைச்சல்கள் காரணமாக, 49 நாள்களிலேயே அவருடைய ஆட்சி முடிவுக்கு வந்தது. பிறகு, 2015-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கொடுத்த இமாலய வெற்றி, கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வர் ஆக்கியது.

ஜான் ஆரோக்கியசாமி
ஜான் ஆரோக்கியசாமி

முழுமையாக ஐந்து ஆண்டுக்கால ஆட்சிக்குப் பிறகு, இப்போது மீண்டும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் ஆம் ஆத்மி, ‘கெஜ்ரிவாலின் அருமையான ஆட்சி மீண்டும் அமைய உதவுங்கள்’ என்ற முழக்கத்தோடும் நம்பிக்கையோடும் களமாடி வருகிறது.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, ‘மோடி அலை’யில் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடிந்த பா.ஜ.க, தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ‘ஆம் ஆத்மி’யிடம் மண்ணைக் கவ்வியது மறக்க முடியாத அவமானம். 2015-ம் ஆண்டில் கோட்டைவிட்டதை 2020-ம் ஆண்டில் பிடித்தே தீருவது என்ற கங்கணத்துடன் ‘டெல்லி அவலங்களுக்கு இப்போதே முடிவுகட்ட வேண்டும்’ என்று பா.ஜ.க ஆவேசமாக முழங்கி வருகிறது.

இவற்றுக்கிடையே, 15 ஆண்டுக்காலம் தொடர்ச்சியாக டெல்லியைத் தக்கவைத்திருந்த காங்கிரஸ் கட்சி, 2013-ம் ஆண்டில் ஆம் ஆத்மி யிடம் பறிகொடுத்ததை இப்போது மீட்டுவிடும் முடிவோடு, ‘காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்’ என்று முட்டிமோதுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெல்லி தேர்தல் களத்தை உன்னிப்பாக கவனித்துவரும் ‘ஜே.பி.ஜி பேக்’ அரசியல் வியூக நிறுவனத்தின் வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியிடம் பேசியபோது, ‘‘மக்கள்நலன் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கல்வி சார்ந்த கட்டமைப்புகள்தான் ஆம் ஆத்மி கட்சிக்கு பலம். ‘மத்திய அரசுக்குப் பணியாமல் மக்கள் சேவையாற்று வேன்’ என்று கெஜ்ரிவால் உறுதியளித்ததால், கடந்த காலங் களில் சிறுபான்மை மக்கள் முழுமையாக அவருக்கு ஆதரவளித்தனர். அடுத்ததாக ‘முதல்வர் வேட்பாளர் கெஜ்ரிவால்’ என்று இந்தக் கட்சி மட்டுமே அறிவித்திருக்கிறது. மற்ற இரு கட்சிகளும் தங்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்னமும் தெளிவுபடுத்தாதது ஆம் ஆத்மிக்கு கூடுதல் பலம்.

பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்
பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

அதேசமயம், டெல்லியைப் பொறுத்தவரையில் 2015-ம் ஆண்டு நிலவரம் இப்போது இல்லை. 2017-ம் ஆண்டில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தல், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் என, அடுத்தடுத்து தோல்வியைத்தான் சந்தித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. மதச்சார்பின்மையைப் பேசிவந்த கெஜ்ரிவால், ‘பா.ஜ.க-வை விமர்சிப்பதால் இந்துக்கள் தன்னை எதிர்க்கிறார்கள்’ என்பதை அறிந்து, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை சட்டத்திருத்தம் உள்ளிட்ட விஷயங்களில் மௌனம் காத்துவருவதும் இஸ்லாமியர்களிடையே வெறுப்பைச் சம்பாதித்திருக்கிறது. ரேஷன்கார்டு ஊழல் சமீபத்தில் அம்பலப்பட்டிருப்பதும் ஆம் ஆத்மிக்கு பெரும்சிக்கலை ஏற்படுத்தும். அதேசமயம், இலவச மின்சார அளவை 200 யூனிட்டிலிருந்து 400 யூனிட்டாக உயர்த்தி ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருப்பது, நடுத்தர மக்களி டையே பெரும்வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளையும் ஒட்டு மொத்தமாகக் கைப்பற்றியதோடு, ஆளுங்கட்சியான ஆம் ஆத்மியை 3-வது இடத்துக்குத் தள்ளியது பெரும்உற்சாகத்தைத் தந்திருக்கிறது. சரிந்துவிட்ட கெஜ்ரிவாலின் செல்வாக்கு, இந்தக் கட்சிக்கு கூடுதல் உற்சாகத்தைத் தந்திருக்கிறது. தேர்தல் பிரசார உத்தியில், தேசியத்தை முன்னிறுத்தும் தெருமுனைக் கூட்டங்கள் போன்ற உத்தரப்பிரதேச மாடல் பாணியை கையிலெடுத்து அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துவருகிறார்கள். தலைமையை முன்னிறுத்தி நடைபெறும் மாநில தேர்தலில், ‘முதல்வர் வேட்பாளர் யார்’ என்பதை அறிவிக்காமல் இருப்பதும் உட்கட்சிப் பூசலும் பா.ஜ.க-வுக்கு பலவீனம்தான்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 2-வது இடத்தைப் பிடித்திருந்தாலும், சட்டமன்றத் தேர்தலில் அந்த இடத்தைத் தக்கவைக்கக்கூட காங்கிரஸ் கட்சி போராடுவதாகத் தெரியவில்லை. ‘ஆம் ஆத்மி வெற்றி பெற்றால்கூட பரவாயில்லை; பா.ஜ.க வெற்றி பெற்றுவிடக் கூடாது’ என்று நினைப்பதாகத்தான் அந்தக் கட்சியின் செயல்பாடுகள் உள்ளன’’ என்றார்.

வாக்கு எண்ணிக்கை நாளான பிப்ரவரி 11-ம் தேதி தெரிந்துவிடும்... டெல்லியின் கில்லி யார் என்று!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு