Published:Updated:

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தொகுதிகள்: 2021 சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

பரிதா , அமலு
பரிதா , அமலு

வக்கீல் அகமது கணிசமான இஸ்லாமியர்கள் ஓட்டுகளைப் பிரித்தாலும், கூட்டணி பலத்தால் முந்துகிறார் முகமது நயீம்.

வாணியம்பாடி

அ.தி.மு.க-வின் செந்தில்குமார், தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முகமது நயீம், அ.ம.மு.க கூட்டணியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் (ஒவைசி) கட்சியின் வக்கீல் அகமது போட்டியிடுகிறார்கள்.
திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தொகுதிகள்: 2021 சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

சிறந்த கல்வியாளர், சமூக ஆர்வலர் என்கிற அடையாளம் முகமது நயீமுக்கு பலம். தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் வன்னியர் சமூக வாக்குகள் அதே சமூகத்தைச் சேர்ந்த செந்தில்குமாருக்கு ப்ளஸ். ஆனால், இஸ்லாமியர்கள் வாக்குகள் கிடைக்காது என்பது அவருக்கு மைனஸ். வக்கீல் அகமது கணிசமான இஸ்லாமியர்கள் ஓட்டுகளைப் பிரித்தாலும், கூட்டணி பலத்தால் முந்துகிறார் முகமது நயீம்.

ஆம்பூர்

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தொகுதிகள்: 2021 சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் நஜர் முகமது, தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ வில்வநாதன் மோதுகிறார்கள். நஜர் முகமதுவுக்கு தொகுதியில் பெரிதாக செல்வாக்கு இல்லை. ஆளுங்கட்சியில் ஆக்டிவ்வாகச் செயல்படும் நபர்கள் இல்லாததும் அவருக்கு மைனஸ். 2019 இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற வில்வநாதன் குடிநீர்ப் பிரச்னையை ஓரளவுக்குச் சரிசெய்தது, ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலப் பிரச்னைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பது போன்ற செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் நல்ல பெயரைச் சம்பாதித்திருக்கிறார். அதனால், ஓரளவுக்கு கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் ஆம்பூரைத் தக்கவைக்கிறார் வில்வநாதன்.

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தொகுதிகள்: 2021 சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் அமைச்சர் கே.சி.வீரமணி, தி.மு.க-வில் தேவராஜி போட்டியிடுகிறார்கள். வாணியம்பாடி தொகுதியில் சீட் கேட்டிருந்த தேவராஜிக்கு வம்படியாக இங்கு சீட் கொடுத்திருப்பதால் அவர் அப்செட்டில் இருக்கிறார். இரண்டு முறை இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கும் வீரமணிக்கு வலுவான செல்வாக்கு இருக்கிறது. அமைச்சரின் பணபலம், அதிகார பலம், சொந்தக் கட்சிக்குள்ளேயே தேவராஜிக்கு எதிரான உள்ளடி வேலைகள் ஆகியவை வீரமணிக்கு ப்ளஸ். தொகுதியைத் தக்கவைக்கிறார் வீரமணி.

திருப்பத்தூர்

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தொகுதிகள்: 2021 சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வில் டி.கே.ராஜாவும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ நல்லதம்பியும் போட்டியிடுகிறார்கள். தி.மு.க-வில் நிலவிவந்த உட்கட்சிப்பூசலைக் கட்சி மேலிடம் தீர்த்துவைத்திருப்பதால் உற்சாகமாக வலம்வருகிறார் நல்லதம்பி. டி.கே.ராஜா ஏற்கெனவே இந்தத் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தபோது தொகுதிக்கு அவர் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்கிற அதிருப்தி உள்ளது. இவையெல்லாம் ராஜாவுக்கு மைனஸ். தவிர, திருப்பத்தூரில் தி.மு.க வாக்குவங்கியும் வலுவாக இருப்பதால் ரேஸில் முந்துகிறார் நல்லதம்பி.

சோளிங்கர்

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தொகுதிகள்: 2021 சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

பா.ம.க-வின் அ.ம.கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோர் மோதுகிறார்கள். அ.ம.மு.க-வின் என்.ஜி.பார்த்திபனும், காங்கிரஸின் முனிரத்தினமும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தச் சமூகத்தினரின் வாக்குகள் பிரியும் நிலை இருக்கிறது. தொகுதியில் கணிசமாக இருக்கும் வன்னியர் சமூகத்தினரின் வாக்குகள், கிருஷ்ணனுக்கு ப்ளஸ். பா.ம.க-வின் செல்வாக்கு, அ.தி.மு.க கூட்டணி பலம், ரஜினி மக்கள் மன்றத்தின் மறைமுக ஆதரவு ஆகியவற்றால், கிருஷ்ணன் முந்துகிறார்.

ராணிப்பேட்டை

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தொகுதிகள்: 2021 சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.காந்தி தி.மு.க சார்பில் ஆறாவது முறையாகக் களம்காண்கிறார். காந்தியின் தொழில்முறை நண்பராக இருந்த எஸ்.எம்.சுகுமார் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். இருவருக்குமான நட்பு தற்போது முறிந்துவிட்டதால் ஈகோ யுத்தம் நடக்கிறது. யாரையும் அரவணைத்துப்போகாத சுபாவம், காந்திக்கு மைனஸ். இருவருமே பணபலத்தில் சமமாக இருந்தாலும், அரசியல் செல்வாக்கு இல்லாதது சுகுமாருக்கு மைனஸ். தொகுதியில் இருக்கும் கணிசமான இஸ்லாமியர், பட்டியல் சமூகத்தினர் வாக்குகள் சாதகமாக இருப்பதால், ராணிப்பேட்டையைத் தக்கவைக்கிறார் காந்தி.

அரக்கோணம் (தனி)

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தொகுதிகள்: 2021 சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சு.ரவி, நான்காவது முறையாகக் களமிறங்குகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கௌதம சன்னா அவரை எதிர்க்கிறார். கௌதம சன்னா வெளியூரைச் சேர்ந்தவர் என்பதால், தொகுதியில் செல்வாக்கு இல்லாதது மைனஸ். ரவிக்குத் தொகுதிக்குள் நல்ல செல்வாக்கு இருப்பதால், அதிக வாக்கு வித்தியாசத்தில் தொகுதியைத் தக்கவைக்கிறார்.

ஆற்காடு

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தொகுதிகள்: 2021 சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ ஈஸ்வரப்பனும், பா.ம.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ இளவழகனும் போட்டியிடுகிறார்கள். தொகுதியில் ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக இருந்தபோது செயல்பாடுகள் சரியில்லாமல் இருந்ததால் செல்வாக்கு இழந்திருப்பது, இளவழகனுக்கு பெரிய மைனஸ். சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்களைக் கொண்டுவராததால் ஈஸ்வரப்பன் மீது தொகுதிக்குள் நிலவும் அதிருப்தி அவருக்கு மைனஸாக இருந்தாலும், தி.மு.க-வின் கட்டமைப்பு ஈஸ்வரப்பனுக்குச் சாதகமாக இருப்பதால், தொகுதியைத் தக்கவைக்கிறார்.

காட்பாடி

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தொகுதிகள்: 2021 சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

தி.மு.க பொதுச்செயலாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான துரைமுருகன் தி.மு.க சார்பில் இந்தத் தொகுதியில் 10-வது முறையாகப் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் களம்காணும் வி.ராமு காட்பாடி வாக்காளர்களுக்குப் பரிச்சயம் இல்லாதவர் என்பதுடன், அ.தி.மு.க-வினரின் உள்ளடி வேலைகளும் அவருக்கு மைனஸாக இருக்கிறது. துரைமுருகனை மக்கள் எளிதில் அணுக முடியாது என்ற நிலை இருந்தாலும், ராமுவின் பலவீனத்தால் உதயசூரியன் முந்துகிறது.

வேலூர்

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தொகுதிகள்: 2021 சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்திகேயன் தி.மு.க-விலும், எஸ்.ஆர்.கே.அப்பு அ.தி.மு.க-விலும் போட்டியிடுகிறார்கள். அப்புவின் பிரசாரத்துக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், உள்ளூர் அ.தி.மு.க-வினர் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியும், சீட் கிடைக்காத நிர்வாகிகளின் உள்ளடி வேலைகளும் அவருக்கு மைனஸ். வேலூர் மாநகரத்தின் முதல் மேயர் என்ற செல்வாக்கும், கூட்டணிக் கட்சியினரின் ஆதரவும் சாதகமாக இருப்பதால், கார்த்திகேயன் வேலூரைத் தக்கவைக்கிறார்.

அணைக்கட்டு

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தொகுதிகள்: 2021 சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ நந்தகுமாரும், அ.தி.மு.க-வில் வேலழகனும் போட்டியிடுகிறார்கள். இது வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதி என்பதால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தி.மு.க-வினர் எதிர்பார்த்தார்கள். மாற்று சமூகத்தைச் சேர்ந்த நந்தகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால், பிரசாரத்தில் முரண்டு பிடிக்கிறார்கள். வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர், ஆவின் தலைவர் ஆகிய பதவிகளால் தொகுதியிலிருக்கும் செல்வாக்கு வேலழகனுக்கு ப்ளஸ். பா.ம.க வாக்குவங்கியும் கைகொடுப்பதால் வேலழகன் முந்துகிறார்.

கீழ்வைத்தியனான்குப்பம் (தனி)

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தொகுதிகள்: 2021 சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும், தி.மு.க சார்பில் சீத்தாராமனும் போட்டியிடுகிறார்கள். சீத்தாராமன் ஏற்கெனவே இந்தத் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்தவர். தற்போதும் கட்சிக்குள் புகைச்சல் காணப்படுவதால் அவர் தடுமாறிவருகிறார். தொகுதியில் கணிசமாக இருக்கும் பா.ம.க வாக்குவங்கியும், தி.மு.க-வில் நிலவும் உள்ளடி வேலைகளும் தனக்குச் சாதகமாக இருப்பதால், ஜெகன்மூர்த்தி முந்துகிறார்.

குடியாத்தம் (தனி)

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட தொகுதிகள்: 2021 சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் பரிதாவும் தி.மு.க-வில் அமலுவும் மோதுகிறார்கள். பரிதா புதுமுகம் என்பதால், தொகுதிக்குள் பரிச்சயம் இல்லை. இருப்பினும் பணபலம் அவருக்குக் கை கொடுக்கிறது. எளிமையான தோற்றம் மற்றும் அணுகுமுறை அமலுவுக்கு பாசிட்டிவாக இருந்தாலும், பணபலம் இல்லாததது, சீட் கிடைக்காத நிர்வாகிகளின் உள்ளடி வேலை ஆகியவை அவருக்குக் குடைச்சலைக் கொடுக்கின்றன. இதனால், தொகுதியில் இழுபறி நிலை நிலவுகிறது.

அடுத்த கட்டுரைக்கு