Published:Updated:

வேட்பாளர்களுக்கு பணம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி

Vikatan Correspondent
வேட்பாளர்களுக்கு பணம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி
வேட்பாளர்களுக்கு பணம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி
வேட்பாளர்களுக்கு பணம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி

புதுடெல்லி: தேர்தல் செலவுக்காக வேட்பாளர்களுக்கு பணத்தை ரொக்கமாக தரக்கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய விதிமுறை வகுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில், "தேர்தல் செலவுக்காக, வேட்பாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க விரும்பும் அரசியல் கட்சிகள், அத்தொகையை ரொக்கமாக தரக்கூடாது. குறுக்கு கோடிட்ட காசோலை மூலமாகவோ, வரைவோலை மூலமாகவோ, வங்கிகணக்கு பரிவர்த்தனை மூலமாகவோ அளிக்க வேண்டும். அதிலும், அத்தொகை வேட்பாளர் செலவு உச்சவரம்புக்குள் இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் தங்களது ஆண்டு கணக்கு விவரங்களின் தணிக்கை அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். கட்சியின் பொருளாளரோ அல்லது வேறு நிர்வாகியோ, மாநிலம், உள்ளூர் அளவில் கட்சியின் கணக்கை பராமரிப்பதுடன், கட்சியின் தலைமையகத்திலும் ஒட்டுமொத்த கணக்கை பராமரித்து வர வேண்டும்.

வேட்பாளர்களைத் தவிர, மற்றவர்களுக்கு கொடுக்கும் பணத்தில், ஒரே நாளில் ரூ.20 ஆயிரத்துக்கு மேல், தனிநபருக்கோ, கம்பெனிக்கோ ரொக்கமாக அளிக்கக்கூடாது. வங்கி வசதி இல்லாத கிராமங்களுக்கும், கட்சி ஊழியருக்கு சம்பளமாக கொடுக்கும் பணத்துக்கும் விதிவிலக்கு அளிக்கப்படும்.

ரூ.1,000க்கு மேல் பெறப்படும் நன்கொடைகளுக்கு ரசீது அளிக்கப்பட வேண்டும். நன்கொடை அளித்தவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களை பராமரித்து வர வேண்டும். ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட நன்கொடையை ரொக்கமாக பெறக்கூடாது. காசோலை, வரைவோலை மற்றும் வங்கி கணக்கு பரிவர்த்தனை மூலமாகவே பெறவேண்டும்.

இப்படி பெறப்படும் நன்கொடைகள் அனைத்தும் 7 நாட்களுக்குள் கட்சியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும். நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது.