Published:Updated:

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது; 22 ல் வாக்கு எண்ணிக்கை!

Vikatan Correspondent
உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது; 22 ல் வாக்கு எண்ணிக்கை!
உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது; 22 ல் வாக்கு எண்ணிக்கை!
உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது; 22 ல் வாக்கு எண்ணிக்கை!

சென்னை: தமிழகத்தில் இன்று (18ஆம் தேதி) காலை தொடங்கிய உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

தமிழகத்தில், கோவை, தூத்துக்குடி மாநகர மேயர் பதவிகள் காலியாக உள்ளது. இதேபோல், அரக்கோணம், கடலூர், விருத்தாசலம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவிகள், 8 மாநகராட்சி உறுப்பினர் பதவிகள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 39 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் உள்பட தமிழகத்தில் 530 உள்ளாட்சி பதவி இடங்கள் காலியாக இருக்கின்றன.

இந்த பதவிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (18ஆம் தேதி) நடத்தப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்தத் இடைத்தேர்தலை தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்பட கட்சிகள் புறக்கணித்தனர். அ.தி.மு.க., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 1,486 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இருப்பினும், பல்வேறு இடங்களில் மந்தமான வாக்குப்பதிவே காணப்பட்ட நிலையில்,  வாக்குப்பதிவு  மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. வருகின்ற 22 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பதிவான வாக்குகள்

தூத்துக்குடி மேயர் தேர்தலில் 54 சதவீத வாக்குகளும், 37வது வார்டில் 63 சதவீத வாக்குகளும், சிவகங்கையில் நகர்புரத்தில் 77 சதவீதமும்,  ஊராட்சி பகுதியில் 67 சதவீதமும், கடலூர் மாவட்டத்தில் 63 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.