Published:Updated:

தேர்தல் வாக்குறுதிகளை பா.ஜ.க. நிறைவேற்றாது: சோனியா காந்தி குற்றச்சாட்டு!

விகடன் விமர்சனக்குழு
தேர்தல் வாக்குறுதிகளை பா.ஜ.க. நிறைவேற்றாது: சோனியா காந்தி குற்றச்சாட்டு!
தேர்தல் வாக்குறுதிகளை பா.ஜ.க. நிறைவேற்றாது: சோனியா காந்தி குற்றச்சாட்டு!
தேர்தல் வாக்குறுதிகளை பா.ஜ.க. நிறைவேற்றாது: சோனியா காந்தி குற்றச்சாட்டு!

பிவானி: தேர்தல் வாக்குறுதிகளை பா.ஜ.க.வும், இந்திய தேசிய லோக் தளமும் (ஐ.என்.எல்.டி.) ஒருபோதும் நிறைவேற்றாது என்று ஹரியானாவில் சோனியா காந்தி குற்றஞ்சாட்டினார்.

ஹரியானா மாநிலம், டோஷமில்லில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பேசும்போது, ''தேர்தல் நேரத்தில் அதிக அளவு வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அதில் குறைந்த அளவையே பா.ஜ.க. நிறைவேற்றும். அதனால், பா.ஜ.க.வின் வார்த்தைகளை நம்பி, அவர்கள் விரித்துள்ள வலையில் வாக்காளர்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது.

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஐ.என்.எல்.டி. கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் சௌதாலா உடல்நலம் சரியில்லை என்று கூறி ஜாமீனில் வந்து தேர்தல் பிரசாரம் செய்தார். தேர்தலில் ஒருவேளை அவரது கட்சி வெற்றி பெறுமேயானால், திகார் சிறையில் இருந்தபடியே அவர் முதல்வராகப் பதவியேற்பார். பொது மக்களுக்கு சேவை செய்யவோ, ஹரியாணாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்பதற்காகவோ அந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வர விரும்பவில்லை. தங்களது சுயலாபத்துக்காகவே ஆட்சியைக் கைப்பற்ற போட்டியிடுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, அத்தியாவசிய மருந்துப் பொருள்களின் விலை நிர்ணயக் கட்டுப்பாட்டை நீக்குவதென்று முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் மோடி சுற்றுப்பயணம் செய்வதற்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மிகப்பெரிய தவறை மோடி செய்துள்ளார். இதனால் அமெரிக்க மருந்து நிறுவனங்கள்தான் பயன்பெறும். இந்தியாவில், அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரித்து விடும். இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், பா.ஜ.க. அரசு ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது, அந்த வேலையை நம்பி வாழ்க்கை நடத்தி வருவோருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். பா.ஜ.க.வும், சிவசேனையும் தனித்தனியாக போட்டியிடுவதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மையில் அந்தக் கட்சிகள் ரகசியமாக கூட்டணி வைத்துக் கொண்டுள்ளன.

வெறுப்புணர்வைப் பரப்புவதே பா.ஜ.க.வின் குறிக்கோளாகும். ஆகையால் வளர்ச்சி என்னும் முகமூடியை அணிந்து வந்துள்ள அந்தக் கட்சியை நம்பி, மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், சமூக ரீதியில் பதற்றம் நிலவுகிறது. இது, அந்த மாநிலங்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.