Published:Updated:

சிவில் நீதிபதிகள் தேர்வில் திருச்செங்கோடு பெண் வழக்கறிஞர் முதலிடம்!

Vikatan Correspondent
சிவில் நீதிபதிகள் தேர்வில் திருச்செங்கோடு பெண் வழக்கறிஞர் முதலிடம்!
சிவில் நீதிபதிகள் தேர்வில் திருச்செங்கோடு பெண் வழக்கறிஞர் முதலிடம்!
சிவில் நீதிபதிகள் தேர்வில் திருச்செங்கோடு பெண் வழக்கறிஞர் முதலிடம்!

சென்னை: 162 சிவில் நீதிபதிகள் காலிப்பணியிடங்களுக்கான தேர்வில் திருச்செங்கோடு வழக்கறிஞர் விபிசி முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு 162 சிவில் நீதிபதிகள் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதற்கு, 6,172 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில் இருந்து, 590 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

இதில், 314 பேர் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். நேர்காணல் தேர்வு கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த 2 தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட உள்ளனர். இந்நிலையில், எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் எடுத்த மதிப்பெண்களையும் மொத்தமாக சேர்த்து மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

அதில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சண்முகபுரத்தை சேர்ந்த செல்வராஜ்-ஜெயஸ்ரீ தம்பதியின் மகள் எஸ்.விபிசி (25) என்ற பெண் வழக்கறிஞர் 460 மதிப்பெண்களுக்கு 323.75 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். விஷ்ணு, பிரம்மா, சிவன் என்பதன் சுருக்கமே அவருடைய பெயரின் அர்த்தம் ஆகும். சிறுவயது முதல் நீதிபதி ஆக வேண்டும் என்பது தான் அவருடைய ஆசையாக இருந்துள்ளது.

அதனால், தனது ஆசையை நோக்கி சிறுவயது முதலே கடினமாக உழைத்து தற்போது அதில் வெற்றியும் கண்டுள்ளார் விபிசி. அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது என்பதால், அவர் பிளஸ்-2 படிப்பை சொந்த ஊரிலேயே அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்துள்ளார். மேலும், சட்டப்படிப்பை திருச்சி சட்டக் கல்லூரியில் படித்து முடித்து, சீனியர் வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக பணிபுரிந்து வருகிறார்.