Published:Updated:

பிகார் எம்.எல்.ஏக்கள் ஜாதகம் வெளியீடு : 142 பேர் கிரிமினல்கள்!

விகடன் விமர்சனக்குழு
பிகார்  எம்.எல்.ஏக்கள் ஜாதகம் வெளியீடு : 142 பேர் கிரிமினல்கள்!
பிகார் எம்.எல்.ஏக்கள் ஜாதகம் வெளியீடு : 142 பேர் கிரிமினல்கள்!

பிகார் மாநிலத்தில் அண்மையில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி வெற்றி பெற்றது. நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படவுள்ளார். வரும் 20ம் தேதி அவர் 3வது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்கிறார்.

பிகார்  எம்.எல்.ஏக்கள் ஜாதகம் வெளியீடு : 142 பேர் கிரிமினல்கள்!

இதற்கிடையே அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிகார் எம்.எல்.ஏக்களில் 142 பேர் மீது ஆள்கடத்தல் வழக்கு, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இது பிகாரில் மொத்தமுள்ள 243 எம்.எல்.ஏக்களில் 58 சதவீதம் ஆகும்.

இந்த தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இருந்து 80 பேர் எம்.எல்.ஏக்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் 46 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. லாலுவின் கட்சியில் இருந்துதான் அதிகமாக கிரிமினல் குற்றப்பின்னணி உள்ளவர்கள் எம்.எல்.ஏக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வாகியுள்ள  எம்.எல்.ஏக்களில் ஒருவர்  பள்ளி கூடம் பக்கமே போகாதவர். 93 பேர் 5 முதல் 12ஆம் வகுப்பு வரையில் படித்துள்ளனர். 138 பேர் பட்டதாரிகள் அல்லது அதற்கு மேலும் படித்தவர்கள்.

இந்த எம்.எல்.ஏக்களில் காகரியா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பூனம் தேவி அதிக சொத்து வைத்துள்ள எம்.எல்.ஏ ஆவார். இவருக்கு ரூ.41 கோடிக்கு சொத்து இருக்கிறது. பாகல்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அஜித் சர்மா ரூ.40 கோடிக்கு சொத்து வைத்துள்ளார். மோக்மா தொகுதி எம்.எல்.ஏ ஆனந்த் குமார் சிங் ரூ.28 கோடிக்கு சொத்து இருப்பதாக தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பிகார் எம்.எல்.ஏக்களில் சராசரி சொத்து மதிப்பு  ரூ.3.2 கோடி. இதுவே கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில்  ரூ.86 லட்சமாக இருந்தது. ஜான்ஜார்பூர் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.எல்.ஏ குலாப் யாதவ் மீது பாலியல் பலாத்கார வழக்கு நிலுவையில் உள்ளது. 10 எம்.எல்.ஏக்கள் மீது ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளன. பாட்னா அருகேயுள்ள மோக்மா தொகுதி எம்.எல்.ஏவான ஆனந்தகுமார் சிங் மீது ஆள்கடத்தல், கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது அவர் சிறையில் இருக்கிறார்.

குற்றப்பின்னணி உடைய 142 எம்.எல்.ஏக்களில் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 71 பேரில் 37 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. பாரதிய ஜனதாவின் 53 பேரில் 34 பேர் மீது வழக்குகள் உள்ளன. காங்கிரசின் 27 பேரில் இருந்து 16 பேர் மீது வழக்குகள் உள்ளன. சிபிஐ எம்.எல். (எல்)கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குகள் உள்ளன. அதோடு குற்றப்பின்னணி உடைய  142  எம்.எல்.ஏக்களில் 70 பேர் மீது குற்றப்பத்திரிகையும்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.