Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எஸ்.விஜயதரணி (விளவங்கோடு)

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எஸ்.விஜயதரணி (விளவங்கோடு)
என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எஸ்.விஜயதரணி (விளவங்கோடு)

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எஸ்.விஜயதரணி (விளவங்கோடு)

ஓவியம்: அ.நன்மாறன்
 

மாநிலக் கட்சிகளின் எட்டாக்கனியான சட்டமன்றத் தொகுதி விளவங்கோடு. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் விஜயதரணி மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்?

1987-ல் சென்னை சட்டக் கல்லூரியில் படித்தபோது மாணவர் காங்கிரஸில் சேர்ந்தவர் விஜயதரணி. பின்னர் நளினி சிதம்பரத்திடம் ஜூனியராக இருந்து, வழக்கறிஞர் ஆனார். கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த விளவங்கோடு தொகுதியில், 2011-ம் ஆண்டு போட்டியிட்டார். கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் தொகுதியில் தன்பெயருடன் தனது கணவரின் பெயரையும் சேர்த்து, ‘விஜயதரணி கென்னடி’ என்று சுவர் விளம்பரங்கள் செய்து மக்களைத் தன் பக்கம் இழுத்தார். ‘‘எனக்கு, காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு இருக்கிறது. நான் ஜெயித்தால், மத்திய அரசின் சலுகைகள் அதிகம் பெற்றுத் தருவேன்’’ எனத் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தியாகத் தன்னைக் கூறிக்கொண்டு வலம் வந்தார்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எஸ்.விஜயதரணி (விளவங்கோடு)
என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எஸ்.விஜயதரணி (விளவங்கோடு)

ஆனால், இவர் கவிமணிக்கு தூரத்துச் சொந்தம் என்கிறார்கள் கவிமணியின் உறவினர்கள். ‘‘குமரி, கேரளத்தோடு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்’’ எனக் கூறி சர்ச்சையில் மாட்டியவர். ‘எம்.எல்.ஏ-வைக் காணவில்லை’ என இவரது தொகுதியில் மற்ற கட்சியினர் பேனர்கள் வைக்கும் கூத்தும் அடிக்கடி நடக்கிறது.

‘‘குமரி மாவட்டத்தின் நீண்டநாள் கனவான, நெய்யாறு இடதுகரைக் கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வருவேன். ரப்பர் தொழிற்சாலை, தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் ரத்து, மார்த்தாண்டம் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கப் புதிய மேம்பாலம், புதிய வழித்தடங்களில் பஸ் வசதி, சிற்றாறு அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை, அருமனையில் பேருந்து நிலையம், தொகுதி மக்களின் வாழ்வாதாரத் தொழிலான ரப்பர் தொழிற்சாலை, முந்திரி தொழிற்சாலை, மார்த்தாண்டத்தில் தேனீ ஆராய்ச்சி மையம், செங்கல்சூளை போன்றவைகளை மேம்படுத்த புதிய திட்டங்கள், மலைக்கிராமங்களுக்கு மின்சாரம், பழங்குடி மக்களின் வாழ்க்கைத்தரம் உயர பல்வேறு வேலை வாய்ப்புத் திட்டங்கள்’’ என கேரளா - தமிழ்நாடு எல்லைப் பகுதியான விளவங்கோடு தொகுதியில் வாக்குறுதிகளை அள்ளி வீசினார் விஜயதரணி.

முதலில் பழங்குடி இன மக்களிடம் பேசினோம். ‘‘தொகுதிக்குள் விஜயதரணியைப் பார்த்தே பல வருஷமாச்சு. தேர்தல் நேரத்துலதான் பாத்துருக்கோம். எங்க மலைக்கிராமங்களுக்கு அவங்க வந்தது கிடையாது. அவங்க எங்க இருப்பாங்கனும் தெரியாது. எங்க ஊருல சரியான சாலை வசதி கிடையாது. பழங்குடியின சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் பிரச்னை இருக்கு. எங்க பகுதிக்கு இன்னும் மின்சார வசதிகூட கிடைக்கலை. எங்க குழந்தைகளைப் படிக்க வெச்சிட்டுருக்கோம்.

ஆனா, அதுக்கான வேலைவாய்ப்புகள் இல்லை. இங்கயே சுற்றிப் பார்க்க இடங்கள் நிறைய இருக்கு, அதைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் வந்தாலே எங்க பகுதி ஓரளவு முன்னேறும். அதற்கான எந்த முயற்சியையும் எம்.எல்.ஏ எடுக்கலை. வனப் பாதுகாப்புச் சட்டம், தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் போன்றவை எங்கள் வாழ்க்கையை நசுக்கிக்கொண்டுதான் இருக்கு. பழங்குடி மக்களின் வாழ்க்கைத்தரம் இன்னும் உயரலை” என்கிறார்கள்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எஸ்.விஜயதரணி (விளவங்கோடு)

மலைக்கிராமங்களில் இருந்து கீழே இறங்கி,  நகர மக்களிடம் பேசினோம். ‘‘தொகுதிக்கு விஜயதரணியால் எந்த நன்மையும் கிடைக்கலை. எங்க எம்.எல்.ஏ-வை டி.வி-யில பார்க்கிற அளவுக்குக்கூட தொகுதியில பார்த்தது கிடையாது. மத்தியில காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்துல தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி, விஜயதரணி ஜெயிச்சா தொகுதிக்கு நல்லது நடக்கும்னு நம்பி தொகுதிக்கு புதுசா வந்த அவரை நம்பி ஓட்டு போட்டோம். தேர்தல் சமயத்துல, ‘உங்களோடு நான் இருப்பேன். எப்போது வேண்டுமானாலும், என்னைக் கூப்பிடலாம். உங்கள் தொகுதி வளரப் போகிறது’ என எங்களை நம்ப வெச்சாங்க. பொதுவாக இந்தத் தொகுதி 21 மலைக்கிராமங்களைக் கொண்டுள்ளது. முக்கியத் தொழிலாக முந்திரி தொழிற்சாலை உள்ளது. ஆனால், தற்போது முந்திரி இறக்குமதி இல்லாமல் போய்விட்டது.

வாரத்துக்கு இரண்டு, மூன்று நாட்கள்தான் வேலை இருக்கு. ரப்பர் பால் வெட்டு மார்ச், ஏப்ரல் மாசங்கள்ல இருக்காது. அப்போது, அந்தத் தொழிலைச் செய்கிற மக்களுக்கு வருமானம் கிடைக்காது. மார்த்தாண்டம் தேன் உலகப் புகழ்பெற்றது. அதனை மேம்படுத்த, தேன் உற்பத்தியை அதிகரிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கலை. ஒட்டுமொத்தத் தொகுதி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பைப் பெருக்க வில்லை.

தொகுதியைக் கடந்து கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில் குடிநீருக்காக உறை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால், கோடையில் குடிநீருக்குப் பஞ்சம் வராமல் இருந்திருக்கும்’’ என்றனர் தொகுதி மக்கள்.

‘‘வாக்குறுதி அளித்தபடி நெய்யாறு இடதுகரை கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டுவர முயற்சி எடுக்கவில்லை. ‘பல பகுதிகளைச் சுற்றுலாத்தலமாக மாற்றுவேன்’ என்று சொன்னார். எதையுமே செய்யவில்லை. மார்த்தாண்டம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தீர்வு, அருமனை புதிய பேருந்து நிலையம் என எதையும் நிறைவேற்றவில்லை.

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எஸ்.விஜயதரணி (விளவங்கோடு)

தொகுதி மக்களின் பிரச்னைகளைக் கேட்பது இல்லை. சிதறால் மலைக்கோயிலில் ஆண்டுதோறும் நடந்துவந்த அரசு விழா இப்போது நடக்கவில்லை. திற்பரப்பின் மறுபகுதியில் அருவித் திருவிழா நடந்தது. அதை அரசு சார்பில் நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை. சிதறால் மலைக்கோயிலில் அரசுக் கலைக்கல்லூரி கொண்டு வருவது மக்களின் நீண்டநாள் கனவு. அதை நிறைவேற்ற முயற்சி எடுக்கவில்லை. கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சில புதிய பஸ்கள் மட்டும் வந்திருக்கின்றன. இதற்கு முன்னால் இருந்தவர்கள் திட்டமிட்டுச் செயல்படுத்தத் தொடங்கிய பணிகளையே ‘நான்தான் கொண்டுவந்தேன்’ என மேடைக்கு மேடை பேசுகிறார்.

தொகுதி மேம்பாட்டு நிதியில் சின்னச் சின்னப் பணிகளை மட்டுமே செய்துள்ளார். சுற்றுலா வருவது போலதான் எங்கள் தொகுதிக்கு எம்.எல்.ஏ வருகிறார். அவரது ஆதரவாளர்கள் வைக்கும் வரவேற்பு பேனர்கள் மூலமாகத்தான் தொகுதிக்குள் வந்திருக்கிறார் என மக்களுக்குத் தெரிகிறது. தொகுதியில் எந்தவித அரசு விழாக்களும் உருப்படியாக நடக்கவில்லை’’ என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

இன்னொரு தரப்போ, விஜயதரணியின் சாதனைகளை அடுக்குகிறது. விஜயதரணியின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆக்டிவ் எம்.எல்.ஏ என்றால், அது விஜயதரணிதான். தொகுதியில் பல ஆண்டுகளாக கரடுமுரடாக இருந்த சாலைகளைச் சீர்படுத்தினார். சிறிய, பெரிய இணைப்புப் பாலங்களைக் கட்டியுள்ளார். தொகுதியில் 5 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கொண்டுவந்தார். சிறுபான்மை மலையாள மொழி படிக்கும் மாணவர்கள் மலையாள மொழியில் படிக்க, தேர்வு எழுத அரசிடம் குரல் கொடுத்தார்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எஸ்.விஜயதரணி (விளவங்கோடு)

தமிழன், மலையாளி என்கிற வேறுபாடு அவரிடம் கிடையாது. சொந்த நிதியிலும், தொகுதி நிதியிலும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்கிறார். தொகுதி மேம்பாட்டு நிதியைச் சரியாக செலவழிக்கிறார். குழித்துறை ரயில் நிலையத்தில் காத்திருப்பு அறை, நடை மேம்பாலம் கொண்டு வர முயற்சி எடுத்தார். பல்வேறு ரயில்கள் குமரிவரை நீட்டிக்க  முயற்சி எடுத்தார். குடிநீர் திட்டப் பணிகள், வடிகால் பணிகள், மத்திய மாநில அரசின் இலவச வீடுகளைப் பெற்றுத் தந்தார். உண்ணாமலை கடை டாஸ்மாக் கடையை பள்ளியாடிக்கு மாற்றியபோது அதனை மூடச்சொல்லிக் குரல் கொடுத்தார்.

பல ஏழை மக்களுக்குத் தனிப்பட்ட முறையில் உதவுகிறார். அவரது கவனத்துக்குப் போகும் எந்த விஷயத்தையும் சிறப்பாகச் செய்து முடிக்கிறார். தன் தொகுதி மட்டுமல்ல, எந்தத் தொகுதி மக்களின் குறை என்றாலும், அதற்கான தீர்வுகளை எட்ட முயற்சி செய்கிறார். வாக்குறுதியில் சொன்னதைவிட அதிகமாகச் செய்துள்ளார்’’ என்கிறார்கள் அவர்கள்.

- த.ராம், லோ.சியாம் சுந்தர்
படங்கள்: ரா.ராம்குமார்


விஜயதரணி ரியாக்‌ஷன் என்ன?

எம்.எல்.ஏ விஜயதரணியிடம் பேசினோம். ‘‘கொடுத்த வாக்குறுதிகளைவிட கூடுதலாகவே செய்துள்ளேன். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பென்ஷனை பெற்றுக்கொடுத்துள்ளேன். மலையாள மொழியில் மாணவர்கள் தேர்வு எழுத ஒரு லட்சம் கையெழுத்து வாங்கி அரசிடம் கோரிக்கை வைத்து அனுமதி பெற்றேன். நெய்யாறு இடதுகரைக் கால்வாயில் பல இடங்களில் தூர்வாரிச் சீரமைத்தேன். கால்வாயில் இருந்து தண்ணீர் பெற உச்ச நீதிமன்றத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் பிரிவு 32-ல் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அது தற்போது நிலுவையில் உள்ளது. மார்த்தாண்டம் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க மேம்பால பணிகளுக்கான வரைவு படங்களைச் சமர்ப்பித்தேன். இப்போது அது மத்திய அரசால் மறு ஆய்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்க இருக்கின்றன. மரணக் குழிகளாக இருந்த சாலைகளை சுமார் ரூ.160 கோடியில் சீரமைத்தேன். மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தைத் தரம் உயர்த்தினேன். திக்குறிச்சி - வள்ளகடவு - பயணம் பாலத்தை தாமிரபரணியின் குறுக்கே ரூ.8 கோடி மதிப்பில் கட்டினேன். ரூ.23 கோடியில் இணைப்புப் பாலங்கள் கட்டினேன். 24 மணிநேரமும் குடிநீர், மருத்துவம் கிடைக்க வழிவகை செய்தேன். ரப்பர் பூங்கா கொண்டுவர முயற்சி எடுத்துள்ளேன். வாழை, நெல், ரப்பர் அதிக கொள்முதல் விலை பெற தொடர்ந்து குரல் கொடுக்கிறேன். பல ரயில்களை குமரி வரை நீட்டிக்க முயற்சி எடுத்தேன். தொகுதியின் தரத்தை உயர்த்தியுள்ளேன். மக்கள் சேவை மையம், அங்கன்வாடி, ரேஷன் கடைகள், பள்ளிக் கட்டடங்கள், சோலார் மின்வசதி, இலவச வீடுகள் எனப் பலவற்றைச் செய்துள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதி, ராஜ்ய சபா எம்.பி நிதி, மத்திய அரசின் நிதி என அனைத்தையும் முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்த்தேன். விளவங்கோடு தொகுதி வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. நான் செய்த சாதனைகள் விரைவில் புத்தகமாகவே வரும்’’ என்றார்.

எம்.எல்.ஏ. அலுவலகம் ரெஸ்பான்ஸ் எப்படி?

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எஸ்.விஜயதரணி (விளவங்கோடு)

குழித்துறையில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்துக்குச் சென்று, ‘‘வேலைவாய்ப்பு வேண்டும். ஏதாவது உதவ முடியுமா?’’ என்று மனுக் கொடுத்தோம். ‘‘நீங்க என்ன படிச்சிருக்கீங்க? ஏதாவது ஒரு கம்பெனியில் அப்ளை பண்ணுங்க, எம்.எல்.ஏ-கிட்டச் சொல்லி, வேலை வாங்கித் தருகிறோம்’’ என்றார் விஜயதரணியின் உதவியாளர் சுரேஷ். இதுதவிர ராஜேஷ் என்பவர், மனுக்களைப் பெற்றுக்கொண்டு அந்தந்த அலுவலகங்களுக்கு அனுப்புகிறார். எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு மனுக்களை எழுதியும் கொடுக்கிறார்கள். விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வாட்ஸ்அப் குரூப்பையும் விஜயதரணியின் உதவியாளர்கள் பராமரிக்கிறார்கள்.

‘‘எம்.எல்.ஏ-வைப் பார்க்க முடியுமா, எப்ப வருவாங்க?’’ என்று கேட்டோம். ‘‘வாரத்துக்கு மூன்று நாட்கள் தொகுதிக்கு வருவாங்க. இங்க, வாங்கப்படும் கோரிக்கை மனுக்களை, சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் கொடுத்து நடவடிக்கை எடுப்பாங்க’’ என்றார்கள்.

ப்ளஸ்... மைனஸ்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எஸ்.விஜயதரணி (விளவங்கோடு)

திருவிதாங்கூர் தமிழர் போராட்டத்தில் மார்ஷல் நேசமணிக்கு உறுதுணையாக இருந்த சுசீந்திரேசப் பிள்ளை என்கிற செல்லப்பாவின் தம்பி மகள் என்பதும், வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் விஜயதரணியின் பலம். விளவங்கோடு தொகுதி மக்கள், தொகுதிக்கு உட்பட்ட பல பேரூராட்சி, ஊராட்சித் தலைவர்கள், பாரம்பர்ய காங்கிரஸ்காரர்கள், இளைஞர்கள் எனப் பல தரப்பினர் ஏதாவது பிரச்னை என்று தேடிவந்தால், அவர்களிடம் பேசி கூட்டத்தைத் தன்பக்கம் கொண்டுவந்து விடுவார். அதுபோல குமரியில் கட்சியின் சார்பில் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் யார் தலைமை தாங்க வந்தாலும், விஜயதரணி தன்னைத் தனித்துவமாக அடையாளம் காட்டிப் பேசுவதும், பேட்டி கொடுப்பதும் உண்டு. தொகுதியில் திருமண விழாக்கள் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். பத்மநாபபுரம் தொகுதி மக்கள் இவரிடம் கோரிக்கை மனுக்களைக் கொடுப்பதும் உண்டு. தொகுதி மக்களால், ‘அக்கா’ என்று அழைக்கப்படுவதும், 13 அநாதைக் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார். கணவன், மனைவிப் பிரச்னை, நிலத்தகராறு போன்றவற்றுக்கு மக்கள் இவரிடம் ஆலோசனை கேட்பதும், காங்கிரஸில் தனக்கென தனி ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதும் விஜயதரணிக்கு ப்ளஸ்.

தொகுதிக்குள் அடிக்கடி வராமல் இருப்பது, புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவந்து வேலை வாய்ப்பைப் பெருக்காதது, தொகுதி மக்கள் நேரடியாக எம்.எல்.ஏ-விடம் பேச முடியாதது, தற்போது கட்சியில் விஜயதரணியின் வீழ்ச்சி போன்றவை அவருக்கு மைனஸ். மாநில காங்கிரஸ் கமிட்டியால் ஓரம்கட்டப்பட்டது, இளங்கோவன் விவகாரத்தில் குமரி மாவட்ட காங்கிரஸ்காரர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தது என தொடர் சரிவுகளும் அவருக்கு மைனஸ்.

அடுத்த கட்டுரைக்கு