Published:Updated:

யார், யாருக்கு தேர்தலில் சீட்...? ஜெ.வின் சென்டிமென்ட் படுத்தும் பாடு!

யார், யாருக்கு  தேர்தலில் சீட்...? ஜெ.வின் சென்டிமென்ட் படுத்தும் பாடு!
யார், யாருக்கு தேர்தலில் சீட்...? ஜெ.வின் சென்டிமென்ட் படுத்தும் பாடு!

யார், யாருக்கு தேர்தலில் சீட்...? ஜெ.வின் சென்டிமென்ட் படுத்தும் பாடு!

யார், யாருக்கு  தேர்தலில் சீட்...? ஜெ.வின் சென்டிமென்ட் படுத்தும் பாடு!

கையடக்க ரேஸ் டிப்ஸ் புத்தகத்தை கையில் வைத்தபடி அதிகாலையிலேயே தெருமுனை தேநீர்க் கடைக்கு வந்து விடும் ஆசாமிகளின் கைகளில்,  கடந்த ஒரு மாதமாக தவழ்ந்துகொண்டிருப்பது ஜாதக (ஹாராஸ்கோப்) குறிப்பு புத்தகமும், சுத்த வாக்கிய கணித பஞ்சாங்கமும்தான்.

"நாளைக்கு ஒரு நாள் கழிந்து விட்டால் போதும், 'அம்மா ' அறிவிப்பு வந்து விடும். அமாவாசையை முன்னே வைத்துக் கொண்டு அம்மா எந்த அறிவிப்பையும் செய்ய மாட்டார்" என்றெல்லாம், தேர்ந்த ஜோதிட சிரோன்மணிகளாய் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள், ர.ர.க்கள்.

"எப்படி இருந்த இவங்க, இப்ப இப்படி ஆகிட்டாங்களே... " என்ற பரிதாப 'உச், உச் ' களும் ஒரு பக்கம்,  அவர்களை சுற்றியுள்ளோர் பக்கத்திலிருந்து கேட்கிறது. தி.மு.க.வில் சீட் கேட்டு  வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களை விட,  மூன்று மடங்கு கூடுதலாக (26,174-பேர்) அ.தி.மு.க.வில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தி.மு.க வில், மனுத்தாக்கல் செய்த அத்தனை பேரையும் அறிவாலயத்தில் வைத்து, நேர்காணலை நடத்தி முடித்து விட்டனர். அதே போல் காங்கிரசில் மனுத்தாக்கல் செய்த அத்தனை பேருக்கும், “ கட்சியின் மீது இத்தனை நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ள உங்கள் அனைவருக்கும் காங்கிரஸ் சார்பில் என் நன்றி, வெற்றிக் கனியை தலைமைக்கு சமர்ப்பிப்போம்' என்று கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கடிதம் மூலம் பதில் கொடுத்துவிட்டு அடுத்த வேலையில் மூழ்கிவிட்டார். 

அ.தி.மு.க.வில் மட்டுமே இதுவரையில் அதிகாரப்பூர்வ நேர்காணல் நடத்தப்படவில்லை. ஓ.பி.எஸ். உள்ளிட்ட நால்வர் அணிக்கும், கட்சிக்கும்  தன்னுடைய நிலைப்பாட்டை சொல்வது போல் அவர்கள் அருகில் இல்லாமல் ஐவரை நேர்காணல் முடித்து அதை 'போட்டோ-நியூஸ்' ஆக, மட்டும் வெளியில் அனுப்பினார் ஜெயலலிதா.

நமக்கு எப்போது நேர்காணல், 'அம்மா, நம்மைப் பார்ப்பாங்களா?' என்ற ஏக்கத்துடன்  கார்டனையும், கட்சி அலுவலகத்தையும் சுற்றிக் கொண்டு இருப்பவர்கள், தங்களின் ஜாதகக் கணிப்புகளோடு ஜெயலலிதாவின் ஜாதகம், எண் கணித நம்பிக்கை, கலர் சென்டிமென்ட் என்று பக்கா அப்டேட்டில் இருக்கிறார்கள்.

அப்டேட்டில் புலியாக இருக்கும் ர.ர.க்கள் சிலரிடம் பேசினோம்.

"சிம்மராசி, மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஜெயலலிதாவுக்கு (ராசி எண் 5, விதி எண் 2)  புதன்தான் உச்சம். புதனின் நிறம் பச்சை. பச்சையின் எண் 5. அதனால்தான், 2011-ல்  பதவியேற்பை 23-ம் தேதியன்று வைத்துக் கொண்டார். பதவியேற்ற அன்று சரியாக ஐந்து கோப்புகளில் மட்டுமே கையெழுத்துப் போட்டார். 2016- தேர்தலுக்காக 5 பேரிடம் மட்டுமே நேர்காணல் நடத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக, 26,174 (இதன் கூட்டு எண், ஜெ.வின் விதி எண் 2 ஆகும்) பேரிடம் மட்டுமே மனு வாங்கப்பட்டது.

யார், யாருக்கு  தேர்தலில் சீட்...? ஜெ.வின் சென்டிமென்ட் படுத்தும் பாடு!

அதே அளவில் விண்ணப்ப படிவங்களை தலைமையிடம் கொடுக்கச் சொன்னார். 26,175 வதாக வந்து படிவம் கேட்டவருக்கு 'படிவம் அவ்வளவுதான்' என்ற பதில்மட்டும்தான் கிடைத்தது” என்றார் தென்மாவட்டத்திலிருந்து வந்து,  சென்னையில் தங்கி ஜெ-வின் அழைப்பிற்காக காத்திருக்கும் ஒருவர்.

தி.மு.க, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் மனுத்தாக்கல் செய்தவர்களை நேர்காணல் செய்வது போல் அ.தி.மு.க.வில் மனுதாக்கல் செய்துள்ள 26,174 பேர்களை நேர்காணல் செய்வார்களா? என்பதுதான் இப்போதிருக்கும் மிகப் பெரிய அரசியல் கேள்வி. "அத்தனை மனுதாரர்களும் இந்த முறை தங்களுடைய ஜாதகத்தை சீட் கேட்கும் மனுவோடு இணைத்து அம்மா பார்வைக்கு அனுப்பியுள்ளனர். அவர்களையெல்லாம்  நேரில் வரவழைத்துப் பார்ப்பதும், விசாரிப்பதும் இயலாத காரியம். மனுதாரர்களுக்குப் பதிலாக, அவர்களது ஜாதகம், டேட் ஆஃப் பர்த் போன்றவைகளை மொத்தமாக கம்ப்யூட்டரில் ஏற்றி வைத்து விட்டார்கள். ஆக, 26 ஆயிரத்து, 174 பேர்களுடைய ஜாதகமும் இப்போது அம்மாவின் கம்ப்யூட்டரில் தான் இருக்கிறது.

ஜாதகதாரர்களில் பெஸ்ட் என்று  இதிலிருந்து முதல் ஆயிரம் பேரை தேர்வு செய்து, அதிலும் பெஸ்ட் என்று 500 பேரை இரண்டாவது கட்டமாக அம்மா ஃபில்டர் செய்வார். மூன்றாவது கட்டமாகத்தான், அதிலும் பாதி என்று பைனல் ஃபில்டருக்குள் அந்த அதிர்ஷ்ட (234) வேட்பாளர்கள் வருகிறார்கள்” என்றார் அதிமுக தலைமைக்கழகத்தில் நாம் சந்தித்த நண்பர்.

யார், யாருக்கு  தேர்தலில் சீட்...? ஜெ.வின் சென்டிமென்ட் படுத்தும் பாடு!

ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால், "குறிப்பிட்ட ராசிக் காரர்களின் ஆதிக்கத்தால், ஒட்டு மொத்த வெற்றியை அள்ளலாம். ஆட்சியமைந்த பின்னரும் அவர்கள் 'பவர் ' மூலம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஐந்தாண்டை நிறைவு செய்யலாம் என்பதே அம்மாவின் கணக்கு" என்கிறார்கள்.

சிம்மராசி, மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 'சீட்' டில் முக்கியத்துவம் இருக்கலாம் என்ற தகவல் லேசாக வெளியே கசிய,  அதுவே இப்போது பெரிதாக பற்றிக் கொண்டு இருக்கிறது.

ஒரு சிலர் ஜாதகத்தை தங்களுக்கு 'சாதக'மாக மாற்றும் வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது, 'சிம்மராசி, மகம் நட்சத்திர'த்தில் பிறந்தது போலவே தங்களுடைய பிறந்த தேதி, கிழமை, நாள், வருடம் வருவது போல் 'கட்டத்தை' அமைத்துக் கொள்கிற வேலைதான் அது.

யார், யாருக்கு  தேர்தலில் சீட்...? ஜெ.வின் சென்டிமென்ட் படுத்தும் பாடு!

அதெல்லாம் சரி, ஒரிஜினல் சர்ட்டிபிகேட்டை கொண்டு வாங்கன்னு சொன்னால் இவர்கள் நிலை என்னாவது? போகிற போக்கைப் பார்த்தால், தேர்தல் சீட்டுக்கான நேர்காணலுக்கும் அரசே கல்வித்துறையில் இருந்து உரிய ஆட்களைப் போட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கும் நிலைமை வரும் போலிருக்கிறது.

- ந.பா.சேதுராமன்


 

அடுத்த கட்டுரைக்கு