Published:Updated:

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?
அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

முட்டிமோதும் பிரமுகர்கள்...
 

டைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்று தங்களுக்குத் தெரிந்த ‘ரூட்’களில் எல்லாம் அ.தி.மு.க-வினர் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுபற்றிய, சில மாவட்டங்களின் நிலவரங்களைக் கடந்த இதழில் வெளியிட்டோம். இந்த இதழிலும் அது தொடர்கிறது...

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

விருதுநகர் மாவட்டம்

சிவகாசி: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தொகுதி இது. இவர், அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளரும்கூட. மீண்டும் இங்கே போட்டியிட விரும்புகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 200 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வாங்கிக் கொடுத்து, தேர்தல் வேலைகளை ஜரூராகத் தொடங்கிவிட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தக்காரும், பேப்பர் மில் அதிபருமான ஸ்ரீபதி ரவிச்சந்திரனுக்கு சசிகலாவின் அறிமுகம் உண்டு. இவரும் சிவகாசி தொகுதியைக் கேட்டு வருகிறார் என்கிறார்கள்.

சாத்தூர்: அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் தொகுதி. மீண்டும் இங்கு போட்டியிட விரும்புகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஆன்ட்ராய்டு போன்கள் வாங்கிக் கொடுத்து தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார். சாத்தூர் ஒன்றியச் செயலாளர் சண்முகக்கனி, மாவட்ட கவுன்சிலர் கே.வி.கே.ராஜு ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.

அருப்புக்கோட்டை: முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனின் தொகுதி. மீண்டும் இங்கு போட்டியிட விரும்பும் வைகைச்செல்வன், கடும் முயற்சிகள் எடுத்து வருகிறார். அருப்புக்கோட்டை யூனியன் சேர்மன் யோகா வாசுதேவன், அ.தி.மு.க-வின் மாவட்ட அவைத் தலைவர் ஆமத்தூர் வக்கீல் விஜயக்குமார் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன. வைகைச்செல்வனுக்கு மீண்டும் சீட் கிடைக்கலாம்.

விருதுநகர்: தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ-வாக இருந்து அண்மையில் அ.திமு.க -வில் இணைந்த மாஃபா பாண்டியராஜனுக்கு இந்த முறை சீட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளரான விருதுநகர் யூனியன் சேர்மன் கலாநிதியும் சீட் வாங்க முயற்சித்து வருகிறார்.

திருச்சுழி:
அ.தி.மு.க-வின் காரியாப்பட்டி ஒன்றியச் செயலாளர் கரியனேந்தல் ராமமூர்த்திராஜ், நரிக்குடி முன்னாள் யூனியன் சேர்மன் ஜெயராஜ் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. ஆனாலும், சசிகலாவின் தீவிர ஆதரவாளரான மலைராஜனுக்கு சீட் கிடைக்கலாம் என்கிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி): அ.தி.மு.க-வின் மாவட்ட கவுன்சிலர்கள் முத்தையா, பட்டி சீனிவாசன் ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்கலாம் என்கிறார்கள்.

ராஜபாளையம்: தற்போதைய எம்.எல்.ஏ-வான கோபால்சாமி, இந்தத் தொகுதியை மீண்டும் பெறுவதற்குக் கடுமையாக முயற்சி செய்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராஜபாளையம் நகராட்சித் தலைவர் மறைந்த சுப்பாராஜாவின் மகனும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளருமான ஷியாம் ராஜா, ராஜபாளையம் யூனியன் துணைத்தலைவர் எஸ்.ஏ.மணிகண்டன் ராஜா, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தீவிர ஆதரவாளரான ராஜவர்மன் ஆகியோரின் பெயர்களும் பலமாக அடிபடுகின்றன.

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

தர்மபுரி மாவட்டம்

தர்மபுரி: தற்போதைய மாவட்டச் செயலாளர் பூக்கடை முனுசாமி, அமைச்சர் பழனியப்பனின் விசுவாசி. அதனால் இவருக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறைக்குச் சென்று திரும்பிய டி.கே.ராஜேந்திரனும் சீட் கேட்டிருக்கிறார். 

பாப்பிரெட்டிப்பட்டி: மீண்டும் இங்கு போட்டியிட அமைச்சர் பழனியப்பன் விரும்புகிறார். கிடைக்காதபட்சத்தில் பாலக்கோடு தொகுதிக்குப் போகலாம் என்கிறார்கள். இங்கு, அமைச்சருக்குப் போட்டியாக இருப்பவர் முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரம்.

பாலக்கோடு: முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான கே.பி.அன்பழகன் விருப்பமனுக் கொடுத்துள்ளார். இந்தத் தொகுதி மீதும் அமைச்சர் பழனியப்பன் கண்வைத்துள்ளார்.

பென்னாகரம்: மாவட்ட எம்.ஜி.ஆர். அணி இணைச்செயலாளரான ஆறுமுகம், சீட் வாங்க கடுமையாக முயற்சி செய்கிறார். இந்தத் தொகுதிக்கு, பஸ் எரிப்பு வழக்கில் உள்ள டி.கே.ராஜேந்திரனும், கே.பி.அன்பழகனும் பணம் கட்டி உள்ளனர்.

அரூர்: ஒன்றியச் செயலாளர் முருகனுக்கு அமைச்சர் பழனியப்பனின் ஆசி உண்டு. எனவே, முருகனுக்கு சீட் கன்ஃபார்ம் என்கிறார்கள். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் சாட்சாதிபதியும் முயற்சி செய்கிறார்.

மதுரை மாவட்டம்

மதுரை மேற்கு: அமைச்சர் செல்லூர் ராஜு மீண்டும் இந்தத் தொகுதியை குறிவைத்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைச்சர் எதையும் செய்யவில்லை என்று சி.டி தயாரித்து தொகுதி மக்களிடம் விநியோகித்த பசும்பொன் பாண்டியன், கட்சியில் இருந்து காலி செய்யப்பட்டு விட்டார். இப்போது, மேற்கு மண்டலத் தலைவர் சாலைமுத்து போட்டியில் இருக்கிறார்.

சாலைமுத்துவுக்கு சீட் கிடைக்கலாம் என்கிறார்கள். முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், துணை மேயர் திரவியம், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தர்மராஜ், அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் ஆகியோரும் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். ஒருவேளை, மீண்டும் செல்லூர் ராஜுக்கு சீட் கொடுக்கப் பட்டால், சுயேட்சையாகப் போட்டியிட பசும்பொன் பாண்டியன் தயார் நிலையில் இருக்கிறார்.

சோழவந்தான் (தனி):
சிட்டிங் எம்.எல்.ஏ-வான கருப்பையா, சர்ச்சை நாயகனாக வலம் வந்தவர். சொந்த சமூகத்தினரை மரியாதை இல்லாமல் நடத்துவது, ஆதிதிராவிட நலத்திட்ட உதவிகளைக் கேட்டு அணுகுபவர்களை அலட்சியம் செய்தது என கருப்பையா மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. எனவே, அலங்காநல்லூர் ஆறுமுகம் என்பவருக்கு சீட் கிடைக்கலாம் என்கிறார்கள். தி.மு.க ஆட்சிக்காலத்தில் அ.தி.மு.க மாநாடு நடத்துவதற்கு தன் விளைநிலத்தைக் கொடுத்து, அழகிரியைப் பகைத்துக்கொண்ட மாணிக்கம் என்பவர் மீது கார்டனின் கருணை இருப்ப தாகவும்  சொல்கிறார்கள். டாக்டர் பாலமுருகன், செல்லப்பாண்டியன் ஆகியோரும் ரேஸில் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

கரூர் மாவட்டம்

கரூர்: சிட்டிங் எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி கரூரை மூன்றாவது முறையாகக் கைப்பற்ற தீவிர முயற்சியில் இருக்கிறார். கரூர் எனக்குத்தான் என்று பெட் கட்டுகிறார், சிட்டிங் மாவட்டச் செயலாளரான ரெயின்போ விஜயபாஸ்கர். இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் மாநிலச் செயலாளர் செந்தில்நாதன், கரூர் தொகுதிச் செயலாளர் திரு.வி.க., மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், மாவட்டத் துணைச்செயலாளர் சிவசாமி, நகரச் செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், முன்னாள் அமைச்சரான சின்னச்சாமியின் அக்கா மகன் முருகையன் ஆகியோரும் சீட் வாங்க முட்டி மோதுகிறார்கள்.

அரவக்குறிச்சி:
இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் மாநிலச் செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் சீட் வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

முன்னாள் மாவட்டச் செயலாளர் வடிவேல், மாவட்ட கவுன்சிலர் மார்கண்டேயன், காகிதபுரம் சேர்மன் கமலக்கண்ணன், மாவட்ட மகளிர் அணித் தலைவி ரேணுகா மோகன்ராஜ், எஸ்.பி.லோகநாதன், துணை சேர்மன் காளியப்பன் ஆகியோர் சீட் பிடிக்க அலைந்து திரிகிறார்கள். இவர்களுடன், கரூர் கிடைக்கவில்லை என்றால், அரவக்குறிச்சியைப் பெற்றுவிட வேண்டும் என நினைக்கும் செந்தில்பாலாஜியும் மோதுகிறார்.

குளித்தலை:
முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரத்தின் தொகுதி இது. இந்த முறையும் சீட் வாங்கும் கனவில் உள்ளார். தனக்குக் கிடைக்க வில்லை என்றால், தன் மகன் அல்லது மருமகளுக்கு சீட் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். ஒன்றியச் செயலாளர் விநாயகம், பொருளாளர் கண்ணதாசன், வழக்கறிஞர் நாகராஜ், ஒன்றிய சேர்மன் நளினி கலைமணி, கரூர் நகரச் செயலாளர் நெடுஞ்செழியன் என ஏகப்பட்ட பேர் சீட் வாங்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.

கிருஷ்ணராயபுரம்:
சிட்டிங் எம்.எல்.ஏ-வான காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ-வான சசிகலா,  ஊராட்சிக் குழு தலைவர் கீதா மணிவண்ணன் ஆகிய ஒவ்வொருவரும் தனக்குத்தான் சீட் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர். சில வாரங்களுக்கு முன், அ.தி.மு.க-வுடன் நெருக்கமாக உள்ள ஜான்பாண்டியன் கட்சியினர், இந்தத் தொகுதியில் ஜான்பாண்டியன் மனைவி பிரிஸில்லா பாண்டியனைக் களமிறக்க உள்ளதாகச் சிறப்புச் செயற்குழு கூட்டம் போட்டனர். இதனால், சீட் கனவில் இருக்கும் மற்றவர்கள் கொஞ்சம் பீதியில் இருக்கிறார்கள்.

அடுத்து..?


- சண்.சரவணக்குமார், எம்.கார்த்தி, சி.ஆனந்தகுமார், எம்.திலீபன், சா.நித்யகுமரன்

அடுத்த கட்டுரைக்கு