Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச்செட்டிப்பாளையம்)

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச்செட்டிப்பாளையம்)
என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச்செட்டிப்பாளையம்)

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச்செட்டிப்பாளையம்)

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச்செட்டிப்பாளையம்)

 

ரோடு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி. இயற்கை சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ இருப்பதால், அடிக்கடி படப்பிடிப்புகள் நடக்கும். இது, அதனால் ‘மினி கோடம்பாக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.
 
கோபிச்செட்டிப்பாளையம் என்ற ஒரு நகராட்சியும், எலத்தூர், கொலப்பலூர், நம்பியூர், கொடிவேரி, காசிப்பாளையம், லக்கம்பட்டி என 6 பேரூராட்சிகளையும், 36 ஊராட்சிகளையும் உள்ளடக்கிய தொகுதி இது. மக்களின் பிரதானத் தொழில் விவசாயம்.

இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ செங்கோட்டையன் கோபிசெட்டிப் பாளையம் தொகுதியில் 6-வது முறையாக எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். இவர் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. தனிப்பட்ட வாழ்க்கையில் தடம் மாறியதால், அமைச்சர் பதவி பறிபோனது. இவர், தொகுதிக்காக என்ன செய்திருக்கிறார்?

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச்செட்டிப்பாளையம்)
என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச்செட்டிப்பாளையம்)

அரசுக் கலைக்கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி!

செங்கோட்டையன் 3 முறை அமைச்சராக இருந்திருக்கிறார். ஆனால், ஈரோடு மாவட்டத்தில் ஓர் அரசுக் கலைக் கல்லூரியைக்கூட கொண்டுவர முயற்சிக்கவில்லை. ஆனால், கோவையில் தன் ஒரே மகன், கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடங்க உதவியிருக்கிறார். இதைப் பார்க்கும்போது தொகுதி மக்கள் நலன் மீதும், தன் மகனின் எதிர்கால நலன் மீதும் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார் என்பது தெரியும்.

தற்போது ஈரோடு மாவட்டம் சிவகிரி மேல்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக அரசுக் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த மாதம் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் மொடக்குறிச்சி பகுதியில் அரசுக் கலைக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. 

2011 தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றபோது விவசாயக் கூலியின் மகள் ஒருவர் செங்கோட்டையனிடம் நேரடியாகவே, ‘‘ஐயா இந்தப் பகுதியில் பெண்களைப் படிக்கவைப்பது என்பதே மிகவும் சிரமம். ஏதோ பெற்றோரின் கை, கால்களில் விழுந்து ப்ளஸ்-2 வரை படித்துவிடுகிறோம். மேற்கொண்டு கல்லூரி சேர ஓர் அரசுக் கல்லூரி தொடங்கவேண்டும்’’ என்றார்.  பிரசாரத்தின்போது இதுபற்றி குறிப்பிட்டு, ‘‘இந்த முறை என்னை வெற்றி பெற செய்தால், கோபியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி கொண்டுவருவேன்’’ என்றார்.  ஆனால், அதற்கான ஒருசெங்கல்லைக்கூட  அவர் நகர்த்தவில்லை.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்!

கோபிசெட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தை ஒட்டி கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. கோபியின் அனைத்துக் கழிவுகளையும் சுமந்துகொண்டு சாக்கடையாக மாறி சாணார்பதியில்  கூகலூர் வாய்க்காலில்  கலக்கிறது. கூகலூர் வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் புதுக்கரைப்புதூர், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில்  விளைச்சல் பாதிப்பு அடைவதோடு, நிலத்தடி நீரும் மாசுபடுகிறது.

இந்தப் பகுதிகளுக்குப் பிரசாரத்துக்குச் சென்ற செங்கோட்டையன், ‘‘சாணார்பதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்’’ என்றார். ஆனால், இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச்செட்டிப்பாளையம்)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்!

கோபிசெட்டிப்பாளையத்தில் பவானி ஆயக்கட்டுப் பாசனத் திட்டம் மூலமும் மற்றும் கொடிவேரி அணை பாசனத்தின் மூலமும் தொகுதி முழுக்க 60 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

ஆனால், இங்கு நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக இல்லை. அறுவடையின்போது விவசாய அமைப்புகள் கலெக்டரிடம் முறையிட்ட பிறகு, தற்காலிக கொள்முதல் நிலையங்கள் அமைக்கிறார்கள். ‘‘என்னை வெற்றி பெறச் செய்தால் நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத் தருவேன்’’ என்று எம்.எல்.ஏ சொன்னார். ஆனால், செய்து தரவில்லை.

குளிர்பதனக் கிடங்கு!

கோபியில் நெல்லுக்கு அடுத்ததாக, வாழை பயிரிடப்படுகிறது. அதிகப்படியான விளைச்சலின் போது கடும் விலைச்சரிவு ஏற்படுகிறது. எனவே, இந்த வாழைப்பழங்களைப் பதப்படுத்தி வைப்பதற்காகக் குளிர்ப்பதனக் கிடங்கு அமைத்துத் தர வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை. அதேபோல கொய்யா, பப்பாளி, மாதுளை போன்ற பழ வகைகளும், தக்காளி, கத்தரி, வெண்டை, முள்ளங்கி போன்ற காய்கறி பொருட்களும், தோட்டப்பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

இவை கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வைக்க குளிர்பதனக் கிடங்கு வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை, ‘‘இந்த முறை வெற்றி பெற்றதும் செய்து கொடுக்கிறேன்’’ என்றார்.

கோபியில் இருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள அழுக்குளியில், 1,000 மெட்ரிக் டன் பழங்களைப் பதப்படுத்தி வைக்கக்கூடிய குளிர்பதனக் கிடங்கை கடந்த 4 மாதங்களுக்கு முன், முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் திறந்து வைத்தார். ஆனால், இன்றுவரை முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை.

பட்டுக்கூடு விற்பனை மையம்!

கோபியின் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொலவக்காளிப்பாளையம், நஞ்சைகோபி, நாகதேவன்பாளையம் பகுதிகளில் பெருமளவு பட்டுப்புழு வளர்ப்பு பிரதானத் தொழிலாக இருக்கிறது. பட்டுக்கூடுகளை விற்பனை செய்வதற்கு கோபியில் விற்பனை நிலையம் இல்லை. அதனால் தர்மபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகாவுக்குக் கொண்டு செல்கின்றனர்.  இதனால் போக்குவரத்துச் செலவு அதிகரிக்கிறது.தமிழ்நாட்டில் இருந்து, கொண்டுசெல்லும் பட்டுக் கூடுகளை கர்நாடகாவில், குறைந்த விலைக்கு வாங்குகிறார்கள்.

சத்தியமங்கலத்தில் உள்ள பட்டுக்கூடு விற்பனை நிலையம் 10 வருடங்களாகச் செயல்படவில்லை. இதைச் செயல்படுத்த செங்கோட்டையன் நடவடிக்கை எடுக்கவில்லை.

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச்செட்டிப்பாளையம்)

    குப்பைக் கிடங்கு என்னாச்சு?

கோபிசெட்டிப்பாளையம் பஸ் நிலையம் அருகே நாயக்கன்காடு குடியிருப்புப் பகுதிக் கிடங்கில் குப்பை மலைபோல குவிந்திருக்கிறது. குப்பைக்குத் திடீர் என சமூகவிரோதிகள் தீ வைக்கின்றனர்.  தீயால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். கடந்தமுறை தேர்தல் பிரசாரத்துக்கு செங்கோட்டையன் வந்தபோது, ‘‘இந்தக் குப்பைக் கிடங்கை புறநகர் பகுதிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்கிறேன்’’ என்று சொல்லி புறப்பட்டுச் சென்றவர், கண்டுகொள்ளவே இல்லை. நகராட்சி சார்பாக நாகதேவன்பாளையத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க இடங்களைத் தேர்வு செய்த பிறகும் இன்னும் குப்பைகளை அங்கு கொண்டு செல்லவில்லை. தொடர்ந்து இந்தப் பகுதியிலேயே குப்பைகளைக் கொட்டுகிறார்கள்.

எலும்பு முறிவு மருத்துவர்!

கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவர் இல்லாததால், 30 கி.மீட்டர் தாண்டி ஈரோடு அரசு மருத்துவ மனைக்குத்தான் செல்ல வேண்டி இருக்கிறது. தி.மு.க-வைச் சேர்ந்த வெங்கிடு எம்.எல்.ஏ-வாக இருந்தபோது பகுதி நேர எலும்பு முறிவு மருத்துவர் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு எலும்பு முறிவு மருத்துவரே இந்த மருத்துவ மனையில் கிடையாது. ‘நிரந்தர எலும்பு முறிவு மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்ற செங்கோட்டையன் பேச்சு, இன்னும் செயல்வடிவம் பெறவில்லை.

ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம்!

செங்கோட்டையன் தரப்பில் விசாரித்த போது, ‘‘கோபிசெட்டிப்பாளையத்தில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம்,  வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சொந்தக் கட்டடம் ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். ஜீவா போக்குவரத்து பணிமனையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. கோபிபாளையம், கரட்டுப்பாளையம், மலையாபாளையம், சூரிபாளையம் போன்ற நான்கு இடங்களில் துணை மின்நிலையங்கள் அமைத்து விவசாயத்துக்கும், நூற்பாலைகளுக்கும் போதிய மின்சாரம் கிடைக்க வழிவகை செய்திருக்கிறார்.

 

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச்செட்டிப்பாளையம்)

கொடிவேரி மேம்பாலம்!

பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை இருக்கிறது. இந்தக் கரையில் காசிபாளையம், கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளும், மறுகரையில் 4 ரோடு, வாணிபுத்தூர், ஏலூர், கடம்பூர் போன்ற பகுதிகளும் இருக்கின்றன. இந்தக் கரையில் இருந்து மறுகரைக்குச் செல்லவேண்டும் என்றால், 25 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் அல்லது பங்களாபுதூர் கரட்டுப்பாளையம் சுற்றிதான் வர வேண்டும். இங்கு ஒரு மேம்பாலம் வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது. செங்கோட்டையன் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைப்போல ரூ.14 கோடி மத்திய அரசின் நிதி உதவியோடு தற்போது மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றனர்.

கோட்டையைத் தக்க வைப்பாரா செங்கோட்டையன்?

- வீ.கே.ரமேஷ், க.தனசேகரன், எம்.விஜயகுமார், மு.பிரதீப்கிருஷ்ணா
படம்: ரமேஷ் கந்தசாமி


ரியாக்‌ஷன் என்ன?

எம்.எல்.ஏ-விடம் விளக்கம் கேட்பதற்காக அவருடைய தொலைபேசியில் பலமுறை முயற்சித்தோம். ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. அதன் பிறகு, செங்கோட்டையனின் உதவியாளர் பாலுவிடம் கேட்டபோது, ‘‘2011 முதல் 2016 வரை ரூ.2.87 கோடிக்கு தன் தொகுதியில் பணிகளைச் செய்திருக்கிறார். அரசுக் கலைக்கல்லூரி அப்போதைக்குத் தேவையில்லாமல் இருந்தது. கோபியில் தொழில்நுட்பக் கல்லூரி கூடிய சீக்கிரத்தில் வந்துவிடும். கீரிப்பள்ளம் ஓடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.45 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பணிகளும் ஓரிரு மாதங்களில் தொடங்கும். பதனிடும் குளிப்பதனக் கிடங்கு, மின்சாரப் பற்றாகுறையால் நடைமுறைபடுத்த முடியவில்லை. அதையும் விரைவில் சரி செய்வோம். தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவு செய்திருக்கிறார்’’ என்றார்.

எம்.எல்.ஏ. அலுவலகம் ரெஸ்பான்ஸ் எப்படி?

கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் கரட்டடிப்பாளையம் லக்கம்பட்டி பேரூராட்சி அலுவலகத்துக்குள் எம்.எல்.ஏ அலுவலகம் உள்ளது. இப்படி ஓர் அலுவலகம் இங்கு இருப்பதே தொகுதி மக்களுக்குத் தெரியாது. ஏனென்றால், செங்கோட்டையன் அமைச்சராக இருந்தபோதும் சரி... தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும்போதும் சரி, இந்த அலுவலகத்துக்கு வந்ததில்லை. இது,1996 முதல் 2001 வரை கோபியில் தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த வெங்கிடு கட்டியதால் அங்கு போவதில்லையாம். 

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச்செட்டிப்பாளையம்)

தொகுதி மக்கள் தங்கள் குறைகளைச் சொல்ல வேண்டும் என்றால், நேரடியாக அமைச்சர் வீடு இருக்கும் குள்ளம்பாளையத்துக்குச் செல்வார்கள். இல்லையென்றால், கோபிசெட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு அருகில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்துக்குச் செல்வார்கள். இங்கு காலை 9:30 மணி முதல் மாலை 7:00 மணி வரை சம்பளத்துக்கு ஆள் நியமித்து இருக்கிறார். இவர் மக்கள் கொடுக்கும் கோரிக்கைகளை வாங்கிக்கொண்டு, ‘‘எம்.எல்.ஏ-விடம் கொடுத்துவிடுகிறேன். நிச்சயம் எம்.எல்.ஏ செய்து தருவார்’’ என்று அனுப்பிவிடுவார். ஆனால் அந்தக் கோரிக்கை மனு, ‘கடலில் கரைத்த பெருங்காயம்போல காணாமல் போய்விடும்’ என்கிறார்கள் தொகுதி மக்கள்.

கோட்டுபுள்ளாம்பாளையத்தைச் சேர்ந்த பழனியப்பன், ‘‘எனக்கு வயது 73 ஆகிறது. ஆண் வாரிசோ, பெண் வாரிசோ கிடையாது.  எங்களுக்கு சொத்து பத்து எதுவும் இல்லை. முதியோர் உதவித்தொகை கேட்டு கோரிக்கை மனுக் கொடுத்தேன். ஓய்வூதியம் கிடைத்தபாடில்லை’’ என்றார்.

ப்ளஸ்... மைனஸ்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச்செட்டிப்பாளையம்)

ரவுடியிஸம், கட்டப் பஞ்சாயத்து கிடையாது. நில அபகரிப்புப் புகார்கள் இல்லை. தொகுதி மக்களிடம் கோபப்பட மாட்டார். தன் தொகுதியில் நடக்கும் துயர காரியங்கள், கல்யாணம், காதுகுத்து எனச் சென்று வருவார். எளிமையான மனிதர். அனைத்து கட்சிக்காரர்களிடமும் சுமுகமாகப் பழகக்கூடியவர். தேர்தல் நேரத்தில் தன் தொகுதிக்குள் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று கோயிலுக்கு ஒரு பெரிய தொகையை நன்கொடையாகத் தருவார். மிக நீண்டகால அரசியல் அனுபவம் இவருடைய ப்ளஸ்.

ஏராளமான வாக்குறுதிகளைச் சொல்வார். ஆனால், அவற்றை  முழுமையாகச் செய்துகொடுக்க மாட்டார். குடும்பமே இவருக்கு எதிராகச் செயல்பட்டது.  அமைச்சர் பதவி பறிப்புக்குப் பிறகு, கட்சி நிர்வாகிகளிடம்கூட விலகியே இருப்பது இவரது மைனஸ்.

அடுத்த கட்டுரைக்கு