Published:Updated:

தயார் நிலையில் தேர்தல் பணிக்குழு! சூடுபிடிக்கிறது, அதிமுக...

தயார் நிலையில் தேர்தல் பணிக்குழு! சூடுபிடிக்கிறது, அதிமுக...

.தி.மு.க.வில் கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில் நடக்காத ஒன்று இப்போது நடந்திருக்கிறது"  என்று கட்சியின் மூத்த தொண்டர்கள் 'அதிகாலை களையெடுப்பை' சுட்டிக் காட்டுகின்றனர். ஆம், 11.3.2016 அன்று காலை ஏழு மணிக்கே கட்சியின் அதிகாரப்பூர்வ சேனலில் 'இன்று நாள் இப்படி' என்பது போல் தேனி, திண்டுக்கல் மாவட்டத்து ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி வரலாற்றையே மாற்றி இருக்கிறார் ஜெயலலிதா.

ஒழுங்கு நடவடிக்கை குழு என்ற பெயரில் இருந்த ஐவர் குழு மீது,  அடுத்தடுத்து எடுத்துவரும் நடவடிக்கைகளால் ஒதுக்கப் பட்டுக் கிடந்த சீனியர்கள் புத்துணர்வுக்கு வந்துள்ளனர். வழியில் பார்த்தால் வணக்கம் கூட வைக்கத் தோணாத மனநிலையில் இருந்த தொண்டர்கள் இப்போது, சால்வைகளுடன் 'அந்த' சீனியர்களைத் தேடி வீட்டுக்கே வர ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் சால்வைகளுக்கு சொந்தக் காரர்களாக மாறியிருக்கின்றனர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்க.தமிழ்ச் செல்வன், நயினார்நாகேந்திரன் போன்றோர்.

ஒருகாலத்தில் குருநாதர் திண்டுக்கல் சீனிவாசனின் அன்புக்கு பாத்திரமாக விளங்கிய சாதாரண கட்சித் தொண்டரான விஸ்வநாதன் தான் பிற்காலத்தில் மந்திரி, ஐவர் குழு என்று மள மளவென மாறி நத்தம் விஸ்வநாதனாக உயர்ந்தார். இன்று அவரது மாவட்டத்தில் நத்தம் ஆதரவு பெற்ற ஒருவர்தான் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ளார். நத்தத்தை அரசியலுக்கு கொண்டு வந்து மேலே ஏற்றிவிட்ட  குருநாதர் அதே மாவட்டத்தின் அவைத்தலைவர்.

ஐவர் குழுவின் தலைவரான ஓ.பன்னீர் செல்வத்தை பின்னாளில் மிகவும் மரியாதையாக ஓபிஎஸ் என்று அழைக்கப் படும் அளவுக்கு உருவாக்கிய குருநாதர் தங்க.தமிழ்ச் செல்வன்தான். தோழி சசிகலாவிடம், 'இவர் ரொம்ப, ரொம்ப நல்லவர்' என்று  ஓபிஎஸ்சை அறிமுகம் செய்து வைத்தவரும் இதே தங்க.தமிழ்தான்.   இவரும் திண்டுக்கல் சீனு போல  இன்று மாவட்டத்தின் ஒரு மூலையில் மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளர் என்ற பொறுப்பில் முடங்கிக் கிடக்கிறார். நத்தம், ஓபிஎஸ் ஆகியோரை உருவாக்கிய குருநாதர்கள் இன்று மீண்டும்  கட்சியால் கவனிக்கப் படுகிற நபர்களாக மாறிக் கொண்டு வருகிறார்கள் என்பதையே அடுத்தடுத்த நகர்வுகள் காட்டுகின்றன. 2006- முதல் 2014 வரை சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் எதிலும் இவர்கள் கவனிக்கப் படவில்லை. ஓரளவு இதில் கவனிக்கப் பட்டவர்கள் நயினாரும், செங்கோட்டையனும் மட்டுமே.

வருகிற ஜூன் மாதம் சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), மனோஜ் பாண்டியன் மற்றும் ரபிபெர்னாட் (அதிமுகவினர்) உள்ளிட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதில் தங்க.தமிழ்ச்செல்வனுக்கு (ஏற்கனவே எம்.பி.யாக இருந்து டெல்லியில் அதிமுகவின் தொடர்பு எல்லையை விரிவு படுத்தினார் என்ற நல்ல பெயர் இவருக்கு உள்ளது) ஒரு இடம் தருவது, என்று அதிமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல்  கட்சியில் பொருளாளர் வரை உயர்ந்து பின் சரிந்த திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் ஏழுபேரைக் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கும் வேலைகள்  மாவட்டத்தில் இருந்தே  வேகம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. 

அதேபோல், தமிழகம் முழுவதும் தேர்தல் பணிக்குழுவுக்கு கட்சியில் இருக்கும் சீனியர்களை நியமிக்கும் வேலையும் வேகம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. வேட்பாளர் பெயரை அறிவிக்கும் முன்னரே தேர்தல் பணிக்குழு லிஸ்ட்டை வெளியிட்டு விட்டால், அதற்கேற்ற மனநிலைக்கு தொண்டர்களை தயார் பண்ணி விடலாம் என்பதே அதிமுக தலைமை போட்டு வைத்திருக்கும் கணக்கு. அத்தோடு, தேனி, திண்டுக்கல் ஏரியாக்களில் பொறுப்பில் இருக்கும்  ஓபிஎஸ் ஆதரவாளர்களை கூண்டோடு மாற்றி அறிவிக்கும் வேலையும், சீனு, தங்க.தமிழ் ஆகியோர் கொடுக்கும் புதிய லிஸ்ட்களை கட்சிக்குள் கொண்டு வரும் பணியும் வேகம் பிடித்திருக்கிறது.

இந்த களையெடுப்புகளும், புதிய வரவுகளும் ஒருபுறம் இருக்க சென்னை எழும்பூர், சென்ட்ரல், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை போன்ற இடங்களில் 'தங்கியிருந்து' செயல்படும் ஐவர் ஆதரவுக் குழு குறித்த மொத்த தகவலும் ஒரு பக்கம் கண்காணிப்பு டீமால் சேகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.  "நாம யாருன்னு இந்தத் தேர்தலில் காட்டியே ஆகணும்" என்ற உறுதி மொழி வாங்கிக் கொள்வது அந்த ஆதரவுக் குழுவின் அன்றாடப் பணிகளில் ஒன்றாகும். ஆயிரக் கணக்கில் அப்படி உறுதி மொழிக் கையெழுத்துகள் இதுவரை ஐவர் குழுவால் சேகரிக்கப் பட்டிருக்கின்றனவாம். 

பாம்பின்கால் பாம்பறியும் என்பது போல ஐவரின் 'அசையும், அசையா' விவகாரங்களும், அவர்களின் தொடர்பில் இருக்கிறவர்களின் விவரங்களும் இவ்விரு குருநாதர்கள் மூலமாக இன்னொரு ரூட்டில் சிந்தாமல், சிதறாமல் சேகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக, இந்த நிமிடத்திலிருந்து அதிமுக குருநாதர்களுக்கான களம் என்றாகியுள்ளது...

- ந.பா.சேதுராமன்

அடுத்த கட்டுரைக்கு