Published:Updated:

என் உயிருக்கு ஆபத்து; ரங்கசாமியை எதிர்த்துப் போட்டியிட உள்ள முன்னாள் சேர்மன் பரபர புகார்!

Vikatan Correspondent

புதுச்சேரி:  என்.ஆர்.காங்கிரசில் இருந்து வெளியேறி முதல்வருமான ரங்கசாமியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள புதுச்சேரி  நகரமைப்புக் குழுவின் முன்னாள் தலைவர் கே.எஸ்.பி ரமேஷ் தன் உயிருக்கு ஆபத்து நேரலாம் என தெரிவித்திருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி நகரமைப்புக் குழுவின் தலைவராக இருந்தவர் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த கே.எஸ்.பி.ரமேஷ். தனது பள்ளியில ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கடந்த மூன்று வருடங்களாக இவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. குழந்தைகள் நலப் பாதுகாப்பு அமைப்பின் பரிந்துரையின் பேரில் போக்சோ சட்டத்தில் இவர் மீது வழக்குப் பதியப்பட்டு காவல்துறையால் தேடப்ப்பட்டு வந்தார்.

தொடர்ந்து பல்வேறு சமூக அமைபுகளும் மகளிர் அமைப்புகளும் கே.எஸ்.பி ரமேஷை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தன. அதனால் கே.எஸ்.பி.ரமேஷ் தனது நகரமைப்புக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றிருந்த ரமேஷ் இன்று தனது பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது, “என்.ஆர்.காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்துவிட்டேன். எனது தொகுதியில் கடந்த தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்கு சில நலத்திட்ட உதவிகளை செய்துவந்தேன். அதைப் பொருக்க முடியாமல் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், நியமன எம்.எல்.ஏ என்.எஸ்.ஜே.ஜெயபால், முன்னாள் நகரமன்ற செயலாளர் முருகையன் ஆகியோர் எனக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதமாக அனைத்து செயல்களையும் செய்தனர். என் வளர்ச்சி பிடிக்காத என்.எஸ்.ஜே.ஜெயபால் தூண்டுதலின் பேரில்தான் என் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது அனைத்தும் தெரிந்தும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்கிறார் கட்சித் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி. அதனால்தான் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டேன். மாற்றுக் கட்சியில் சேரும் நிலை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் வரும் தேர்தலில் கண்டிப்பாக கதிர்காமம் தொகுதியில் தேர்தலில் போட்டியிடுவேன். முதல்வர் ரங்கசாமி நின்றாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன். மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். இதனால் எனக்கு மிரட்டல்கள் கண்டிப்பாக வரும். அதனால் தேர்தல்  துறையும் காவல்துறையும் என் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். என் மீதான போடப்பட்ட பொய் வழக்கை நீதிமன்றத்தில் சந்திபேன்” என்றார்.

-ஜெ.முருகன்