Published:Updated:

யார் என் வேட்பாளர்? - வேட்பாளருக்கான தகுதிகள்...

யார் என் வேட்பாளர்? - வேட்பாளருக்கான தகுதிகள்...
யார் என் வேட்பாளர்? - வேட்பாளருக்கான தகுதிகள்...

யார் என் வேட்பாளர்? - வேட்பாளருக்கான தகுதிகள்...

#WhoisMyCandidate
 

ட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலைத் தயாரிப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

யார் என் வேட்பாளர்? - வேட்பாளருக்கான தகுதிகள்...

அ.தி.மு.க., தி.மு.க., விஜயகாந்த் அணி என அனைத்துக் கூட்டணிகளிலும் இளம் வேட்பாளர்கள், புதுமுகங்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று பேசப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள இளம் வாக்காளர்களைக் கவரும் வகையில் இளம் வேட்பாளர்கள் என்ற யுக்தியை அரசியல் கட்சிகள் கையில் எடுத்திருக்கின்றன. வாக்காளர் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ள ஒரு கோடி இளம் வாக்காளர்கள் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இளம் வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்?

வெங்கட் (விவேகானந்தா கல்லூரி): “ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்க வேண்டும் என்றால், அவர் மக்களுடன் நேரடித் தொடர்புடையவராக இருக்க வேண்டும். போட்டியிடும் நபரின் மீது எந்தக் குற்றமும் இல்லாமல் இருப்பது அவசியம். தவறுகள் இல்லாத தலைவரைத் தேர்ந்தெடுப்பதே மிக முக்கியமான ஒன்று.”

கார்த்திக் (திருத்தங்கல் நாடார் கல்லூரி): ‘‘ஓர் அரசியல் கட்சியைச் சார்ந்து வேட்பாளர் முன்னிறுத்தப்பட்டாலும்கூட, அவர் மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பதுதான் என் முதல் எண்ணமாக இருக்கிறது. மக்களுக்கான அரசாங்கம் என்பது மாறி, இப்போது அரசாங்கத்துக்காகத்தான் மக்கள் இருக்கின்றனர் என்ற நிதர்சனம் இங்கே இருக்கிறது. ஒரு வேட்பாளர் சட்டமன்றத்தில் பேசும்போது, தன்னைத் தேர்ந்தெடுக்கும் மக்களுக்காகப் பேச வேண்டும். விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்தும், அதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் பேசக் கூடியவராக இருக்க வேண்டும். ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினால், அதில் உள்ள நன்மைகள் பற்றி மட்டும் யோசிக்காமல், அதன் விளைவுகள் பற்றியும் சிந்தித்து முடிவெடுக்கும் நபராக இருக்க வேண்டும்.”

யார் என் வேட்பாளர்? - வேட்பாளருக்கான தகுதிகள்...

துர்கா (செல்லம்மாள் கல்லூரி): “ஒரு பிரியாணி பொட்டலமும் 100 ரூபாய் பணமும் கொடுத்து ஓட்டு கேட்க வரும் வேட்பாளர், மக்களுக்குக் குறை என்று வரும்போது உதவ முன்வருவது இல்லை. மக்களோடு மக்களாக வாழும் ஒருவர்தான் எங்கள் தொகுதிக்கு வேட்பாளராக வரவேண்டும். முன்பு ஆட்சியில் இருந்தபோது தன் சுயநலத்துக்காகவும், குடும்பத்துக்காகவும் பதவியைத் தவறாகப் பயன்படுத்திய எம்.எல்.ஏ மீண்டும் எங்கள் தொகுதிக்கு வேண்டாம்.”

அபிரக்‌ஷன் (பெரி பொறியியல் கல்லூரி):
“ஒரு தொகுதியில் வேட்பாளராக நிற்கும் ஒருவர், அந்தத் தொகுதியில் இருக்கும் ஊர்களைப் பற்றியும் அங்குள்ள பிரச்னைகள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, சாதி மதம் என்ற பிரிவினையை எந்தத் தருணத்திலும் பிரயோகிக்காமல் இருக்க வேண்டும். ஆண், பெண் என்ற வேறுபாடின்றி எல்லோருடைய ஆலோசனை களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.”

யார் என் வேட்பாளர்? - வேட்பாளருக்கான தகுதிகள்...

சம்சத் (தியாகராயா கல்லூரி): “தலைவர் என்பவர் குறைந்தபட்ச கல்வியறிவு உடையவராக இருத்தல் அவசியம். தொகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., தேர்தல் முடிந்த பிறகு சில நாட்கள் மட்டும் மக்கள் குறைகளைத் தீர்ப்பது மட்டுமின்றி, பதவியில் இருக்கும் காலம்வரை மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்.”

நந்திதா (எஸ்.எஸ்.என். கல்லூரி): “தொகுதி என்பது மிகச் சிறிய இடம். அதில் உள்ள மக்களுக்கு என்ன தேவை, அவர்களுக்கு என்ன பிரச்னை என்று எளிதில் அறிய முடியும். அங்குள்ள மக்களுக்குக் குறைந்தபட்சத் தேவைகளாவது பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.தேர்தலுக்கு முன்பு வாக்குறுதிகளில் தாராளமாக இருக்கும் வேட்பாளர்கள், தேர்தலுக்குப் பின்பு செயலாற்றலில் வெறும் வசனங்கள் பேசுபவர்க ளாகவே இருக்கிறார்கள். வேட்பாளராக ஆக வேண்டும் என்றால், தொகுதியில் அறிமுகம் உள்ள நபராக இருக்க வேண்டும்.”



முகில் தங்கம் (சென்னைப் பல்கலைக்கழகம்):
“தொகுதியில் வேட்பாளராக இருப்பவர், அந்தத் தொகுதியில் இருக்கும் பிரச்னைகளைச் சட்டமன்றத்தில் பேசக் கூடியவராக இருக்க வேண்டும். நேரடியாகப் பார்த்து மக்கள் தங்கள் குறைகளைச் சொல்லும் வகையில் எளிதில் அணுகக் கூடியவராக இருக்க வேண்டும். மக்களுக்காக நேரம் செலவிடும் தலைவராக இருக்க வேண்டும். குறைகளைச் சொன்னால் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை இருக்கும் ஒரு நபர்தான் எம்.எல்.ஏ-வாக எங்கள் தொகுதிக்கு வர வேண்டும்.”

- சு.நந்தினி

அடுத்த கட்டுரைக்கு