Published:Updated:

இளைஞர்கள் சிந்தித்தால் மாற்றம் நிச்சயம்!

இளைஞர்கள் சிந்தித்தால் மாற்றம் நிச்சயம்!
இளைஞர்கள் சிந்தித்தால் மாற்றம் நிச்சயம்!

இளைஞர்கள் சிந்தித்தால் மாற்றம் நிச்சயம்!

நம் விரல்... நம் குரல்! கருத்தரங்கம்
 

இளைஞர்கள் சிந்தித்தால் மாற்றம் நிச்சயம்!

ந்திய தேர்தல் ஆணையம், விகடன் குழுமம், தி சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்கிங் இணைந்து நடத்தும் ‘நம் விரல்... நம் குரல்’ என்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2016 விழிப்பு உணர்வுக் கருத்தரங்கம் மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி நிர்வாக இயக்குநர் அண்ணாமலை ரகுபதி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். வேலூர் ஊரீசு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விழிப்பு உணர்வுக் கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் அருளப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் நந்தகோபால், கோட்டாட்சியர் அஜய் சீனுவாசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இரண்டு கல்லூரிகளிலும் நடைபெற்ற கருத்தரங்கில் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். கருத்தரங்கில் தேர்தல் விழிப்பு உணர்வு குறித்து மாணவ - மாணவிகள் பேசினர். 

கருத்தரங்கில் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, ‘‘அடிப்படை உரிமைகளில் ஒரு முக்கியமான உரிமைதான் வாக்குரிமை. ஒரு காலத்தில், அந்த உரிமைகூட அனைவருக்கும் சமமாக வழங்கப்படவில்லை. உங்கள் உரிமையைப் பற்றி உங்களுக்குத் தெரிய வேண்டும். நம் தேவைகளைச் சரிவர செய்துகொடுப்பதற்கான தலைமையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு உள்ளது. நாம் வெளிநாட்டவர் யாரையும் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நம்மில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறோம். 35 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2011 சட்டமன்றத் தேர்தலில் 69 சதவிகிதமும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 67.6 சதவிகிதமும் வாக்குப்பதிவு ஆகியுள்ளது. 33 சதவிகித மக்கள் ஓட்டு போடவில்லை. ஓட்டு போடாதவர்கள் தங்கள் கடமையைத் தவற விட்டிருக்கிறார்கள். வாக்காளர்கள் அனைவரும் ஓட்டு போட்டால்தான் நீங்கள் விரும்பும் மாற்றங்களின் பிரதிபலிப்புகளைக் காணமுடியும். விதைகளாகிய நீங்கள், செடிகளைச் சரியாக விதைத்தீர்கள் என்றால், மரமும் சரியாகத்தான் வளரும். உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்’’ என்று கூறி அனைவரையும் உறுதிமொழி எடுக்கச் செய்தார்.

இளைஞர்கள் சிந்தித்தால் மாற்றம் நிச்சயம்!
இளைஞர்கள் சிந்தித்தால் மாற்றம் நிச்சயம்!

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் நந்தகோபால், ‘‘அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மாபெரும் போராட்டங்கள் அனைத்தும் மாணவர்களிடமிருந்துதான் தொடங்கியிருக்கும். மாணவர்கள் நினைத்தால் மாற்றத்தை உண்டாக்க முடியும். இந்த முறை பல புதிய இளம் தலைமுறையினர் ஆர்வத்தோடு தங்களை வாக்காளர்களாகப் பதிவுசெய்து கொண்டுள்ளனர். அதே ஆர்வத்தோடு தேர்தலில் பங்கேற்று, கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் நீங்கள் விமர்சித்துப் போடும் மீம்ஸைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். அந்த அளவுக்குக் கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கிறீர்கள். சமூக ஊடகங்களைச் சிறப்பான விழிப்பு உணர்வுக்கும் பயன்படுத்த வேண்டும். தேர்தல் நாளை, விடுமுறை நாளாக நினைக்காமல் மிகப்பெரும் ஜனநாயக நிகழ்வில் நியாயத்துக்கு உட்பட்டு வாக்குகளைச் செலுத்துங்கள்’’ என்றார்.

இளைஞர்கள் சிந்தித்தால் மாற்றம் நிச்சயம்!

இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், ‘‘ ‘மகாத்மா, புத்தர், ஏசு, மகாவீரர் இவர்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன’ என்று ஓர் ஆசிரியர் கேட்டதற்கு, ‘அனைவரும் விடுமுறை நாட்களில் பிறந்துள்ளனர்’ என்றானாம் ஒரு மாணவன். ஆகஸ்ட் 15-யும் ஜனவரி 26-யும் நாம் விடுமுறை நாட்களாகத்தான் பார்க்கிறோம். 200 ஆண்டுகளுக்கு மேல் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா விடுதலையான நாள் ஆகஸ்ட் 15. விடுதலையான இந்தியா, தன்னை ஜனநாயக குடியரசாக அறிவித்துக்கொண்ட நாள் ஜனவரி 26. ‘பணக்காரர்களும் வரிகட்டுபவர்களும் மட்டும் வாக்களித்தால், அது பணநாயகம். இந்தியர்கள் அனைவரும் வாக்களித்தால்தான் ஜனநாயகம்’ என்ற அம்பேத்கரின் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நமக்குக் கிடைத்திருப்பவை இந்த வாக்குகள். நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான அடையாளம், நாம் இந்த நாட்டின் குடிமக்கள். அதை உணர்த்துவது உங்கள் வாக்குரிமைதான்.

இளைஞர்கள் சிந்தித்தால் மாற்றம் நிச்சயம்!

வாக்குரிமை உங்களுடைய பொருளாதார அந்தஸ்து பார்த்துத் தரப்பட்டது அல்ல... வாக்களிக்கப் போகும்போது இதை நினைவில் கொண்டாலே, நீங்கள் யாரும் விலைபோக மாட்டீர்கள். கடந்த காலத்தில் வாக்காளர்கள், வாக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி வந்தனர். ‘18 வயதைத் தொட்ட அனைவரும், தங்கள் பெயரைப் பதிவுசெய்ய வேண்டும்; 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும்; 100 சதவிகிதம் நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும்’ என்று இந்த முறை தேர்தல் ஆணையம் மூன்று முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. நீங்கள் மே 16-ல் அளிக்கப்போகும் வாக்கு சாதாரண வாக்கு அல்ல...  500 ரூபாய்க்கு உங்களை விலைக்கு வாங்கிவிட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சியாளர்கள் 5 ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டினாலும் தட்டிக்கேட்க முடியாது. அந்த உரிமையை இழந்து ஆட்சியாளர்களுக்கு அடிமையாகி விடுகிறோம். மானம் இழந்து கை நீட்டி காசு வாங்கி நம் உரிமையை இழந்துவிடக் கூடாது. உங்கள் முடிவு புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது தண்ணீர், தான் ஏற்கெனவே இருந்த இடத்தைத் தேடி நகரத்துக்குள் வந்தது. கடந்த காலத்தை மறந்துவிட, தண்ணீர் ஒன்றும் தமிழக வாக்காளர் கிடையாது. 1947-க்கு முன்பு சிறைக்குப் போனவர்கள் மந்திரியானார்கள். இப்போது மந்திரியானவர்கள் சிறைக்குப் போகிறார்கள். இதுவா சமூக நீதி?

இளைஞர்கள் சிந்தித்தால் மாற்றம் நிச்சயம்!

நீங்கள் விரும்புகின்ற கல்வி வேண்டும் என விரும்பினால்... நீங்கள் படித்த கல்விக்கு வேலை வேண்டும் என விரும்பினால்... எதற்கும் யார் காலிலும் போய் விழாமல் சுய மரியாதையோடு கம்பீரமாக வாழ விரும்பினால் அதற்கு ஒரே ஒரு வழி தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பது. இளைஞர்கள் சிந்தித்தால் மாற்றம் நிச்சயம். வாக்குச்சாவடிக்குப் பெரு வெள்ளமாய்த் திரண்டு சென்று உங்கள் பங்கை அளியுங்கள்” என்றார்.

நிகழ்ச்சியில் மாதிரி வாக்குப்பதிவு அமைத்து விழிப்பு உணர்வு ஊட்டப்பட்டது.

- அ.அச்சணந்தி, மு.சித்தார்த்
படங்கள்: சொ. பாலசுப்ரமணியன், ச.வெங்கடேசன்
 

அடுத்த கட்டுரைக்கு