Published:Updated:

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?
அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

முட்டிமோதும் பிரமுகர்கள்...
 

ரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க-வில் யார் யார் சீட் கேட்கிறார்கள்? யார் யாருக்கு வாய்ப்பு என்பது பற்றிய விவரங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இந்த இதழில்...

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

திருவள்ளூர் மாவட்டம்

கும்மிடிப்பூண்டி: முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சக்குபாய், விஜயகுமார் உட்பட பலர் ரேஸில் இருக்கிறார்கள். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ரவிச்சந்திரனுக்கு சீட் வாய்ப்பு உள்ளது.

பொன்னேரி (தனி): சிட்டிங் எம்.எல்.ஏ-வான பொன் ராஜா, மாவட்டச் செயலாளர் சிறுனியம் பலராமன் ஆகியோர் கடும் முயற்சியில் இருக்கிறார்கள்.

திருத்தணி: கடந்த முறை இங்கு வெற்றிபெற்ற தே.மு.தி.க எம்.எல்.ஏ-வான அருண் சுப்பிரமணியன், இப்போது அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டார். இவர், திருத்தணி தொகுதியைக் கேட்டு வருகிறார். ஒன்றியச் செயலாளர் நரசிம்மன், மாவட்ட கவுன்சிலர் குமார், ஒன்றியக் குழுத் தலைவர் ரவி, ஒன்றிய அவைத்தலைவர் தாண்டவராயன் ஆகியோரும் ரேஸில் இருக்கிறார்கள்.

திருவள்ளூர்: அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட ரமணா, இந்த முறையும் தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையில் இருந்த கமாண்டோ பாஸ்கரன், நகரச் செயலாளர் கந்தசாமி ஆகியோரும் கடும் முயற்சியில் இருக்கிறார்கள்.
பூந்தமல்லி (தனி): சிட்டிங் எம்.எல்.ஏ-வான மணிமாறன், தொகுதிச் செயலாளர் ஏழுமலை, அரசு வழக்கறிஞர்கள் சௌந்திரராஜன், அந்தமான் முருகன், ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட சிறுபான்மைப் பிரிவு பொருளாளர் ஜெயவேல், பாரிவாக்கம் வைத்தியநாதன், ஒன்றியத் துணைத் தலைவர் ரவீந்திரநாத் ஆகியோர் ரேஸில் உள்ளனர். இது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால், டாக்டர்  அமலதீபாவுக்குக் கிடைக்கலாம்.

ஆவடி: சிட்டிங் எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான அப்துல்ரஹீம் இந்த முறையும் சீட் கேட்கிறார். முன்னாள் நகரச்செயலாளர் புலவர் சோமுசாவின் மகனும், நகர இளைஞர் அணி துணைச் செயலாளருமான அசன் அலி, பேச்சாளர் ஆவடிகுமார், நகரச் செயலாளர் தீனதயாளன், திருவேற்காடு சீனிவாசன் ஆகியோர் வாய்ப்புக் கேட்டுள்ளனர்.

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

மதுரவாயல்: மாவட்ட இணைச் செயலாளர் பொன்னுரங்கம், மாவட்ட துணைச் செயலாளர் உமாசந்திரன் ஆகியோர் சீட் கேட்டுள்ளனர். ஜெயலலிதா நடத்திய நேர்காணலில் பங்கேற்ற துணை மேயர் பெஞ்சமினுக்கு சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அம்பத்தூர்: சிட்டிங் எம்.எல்.ஏ-வான வேதாச்சலம் இந்த முறையும் சீட் கேட்டுள்ளார். அம்பத்தூர் முன்னாள் நகரச் செயலாளராக இருந்து கொலை செய்யப்பட்ட ரவியின் மனைவி சசிகலா, மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் அலெக்ஸாண்டர் உட்பட பலர் சீட் வாங்க மோதுகிறார்கள். அலெக்ஸாண்டருக்கு வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள்.

மாதவரம்: சிட்டிங் எம்.எல்.ஏ-வான மாதவரம் மூர்த்தி, இந்த முறையும் வாய்ப்புக் கேட்டுள்ளார். மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன், மாவட்ட இணைச் செயலாளர் காட்டுப்பாக்கம் ராஜகோபால், கார்மேகம், பாடியநல்லூர் பார்த்திபன் உள்ளிட்டோரும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

திருவொற்றியூர்: சிட்டிங் எம்.எல்.ஏ-வான குப்பனின் சகோதரர் கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ-வான ஆறுமுகம் பால்ராஜ், சுமித்ரா ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள்.

சேலம் மாவட்டம்

கெங்கவல்லி (தனி): மாவட்ட கவுன்சிலர்கள் மாரிமுத்து, இளங்கோவன், தொகுதிச் செயலாளர் வெள்ளையூர் பாண்டியன், தம்பம்பட்டி பேரூராட்சித் தலைவர் பாலசுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ-வான அழகம்மாள் உட்பட பலர் விருப்ப மனு அளித்துள்ளனர். மாரிமுத்து, இளங்கோவன் ஆகியோருக்கு இடையே சீட் பெறுவதில் கடும் போட்டி நடக்கிறது.

ஆத்தூர் (தனி):
சிட்டிங் எம்.எல்.ஏ-வான மாதேஸ்வரன், ஆத்தூர் யூனியன் சேர்மன் சின்னத்தம்பி, உமாராணி பிச்சைக்கண்ணன், நகர்மன்ற குழுத் தலைவர் இளையராஜா, ராசிபுரம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும் சட்டமன்ற சபாநாயகருமான தனபால், சங்ககிரி தொகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி-யான சரோஜா உட்பட பலர் வாய்ப்பை எதிர்பார்க்கிறார்கள். தனபால், சின்னத்தம்பி ஆகியோருக்கு சீட் வாய்ப்பு இருக்கிறது.

ஏற்காடு (தனி): இந்தத் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ பெருமாள் மாரடைப்பால் மரணம் அடைந்ததால், அவரது மனைவி சரோஜா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சரோஜா மீண்டும் சீட் கேட்கிறார். சரோஜாவின் மகன் ராஜேஷ்கண்ணா, முன்னாள் எம்.எல்.ஏ-வான இளையகண்ணு, மாவட்ட கவுன்சிலர் தங்கமணி, ஜெயவீரன் எனப் பலரும் விருப்ப மனுக் கொடுத்துள்ளனர். ராஜேஷ்கண்ணா, தங்கமணி இருவருக்கும் கடும் போட்டி நடக்கிறது.

ஓமலூர்: சிட்டிங் எம்.எல்.ஏ-வான பல்பாக்கி கிருஷ்ணன், கழக அமைப்புச் செயலாளர் செம்மலை, நகரச் செயலாளர் சரவணன், ஊராட்சி மன்றச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஈஸ்வரி, மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் சுந்தரராஜன் உட்பட பலர் முயற்சி செய்கிறார்கள். செம்மலைக்கு சீட் கிடைக்கும் என்கிறார்கள்.

மேட்டூர்: நகராட்சித் தலைவர் லலிதா சரவணன், மாவட்ட அவைத் தலைவர் குருசாமி, நகரச் செயலாளர் சந்திரசேகரன், முன்னாள் சேர்மன் கந்தசாமி, தொகுதிச் செயலாளர் கலையரசன், வீராசம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் கண்ணன், பஸ் அதிபர் பன்னீர்செல்வம் உட்பட பலர் சீட் கனவில் இருக்கிறார்கள். லலிதா சரவணனுக்கு வாய்ப்பு இருப்பதாகப் பேச்சு உள்ளது.

எடப்பாடி:
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதி. மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். எடப்பாடி ஒன்றிய சேர்மன் மாதேஸ்வரன், எடப்பாடி யூனியன் சேர்மன் மாதேஷ், கொங்கணாபுரம் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், கொங்கணாபுரம் ஒன்றிய சேர்மன் மணி, தங்காயூர் ஊராட்சி மன்றத் தலைவர் பாலாஜி, மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர் சுரேஷ், முன்னாள் எம்.எல்.ஏ-வான கணேசன் உட்பட பலரும் விருப்பமனுக் கொடுத்துள்ளனர். ஆனாலும், எடப்பாடி பழனிச்சாமிக்கே மீண்டும் சீட் கிடைக்க  வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

சங்ககிரி: சிட்டிங் எம்.எல்.ஏ-வான விஜயலட்சுமி பழனிச்சாமி, சேலம் வடக்குத் தொகுதிக்குத் தாவ விரும்புகிறார். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் சின்னக்கண்ணு, கொங்கணாபுரம் ஒன்றியப் பேரவைச் செயலாளர் மணி, மகுடஞ்சாவடி ஒன்றியச் செயலாளர் ராஜா, வீரபாண்டி ஒன்றியத் துணை பெருந்தலைவர் அமுதா அருணாசலம் உட்பட பலரும் விருப்பமனுக் கொடுத்துள்ளனர்.

சேலம் மேற்கு: சிட்டிங் எம்.எல்.ஏ-வான வெங்கடாசலம், காங்கிரஸில் இருந்து வந்த ஆர்.ஆர்.சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் பாலு, முன்னாள் பகுதிச் செயலாளர் செல்வராஜ், மேற்குத் தொகுதி கழகச் செயலாளர் பாண்டியன் உட்பட பலர் களத்தில் இருக்கிறார்கள். பாலுவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

சேலம் வடக்கு: சங்ககிரி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான விஜயலட்சுமி பழனிச்சாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஐயப்பமணி, அஸ்தம்பட்டி மண்டலக் குழு தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பாசறைச் செயலாளர் சதீஷ்குமார், கவுன்சிலர் பாமா கண்ணன் உட்பட பலரும் சீட் வாங்க முயற்சி செய்கிறார்கள். விஜயலட்சுமி பழனிச்சாமிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

சேலம் தெற்கு: சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் செல்வராஜு. மீண்டும் சீட் கேட்கிறார். புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ-வான ரவிச்சந்திரன், மாநகர் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கோட்டை பாபு, மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், முன்னாள் எம்.எல்.ஏ-வான வெங்கடாசலம் உட்பட பலரும் சீட்டுக்காக முட்டி மோதுகிறார்கள். இளங்கோவனுக்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

வீரபாண்டி: சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் எஸ்.கே.செல்வம். மீண்டும் சீட் கேட்கிறார். ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் மெடிக்கல் ராஜா, மாவட்ட கவுன்சிலர் மணிகண்டன், எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் கே.டி.பழனிச்சாமி, வீரபாண்டி தொகுதிச் செயலாளர் ராஜமாணிக்கம், தொகுதி இணைச் செயலாளர் அருணாசலம் உட்பட பலரும் சீட்டுக்காகப் படை எடுக்கிறார்கள். செல்வத்துக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம்

ராசிபுரம் (தனி): சட்டமன்ற சபாநாயகர் தனபால் தொகுதி இது. சீட் பெற பலர் விருப்ப மனுக் கொடுத்துள்ளபோதிலும் மாநில அமைப்புச் செயலாளர் சேவல் ராஜு, முன்னாள் எம்.எல்.ஏ-வான அன்பழகன், முன்னாள் எம்.பி-யான சரோஜா ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

சேந்தமங்கலம் (தனி): கொல்லிமலை ஒன்றியச் செயலாளர் சந்திரன், தொகுதிக் கழகச் செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட இணைச் செயலாளர் கலாவதி, இளைஞர் அணி இணைச் செயலாளர் வக்கீல் ரமேஷ் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். சந்திரனுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

நாமக்கல்: சிட்டிங் எம்.எல்.ஏ-வான பாஸ்கரன், மாவட்டப் பொருளாளர் காளியப்பன், எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் காந்தி முருகேசன், நகர்மன்றத் தலைவர் கரிகாலன், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் பாவலர் முத்துச்சாமியின் மகள் டாக்டர் திருமொழி உட்பட பலர் மோதுகிறார்கள். காளியப்பனுக்கு சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

பரமத்திவேலூர்:
அ.தி.மு.க-வின் கூட்டணியில் இருக்கும் கொங்கு இளைஞர் பேரவை தனியரசுதான் சிட்டிங் எம்.எல்.ஏ. கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் சாமிநாதன், மாவட்டத் துணைச் செயலாளர் இன்பத் தமிழரசி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் வைரம் தமிழரசி, தொகுதிக் கழகச் செயலாளர் ராஜேந்திரன் என பலர் முயற்சி செய்கிறார்கள். சாமிநாதனுக்கே வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்கிறார்கள்.

திருச்செங்கோடு:
நகர்மன்றத் தலைவர் பொன்.சரஸ்வதி, தொகுதி கழகச் செயலாளர் சபரி தங்கவேல் ஒன்றியச் செயலாளர் பாலசுப்ரமணியம், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் வக்கீல் சந்திரசேகர் உட்பட பலர் முயற்சியில் இருந்தாலும், பொன்.சரஸ்வதி அல்லது பொன்னையனுக்கு சீட் வாய்ப்பு உள்ளது.

குமாரபாளையம்: அமைச்சர் தங்கமணியின் தொகுதி. குமாரபாளையம் நகர சேர்மன் சிவசக்தி தனசேகரன், முன்னாள் நகரச் செயலாளர் குமணன், தொகுதி கழகச் செயலாளர் சுப்ரமணியம், யூனியன் சேர்மன் செந்தில் உட்பட பலர் விருப்பமனுக் கொடுத்துள்ளனர். தங்கமணிக்கே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

அடுத்தது..?

- வீ.கே.ரமேஷ், எஸ்.மகேஷ், அ.சையதுஅபுதாஹிர்
படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார்

அடுத்த கட்டுரைக்கு