Published:Updated:

ஜெயலலிதாவை திருமா எதிர்த்து நிற்க இதுதான் காரணம்...! -அதிரப் போகும் ஆர்.கே.நகர்

ஜெயலலிதாவை திருமா எதிர்த்து நிற்க இதுதான் காரணம்...! -அதிரப் போகும் ஆர்.கே.நகர்
ஜெயலலிதாவை திருமா எதிர்த்து நிற்க இதுதான் காரணம்...! -அதிரப் போகும் ஆர்.கே.நகர்

ட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்கப் போகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. 'தி.மு.கவின் சிம்லா முத்துச் சோழனைவிடவும், சிறுத்தைகள் வலுவான இடத்தைப் பிடிப்பார்கள்' என நம்புகிறார் திருமாவளவன்.

மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா ஆகிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிகப்பட்டு வருகின்றன. த.மா.கா, தே.மு.தி.க, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்றுதான் விருப்ப மனு வாங்குகிறார் அதன் தலைவர் தொல்.திருமாவளவன். நாளைக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, ஞாயிறு அன்று 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறார் திருமா.

"சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி என்றாலும், அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. வெற்றி வாய்ப்பு குறைவு என்று தெரிந்தே ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியை குறிவைப்பது ஏன்?" என்ற கேள்வியை வி.சி கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்.

" தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மக்கள் நலக் கூட்டணியில் தீவிரமாக நடந்தபோது, ஆர்.கே.நகர் தொகுதியில் யார் போட்டியிடுவது என்ற கேள்வி எழுந்தது. தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் பின்வாங்கியபோதும், 'ஆர்.கே.நகரில் போட்டியிட சிறுத்தைகள் தயார்' என அறிவித்தார் திருமா. இதில், கூட்டணிக் கட்சியினர் ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள். திருமாவின் இந்த முடிவுகளுக்குப் பின்னால் சில காரணங்களும் இருக்கின்றன. முதலமைச்சர் வேட்பாளரை எதிர்க்கிறோம் என்றால், அரசியல் அரங்கில் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான மக்கள் நலக் கூட்டணி என்ற கருத்து விதையை திருமாதான் விதைத்தார். ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு எதிராக முதன்முறையாக மெகா கூட்டணி ஒன்று களமிறங்குகிறது. அதன் சார்பாக, ஒருவர் முதல்வரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பதே வரலாறுதானே. ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கான தலைவர் என்ற அடையாளத்தையும் தாண்டி, மெயின் ஸ்ட்ரீம் அரசியலில் கால் பதிக்க நினைக்கிறார் திருமா. அதற்காகத்தான் பொதுத் தொகுதியில் நாங்கள் போட்டியிடவும் முன்வந்தோம்.

கடந்த தேர்தலில், சோழிங்கநல்லூர் தொகுதியை தி.மு.க எங்களுக்கு ஒதுக்கியது. அதுதான் சென்னை புறநகரில் நாங்கள் போட்டியிட்ட முதல் தொகுதி. சென்னைக்குள் இதுவரையில் சிறுத்தைகள் போட்டியிட்டதில்லை. வடபுலத்தில் பத்து தொகுதிகளை ஒதுக்குவார்கள். அதைத்தாண்டி நாங்கள் வெளியே வந்ததில்லை. இப்போதுதான் பரவலாகப் போட்டியிடுகிறோம். ஆர்.கே.நகரில் சிறுத்தைகள் சார்பில் யார் போட்டியிடப் போகிறார்? என்பதை மிகுந்த சஸ்பென்சோடு வைத்திருக்கிறார் திருமா. ஜெயலலிதாவை எதிர்க்கப் போகிறவர் தொகுதிக்குள் வலிமையானவராக இருக்க வேண்டும் எனவும் அவர் நினைக்கிறார். தி.மு.கவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்தாலே, மாபெரும் வெற்றி எனக் கணக்குப் போடுகிறார் திருமா" என விவரித்தார் அவர்.

இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸிடம் பேசினோம்.

" முதலமைச்சர் வேட்பாளரை எதிர்த்து களமிறங்குவது சிறுத்தைகளுக்கு கூடுதல் உற்சாகத்தைத் தரும். எங்கள் வலிமையை ஆர்.கே.நகரில் நிரூபிப்போம். ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் நிறைந்திருக்கக் கூடிய பகுதி அது. வெள்ளத்தால் ஆர்.கே.நகர் பகுதி மக்கள் கொடுமையான துன்பத்தை அனுபவித்தார்கள். அவர்களுக்கு ஆதரவாகக்கூட ஆட்சியாளர்கள் குரல் எழுப்பவில்லை. இர்பான் என்ற பள்ளி மாணவர் வெள்ளத்தின் பாதிப்பால் இறந்துபோனபோது, முதல்முறையாக அந்தக் குடும்பத்தை சந்தித்து நிதியுதவி அளித்தார் தோழர்.திருமா. இர்பான் என்ற மாணவரின் மரணத்தை வெளியுலகின் வெளிச்சத்திற்குக் கொண்டு போனது திருமா அவர்கள் மட்டும்தான். எங்களுக்கு அனைத்து வகைகளிலும் சாதகமாக இருக்கக் கூடிய தொகுதி ஆர்.கே.நகர். இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத அதிரடியை சிறுத்தைகள் நிகழ்த்துவார்கள்" என்றார் உணர்வுபூர்வமாக.

திருமாவிடம் 'மோதிரக்' கையால் குட்டு வாங்கும் அதிர்ஷ்டம் எந்த வேட்பாளருக்குக் கிடைக்கப் போகிறதோ? என ஆர்வமாக இருக்கிறார்கள் வி.சி.கவினர்.

-ஆ.விஜயானந்த்