Published:Updated:

'வைகோவுக்கும் திருமாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்...!' -தெறிக்க வைத்த தொகுதிப் பரிமாற்றம்

'வைகோவுக்கும் திருமாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்...!' -தெறிக்க வைத்த தொகுதிப் பரிமாற்றம்
'வைகோவுக்கும் திருமாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்...!' -தெறிக்க வைத்த தொகுதிப் பரிமாற்றம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீது மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் காட்டும் பாசம் அசர வைக்கிறது. 'கூட்டணியின் மிக மோசமான தலைவராக வைகோவும், பெருந்தன்மையான தலைவராக திருமாவும் இருந்ததுதான் காரணம்' என்கின்றனர் இடதுசாரிகள்.

மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. யார் யார் எங்கு போட்டியிடுவது? என அனைத்தையும் முடிவு செய்துவிட்டனர். ஓரிரு நாட்களில் தனது வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன். இந்நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், "தொகுதிப் பங்கீட்டில் சிறு மாற்றம் செய்துள்ளோம். திரு.வி.க நகர் தொகுதியில் வி.சி.க போட்டியிடுவதாக இருந்தது. அதை மாற்றி, திரு.வி.க நகரில் நாங்களும், அரூர் தொகுதியில் வி.சி.கவும் போட்டியிடுகிறது" என்றார். ஜி.ஆரின் இந்த ஸ்டேட்மெண்ட் ரொம்பவே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், அரூர் தொகுதி சி.பி.எம்மின் சிட்டிங் தொகுதி. அதை அவ்வளவு எளிதாக திருமாவுக்கு விட்டுக் கொடுத்ததை அரூர் மார்க்சிஸ்ட்டுகள் எதிர்பார்க்கவில்லை. இதைப் போலவே, கள்ளக்குறிச்சி தொகுதியை திருமாவுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். இரண்டு பலம் வாய்ந்த தொகுதிகளை எளிதாகக் கேட்டுப் பெற்றதில் அளவுகடந்த உற்சாகத்தில் இருக்கிறார் திருமா.

'இதற்கு என்ன அரசியல் காரணம் இருக்கிறது?' என்ற கேள்வியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "அரூர் தனித் தொகுதியில் சி.பி.எம் கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ டில்லிபாபு இருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் போட்டியிட்டது. தி.மு.க கூட்டணியில் வி.சி.கவின் நந்தன் போட்டியிட்டார். இதில், சி.பி.எம் கட்சி 77,516 வாக்குகளும், வி.சி.கவின் நந்தன் 50,812 வாக்குகளும் வாங்கினார். இந்தத் தொகுதியில் சிறுத்தைகள் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். இந்தமுறை சி.பி.எம் கட்சிக்கே அரூர் தொகுதி போனதால், அந்தப் பகுதியைச் சேர்ந்த வி.சி.க தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மசங்கடமான இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது? எனத் தெரியாமல் தவித்தார் திருமா. இதைப் பற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார்.

அரூர் தொகுதியில் சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தை உணர்ந்த ஜி.ராமகிருஷ்ணன், திருமாவிடம், 'உங்கள் கட்சித் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களுக்கு ஒதுக்கிய திரு.வி.க. நகர் தொகுதியில் நாங்கள் போட்டியிடுகிறோம். எங்களின் அரூர் தொகுதியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார். ஜி.ஆரின் இந்தப் புரிதலை திருமா சற்றும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் நெகிழ்ச்சியான தருணங்களாக அவை இருந்தன. அதேபோல், கள்ளக்குறிச்சி தனித் தொகுதியில் வி.சி.க தொண்டர்களின் பிடிவாதத்தைப் பார்த்த, கேப்டனும், 'திருமாவுக்காக விட்டுக் கொடுக்கலாம்' என்று சொல்லி, அதையும் விட்டுக் கொடுத்தார். கூட்டணிக்குள் அமைதியாகவே சாதித்தார் திருமா. வெற்றி பெறக் கூடிய இரண்டு தொகுதிகளும் எங்களுக்குக் கிடைத்ததில் ரொம்பவே மகிழ்ச்சி" என்றார் உற்சாகத்தோடு.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய மக்கள் நலக் கூட்டணியின் நிர்வாகி ஒருவர், "தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தனக்கு வேண்டிய தொகுதிகளை விடாப்பிடியாகப் பிடுங்கிக் கொண்டார் வைகோ. இதில் பல தொகுதிகளை மனமில்லாமல்தான் தலைவர்கள் விட்டுக் கொடுத்தனர். வைகோவின் செயல்பாட்டை தே.மு.தி.கவும் ரசிக்கவில்லை. கூட்டணியின் மற்ற தலைவர்களும் விரும்பவில்லை. ஆனால், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கியது முதல், திருமா அனுசரித்தே போனார். தனக்காக என்று அவர் எதையும் விடாப்பிடியாகக் கேட்கவில்லை. 'முப்பது சதவீதம் அளவுக்குப் பொதுத் தொகுதியில் போட்டியிட வேண்டும்' என்பதுதான் அவருடைய விருப்பமாக இருந்தது. சுதீஷ், ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்கள்கூட சில தொகுதிகளில் பிடிவாதம் காட்டினார்கள். ஆனால், திருமா அப்படி எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. இடதுசாரிகள் திருமா மீது பாசம் வைக்க இதுதான் காரணம். ஆனால், வைகோ பொதுக்கூட்ட மேடைகளில்கூட வி.சி.கவின் தொண்டர்களை தன்பக்கம் இழுப்பதில் ரொம்பவே ஆர்வம் காட்டினார்.

'பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது' என திருமாவை முன்னிறுத்தி மாமண்டூரில் பேசும்போது, விசில் பறந்தது. வி.சி.கவின் தொண்டர் பலத்தை தனக்கு ஆதரவாகத் திருப்புவதில் வைகோவுக்கு அப்படி என்ன ஆர்வமோ தெரியவில்லை. திருமாவுக்கு விட்டுக் கொடுத்ததைப் போல, வைகோ சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என இப்போது கேட்டிருந்தால், நிச்சயமாக மற்ற தலைவர்கள் விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு வைகோவின் செயல்பாடுகள் இருந்தன. தொகுதிப் பங்கீட்டில் மிக மோசமான தலைவராக வைகோ இருந்தார். மிகப் பெருந்தன்மையான தலைவராக திருமா இருந்தார். அவருக்காக தொகுதியை விட்டுக் கொடுப்பதை தே.மு.தி.கவும் சி.பி.எம்மும் சிரமமாகவே கருதவில்லை. மிகுந்த உற்சாகத்தோடுதான் கொடுத்தார்கள்" என்றார் அவர்.

'விட்டுக் கொடுத்தல் எப்போதுமே வெற்றியைக் கொடுக்கும்' என்பதை அரசியல் தளத்தில் திருமா நன்றாகவே உணர்ந்திருக்கிறார் போல.

ஆ.விஜயானந்த்