Published:Updated:

'விஜயகாந்தை ஜெயலலிதா விமர்சிக்காதது ஏன்?' -அதிர வைக்கும் 10 காரணங்கள்

'விஜயகாந்தை ஜெயலலிதா விமர்சிக்காதது ஏன்?' -அதிர வைக்கும் 10 காரணங்கள்

'விஜயகாந்தை ஜெயலலிதா விமர்சிக்காதது ஏன்?' -அதிர வைக்கும் 10 காரணங்கள்

ட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் தகித்துக் கொண்டிருக்கிறது. வெப்பத்தின் உச்சத்தைக்கூட பொருட்படுத்தாமல் தலைவர்கள் பேச்சைக் கேட்பதற்கு மக்கள் திரள்கிறார்கள் அல்லது திரட்டப்படுகிறார்கள்.

அரசியல் தலைவர்களின் குற்றச்சாட்டுகளில் அனல் பறக்கிறது. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசும் ஜெயலலிதா, தி.மு.க, காங்கிரஸ் அணியை மட்டுமே குறி வைத்துத் தாக்குகிறார். தன்னை விமர்சித்த மத்திய அமைச்சர்களைக்கூட கடுமையாகத் தாக்கிப் பேசுகிறார். ஆனால், அ.தி.மு.க, தி.மு.கவுக்கு எதிராகத் திரண்டிருக்கும் மக்கள் நலக் கூட்டணியை விமர்சிக்காமல் கடந்து போவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. 'மக்கள் நலக் கூட்டணியை ஜெயலலிதா ஒரு பொருட்டாகவே கருதவில்லையா?' என்ற கேள்வி சகலமட்டத்திலும் எழுகிறது. குறிப்பாக, அ.தி.மு.க அரசின் மீது விஜயகாந்தும் பிரேமலதாவும் வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு சிறு முணுமுணுப்பைக் கூட ஜெயலலிதா வெளியிடவில்லை. என்ன காரணம்?

2006 சட்டமன்றத் தேர்தலில், விஜயகாந்தின் எழுச்சியைப் பார்த்து ஜெயலலிதா மிரண்டார். தனித்துப் போட்டியிட்டு எட்டு சதவீத வாக்கு வாங்கியதும், பெரும்பாலான தொகுதிகளில் ஐந்தாயிரம், பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர்கள் தோற்றுப் போனதற்கும் விஜயகாந்த்தான் காரணம் என்பதை அறிந்து அதிர்ந்து போனார். அதன்பிறகு வந்த உள்ளாட்சித் தேர்தலில் வைகோவுக்கு பதினைந்து சதவீத இடங்களை ஒதுக்கி ஆச்சர்யப்படுத்தியது அ.தி.மு.க தலைமை. அதன் தொடர்ச்சியாக, மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் 'ஒருநாள் பிரசாரம்' எனத் திட்டமிட்டிருந்த ஜெயலலிதா, 'விஜயகாந்த் பிரதான இடத்திற்கு வந்துவிடக் கூடாது' என்பதற்காக, மூன்று நாள் பிரசாரம் செய்தார். இவையெல்லாம் கேப்டனைப் பார்த்து ஜெயலலிதா மிரண்டு போன காலங்கள். கடந்த தேர்தலில் 41 இடங்கள் வாங்கியதன் மூலம் தே.மு.தி.க சரிந்துவிட்டது எனக் கருதுகிறார் ஜெயலலிதா.

இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க வாங்கிய பொதுவான வாக்குகளின் வித்தியாசம்தான். தி.மு.கவைக் காட்டிலும் அ.தி.மு.கவுக்கு உயர்ந்த வாக்கு சதவீதம்தான் ஜெயலலிதாவின் மனமாற்றத்திற்கு அதிரடி காரணம். எம்.ஜி.ஆர் காலத்தில்கூட வாங்காத ஓட்டு சதவீதம்,  அ.தி.மு.க தலைமையை கொஞ்சம் அசர வைத்துவிட்டது. விஜயகாந்தை தள்ளி வைக்க பிரதான காரணமாக இது அமைந்தது.

அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தல் தொடங்குவதற்குள்,  அ.தி.மு.க தலைமையோடு நாக்கைத் துருத்திக் கொள்ளும் அளவுக்கு முரண்பட்டார் விஜயகாந்த். அவருடைய இமேஜை மக்கள் மத்தியில் காலி செய்வதற்கான பிரதான ஆயுதமாக இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டார் ஜெயலலிதா. சட்டமன்றத்தில் கேப்டன் நாக்கைத் துருத்தும் காட்சிகளை தெருவுக்குத் தெரு கொண்டு போகும் அளவுக்கு வீரியமாகச் செயல்பட்டது செய்தி மக்கள் தொடர்புத் துறை. கூட்டணியில், 'கறுப்பு எம்.ஜி.ஆர் தயவு தேவை' என வலிய வந்த அ.தி.மு.க தலைமை, அந்த இமேஜை முழுதாக டேமேஜ் செய்துவிட்ட மகிழ்ச்சியில் பூரித்தது. இதற்கு விஜயகாந்த்தின் இயல்பான செயல்பாடுகளே களம் அமைத்துக் கொடுத்தன. உள்ளாட்சித் தேர்தலில் கடுமையான தோல்வியை சந்தித்தது தே.மு.தி.க. இதற்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 400 கவுன்சிலர்கள் வரையில் தே.மு.தி.க பெற்றிருந்தது.

அ.தி.மு.க தலைமையோடு ஏற்பட்ட நேரடி மோதலையடுத்து, தே.மு.தி.கவை மண்ணைக் கவ்வ வைக்கும் பல வேலைகள் நடந்தன. உதாரணமாக, சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தே.மு.தி.க நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. தி.மு.க எதிர்ப்பைவிட, தே.மு.தி.கவுக்கு எதிராக செயல்பட்டால் அம்மா சந்தோஷப்படுவார் என ரத்தத்தின் ரத்தங்கள் கடுமையாக உழைத்தார்கள். 2011 தேர்தலில்,  தி.மு.கவை பின்னுக்குத் தள்ளி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தைப் பெற்றார் விஜயகாந்த். இதை முறியடிக்க மாஃபா பாண்டியராஜன், தமிழழகன், மதுரை சுந்தர்ராஜன், சேந்தமங்கலம் சாந்தி, அருண்பாண்டியன் என குறிப்பிடத்தகுந்த தே.மு.தி.க எம்.எல்.ஏக்களை தன்பக்கம் இழுத்தது அ.தி.மு.க தலைமை. கட்சி தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாள் முன்பு அவர்களை ராஜினாமா செய்ய வைத்தார் ஜெயலலிதா. இதனால், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தும் பறிபோனது என செய்தியைப் பரப்பியது செய்தி மக்கள் தொடர்புத்துறை.

2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 'மோடியா... லேடியா?' என்ற பிரசாரத்தை முன்னெடுத்ததில், ஒரு இடத்தைக்கூட பெற முடியாமல் மோசமான தோல்விக்குத் தள்ளப்பட்டார் விஜயகாந்த். அ.தி.மு.க தலைமை முன்வைத்த வளர்ச்சி கோஷத்தால், தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் ஒரு இடம்கூட வெற்றி பெற முடியவில்லை. இதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்த ஜெயலலிதா, 'இனி விஜயகாந்த் அவ்வளவுதான்' என்ற இறுதி முடிவுக்கு வந்துவிட்டார். தவிர, ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டி போடாமல்,  டெல்லியில் தி.மு.க எம்.பி. சிவா உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களை வைத்துக் கொண்டு, 'தூக்கி அடிச்சிருவேன்' என விஜயகாந்த் காமெடி செய்தது கூடுதல் சோகம். ஒருகாலத்தில் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த விஜயகாந்த், ஏற்காட்டிலும், ஸ்ரீரங்கத்திலும் அ.தி.மு.கவை எதிர் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இதற்கு ஜெயலலிதாவின் தனிப்பட்ட வியூகங்களே காரணமாக அமைந்தன.

பத்து வருடங்களுக்கு முன்பு பலசாலியாகக் கருதப்பட்ட விஜயகாந்த், ' அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததால், அ.தி.மு.க எதிர்ப்பு ஓட்டுக்களை இழந்தார். பா.ஜ.கவோடு அணி அமைத்ததால், கிறிஸ்துவ, முஸ்லிம் சிறுபான்மை ஓட்டுக்களை இழந்தார். பா.ம.கவுடன் கூட்டு வைத்ததால் தலித் வாக்குகளையும் இழந்துவிட்டார். இப்போது திருமாவோடு அணி சேர்ந்ததால், வன்னியர் வாக்குகளும் அவருக்குக் கிடைக்கப் போவதில்லை' என தேர்தல் கணக்குப் போடுகிறார் ஜெயலலிதா. 'மக்கள் நலக் கூட்டணி என்பது புதிய அணி அல்ல. தி.மு.க, அ.தி.மு.க என மாறி மாறி கூட்டணி சவாரி செய்து தோல்வியுற்ற சில கட்சிகளின் அணி' என்றுதான் பார்க்கிறார் ஜெயலலிதா. அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகளை இவர்கள் பிரித்தாலும், அது தி.மு.கவுக்கு மட்டுமே சரிவை ஏற்படுத்தும். ' கடந்த தேர்தலில் தன்னோடு கூட்டணி வைத்ததால், அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகளை தற்போது விஜயகாந்த் வாங்கப் போவதில்லை' என்பதுதான் ஜெயலலிதாவின் தேர்தல் கணக்கு. எனவே, 'பிரசாரத்தில் இவர்களைத் தாக்காமல் இருப்பதே நல்லது' என நினைக்கிறார்.

ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில்,  விடுதலைச் சிறுத்தைகளை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. தனக்குப் பிரதான எதிரிக்கட்சியாக தி.மு.கவை மட்டுமே பார்க்கிறார். ' இந்தத் தேர்தலில் தி.மு.க இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்படும். அரை சதவீதம், ஒரு சதவீதம், ஆறு சதவீதம் என மொத்தமாக பத்து சதவீத வாக்குகள் இல்லாத மக்கள் நலக் கூட்டணி என்ன செய்தாலும், அ.தி.மு.கவின் வெற்றியை பாதிக்காது' என்ற மனநிலையில் இருக்கிறார். ' புதிய சக்தி வளர்ச்சியடையாது. குறிப்பாக, தனது ஆட்சிக்கு எதிரான தே.மு.தி.கவின் பிரசாரத்தை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்' என நினைக்கிறார் ஜெயலலிதா.

'மக்கள் நலக் கூட்டணி என்பது புதிய கட்சிகள் அல்ல. தி.மு.க, அ.தி.மு.கவோடு கூட்டணி வைத்து கழித்துப் போடப்பட்ட கட்சிகள்தான்' என்பதே ஜெயலலிதாவின் எண்ணம்.  '2006-ல் தனிப்பெரும் சக்தியாக வளர்ந்த விஜயகாந்த், 2011 தேர்தலில் அழகிரியோடு பேசிக் கொண்டே அ.தி.மு.க அணியில் சேர்ந்தது, இந்தத் தேர்தலில் தி.மு.கவைக் காரணம் காட்டி, மக்கள் நலக் கூட்டணியில் அதிக இடங்களை வாங்கியது' என அவரது நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிட்டது எனக் கருதுகிறது அ.தி.மு.க தலைமை.

சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்ய எம்.ஜி.ஆரின் வாகனத்தைப் புதுப்பித்தது தே.மு.தி.க. 'மீண்டும் கறுப்பு எம்.ஜி.ஆர் கோஷம் வந்துவிடக் கூடாது' என்பதற்காக, நேரடியாக விஜயகாந்தை எதிர்க்காமல், அ.தி.மு.கவின் இரண்டாம் கட்டத் தலைவர்களான வளர்மதி, நடிகர் ராமராஜன், நடிகை விந்தியா, நடிகர் சிங்கமுத்து உள்ளிட்டோரை வைத்து கலாய்க்கும் வேலைகளைத் தொடங்கிவிட்டார் ஜெயலலிதா. எம்.ஜிஆர். வாக்குகள் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த தந்திரத்தைக் கையாள்கிறார் ஜெயலலிதா. மதுரை கூட்டத்தில் பேசிய வளர்மதி, 'பேரைப் பாரு. கறுப்பு எம்.ஜி.ஆர். அவர் பேரைச் சொல்றதுக்கு உனக்குத் தகுதி இருக்கா?" என நெட்டில் போட முடியாத வார்த்தைகளால் விமர்சித்தது இதற்காகத்தான்.

இவையெல்லாவற்றையும் விட பிரதான காரணம் ஒன்றும் இருக்கிறது. கருணாநிதி தலைமையை ஏற்றுக் கொண்டு, பின்னர் வெளியேறிய மூப்பனார் பலவீனமடைந்தார். ஜெயலலிதா, கருணாநிதி தலைமையை ஏற்று, பின்னர் இவர்களிடம் இருந்து வெளியேறிய வைகோ ஒன்றும் இல்லாமல் போய்விட்டார். தி.மு.க, அ.தி.மு.கவோடு மாறி மாறி சவாரி செய்த ராமதாஸ், மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார். இவர்களைப் போல, ஜெயலலிதாவிடம் இருந்து வெளியேறிய விஜயகாந்த், ஏற்கெனவே பலவீனமடைந்துவிட்டார் என கணக்குப் போடுகிறார் ஜெயலலிதா. ' பலவீனமடைந்தவர்களை பலசாலி' என நினைத்துக் கொண்டு நாம் ஏன் பிரசாரம் செய்ய வேண்டும்? அவர்களே அடித்துக் கொண்டு கலைந்துவிடுவார்கள்' என்பதே அ.தி.மு.க தலைமையின் தேர்தல் கணக்கு. ' அவர்கள் கூட்டணியாக நிற்பதே நம்முடைய பெரிய பலம். இவர்களை எதிர்க்கத் துணிந்தால், தி.மு.க, காங்கிரஸ் ஆதரவாக மாறிப் போகும்' என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார் அவர். பா.ஜ.க அமைச்சர்களின் விமர்சனத்திற்கு தடாலடியாக பதில் சொல்லும் ஜெயலலிதா, விஜயகாந்த், பிரேமலதா வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதையே விரும்பவில்லை. இவ்வாறு ஜெயலலிதா நடந்து கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளபோதிலும்,  'எனக்கு முன்னால் நீங்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல' என்பதுதான் பிரதானமாக உள்ளது.

'அதீத தன்னம்பிக்கை ஆபத்தைத் தரும்' என்பார்கள். தேர்தல் நேரத்தில் போடப்பட்ட பல கூட்டல், கழித்தல் கணக்குகளை காலம் தகர்த்தெறிந்த வரலாறுகளும் உண்டு.

 

- ஆ.விஜயானந்த்

 

அடுத்த கட்டுரைக்கு