Published:Updated:

கருணாநிதியால் மதுவிலக்கைக் கொண்டுவர முடியாது!

கருணாநிதியால் மதுவிலக்கைக் கொண்டுவர முடியாது!
கருணாநிதியால் மதுவிலக்கைக் கொண்டுவர முடியாது!
கருணாநிதியால் மதுவிலக்கைக் கொண்டுவர முடியாது!

 

தே.மு.தி.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு தாவிய 8 எம்.எல்.ஏ-க்களில் விருதுநகர் எம்.எல்.ஏ பாண்டியராஜனுக்கு மட்டுமே ஜெயலலிதா மீண்டும் சீட் கொடுத்துள்ளார். ஆவடி வேட்பாளராக அறிவித்த உடனேயே ஆவடியில் குடும்பத்தோடு குடியேறிவிட்டார். தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருந்த அவரைச் சந்தித்தோம்.

கருணாநிதியால் மதுவிலக்கைக் கொண்டுவர முடியாது!

‘‘ஆவடி தொகுதி தேர்தல் பிரசாரம் எப்படி இருக்கிறது?’’

‘‘தமிழகத்தின் ஐந்தாவது பெரிய தொகுதி ஆவடி. மொத்தம் 383 பூத்கள். 4 லட்சம் வாக்காளர்களைத் தாண்டி விட்டது. இந்தத்  தொகுதியின் மாப்பிள்ளை நான். என் மனைவியின் பெற்றோர் இங்குள்ள பருத்திப்பட்டு என்ற ஊரில்தான் இருந்தார்கள். 92 சதவிகித மக்கள் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொகுதியின் அருகில் உள்ள அண்ணா நகர் சாந்தி காலனியில்தான் கடந்த 25 வருடங்களாக வசித்து வருகிறேன். இப்போது, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் ஆவடி கவரப்பாளையம் ஜோதிராமலிங்கம் தெருவில் வீடு வாங்கி, இங்கே குடிவந்து விட்டேன். ஆவடி, திருவேற்காடு, திருநின்றவூர் ஆகிய மூன்று ஊர்களையும் இணைத்து தமிழ்நாட்டின் நான்காவது பெரிய மாநகராட்சியாக ஆவடியை மாற்றுதல், மெட்ரோ ரயிலை ஆவடி வரை நீட்டிப்பு செய்தல், திருவேற்காடு நகரம் முழுவதும் பாதாளச் சாக்கடைத் திட்டம் கொண்டு வருதல், தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்துக்கான வளர்ச்சித் திட்டம் என்று 18 அம்ச திட்டங்களை உருவாக்கி இருக்கிறேன். பிரசாரத்துக்கு செல்கிற இடங்களில் எல்லாம் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. அம்மா அரசின் நல்லத் திட்டங்களை மக்கள் வரவேற்கும்போது சொல்கிறார்கள். அம்மாதான் இந்தத் தொகுதியின் வேட்பாளர் என்று முழுவீச்சில் தேர்தல் வேலைகளில் அ.தி.மு.க-வினர் ஈடுபட்டுள்ளனர்.’’

கருணாநிதியால் மதுவிலக்கைக் கொண்டுவர முடியாது!

‘‘பூரண மதுவிலக்கு, மீத்தேன் திட்டம் ரத்து என்றெல்லாம் தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்களே?’’

‘‘அவர்கள், 1971-ல் சொன்ன வாக்குறுதிகளை இந்தத் தேர்தல் அறிக்கையிலும் சொல்லி இருக்கிறார்கள். பல்வேறு கட்சிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பல அம்சங்களைத் தங்களது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். கடந்த தி.மு.க ஆட்சியில்தான் மீத்தேன் திட்டத்துக்கு ஒப்பந்தம் போட்டார்கள். அந்தத் திட்டத்தைக்கொண்டு வந்ததே மு.க.ஸ்டாலின்தான். ஆனால், இப்போது மீத்தேன் கேஸ் திட்டத்தைத் தடுப்போம் என்கிறார்கள். இது போலித்தனமான வாக்குறுதியின் உச்சகட்டம். இப்படித்தான், தி.மு.க தேர்தல் அறிக்கை நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது. பூரண மதுவிலக்கு என்று கருணாநிதி பல தடவை சொல்லிவிட்டார். ஆனால், அதை அவர் செய்தது இல்லை. செய்யவும் மாட்டார். அவர் செய்ய மாட்டார் என்பது தமிழக மக்களுக்கும் தெரியும்.’’

‘‘ஐந்தாண்டு ஆட்சியில் இருந்தபோது சும்மா இருந்துவிட்டு, தேர்தல் பிரசாரத்தின் முதல் கூட்டத்திலேயே, ‘மதுவிலக்கை படிப்படியாகக் கொண்டு வருவோம்’ என்று ஜெயலலிதாவும் அறிவித்துள்ளாரே?’’


‘‘தமிழகத்தில் மதுவை அறியாத ஒரு தலைமுறைக்கு மதுவை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி. மதுவிலக்குப் பற்றிப் பேச அவருக்கு அருகதையே இல்லை. பூரண மதுவிலக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அம்மாவின் நெஞ்சார்ந்த குறிக்கோள். அதைத்தான் அம்மா அறிவித்துள்ளார். சென்னைக்கு வீராணம் குடிநீரைக் கொண்டு வரவே முடியாது என்று எதிர்க் கட்சிகள் மார்தட்டினர். ஆனால், அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்து சென்னை மக்களின் தாகத்தைத் தீர்த்து வைத்திருக்கிறார். அதுபோலத்தான், எந்த வகையில் மதுவிலக்கை க்கொண்டுவர முடியும் என்பதை நன்கு ஆராய்ந்துதான் அம்மா அறிவித்து உள்ளார்கள். முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர், சில்லறை கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்துக்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாகப் பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை அடைவோம் என்று அம்மா அறிவித்துள்ளார்கள். அம்மா சொன்னபடி படிப்படியாக மதுவிலக்கை அம்மாவால் மட்டுமே நிச்சயம் கொண்டு வர முடியும். ஆனால், பூரண மதுவிலக்கு என்று கருணாநிதி சொல்வது, அவரின் வழக்கமான ஏமாற்று வேலை.’’

கருணாநிதியால் மதுவிலக்கைக் கொண்டுவர முடியாது!

‘‘அ.தி.மு.க ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று தி.மு.க-வும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களும் சொல்லி வருகிறார்களே?’’

‘‘சிறு துரும்பான வைக்கோலை பிடித்துக்கொண்டு, நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் இருந்து உயிர் பிழைக்கப் போராடுவது போலத்தான் கருணாநிதி தேர்தல் அறிக்கை இருக்கிறது. மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், மக்கள் நலக் கூட்டணி என்று வலம் வருகிறார்கள். அம்மா உணவகம், தாலிக்குத் தங்கம், பச்சிளங் குழந்தைகளுக்குப் பரிசு பெட்டகம், மிக்ஸி - கிரைண்டர் - காற்றாடி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப், விலையில்லா ஆடு, மாடுகள் என்று அம்மா கொண்டுவந்த திட்டங்கள் அத்தனையும் முத்தானவை. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவுக்கே முன்னோடித் திட்டங்களாக இவை உள்ளன. அதனால்தான், வரலாற்று சாதனையாக, நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை அம்மாவுக்கு தந்தார்கள். ‘மக்களால் நான்; மக்களுக்காகவே நான்’ என்று வாழும் அம்மா பக்கம்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள். அதனால், இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெறும்.’’

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: கே.கார்த்திகேயன்