Published:Updated:

சின்ன இடி... செல்ல மழை! - கருணாநிதி பிரசார ஃபிளாஷ் பேக்

சின்ன இடி...  செல்ல மழை!  - கருணாநிதி பிரசார  ஃபிளாஷ் பேக்
சின்ன இடி... செல்ல மழை! - கருணாநிதி பிரசார ஃபிளாஷ் பேக்
சின்ன இடி... செல்ல மழை! - கருணாநிதி பிரசார ஃபிளாஷ் பேக்

 

சின்ன இடி...  செல்ல மழை!  - கருணாநிதி பிரசார  ஃபிளாஷ் பேக்

எம்.ஜி.ஆரால் 13 ஆண்டுகள் அரசியலில் கிட்டத்தட்ட வனவாச நிலைக்கே போய்விட்டார் கருணாநிதி. வனவாசம் முடிவுக்கு வந்தது 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெ. - ஜா. அணிகளாகப் பிரிந்து அ.தி.மு.க களம் கண்டது. அந்தத் தேர்தலில், உற்சாகமாகத் தேர்தல் பிரசாரத்துக்குத் தயாரானார் கருணாநிதி. தான் போட்டியிட்ட துறைமுகம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட கருணாநிதி எந்தவித பந்தா, பட்டாளங்கள் இல்லாமல் ரிக்‌ஷாவில், ஆட்டோவில் சென்று பிரசாரத்தை அமர்க்களப்படுத்தினார். திறந்த ஜீப்பில் துறைமுகம் வீதிகளில் பிரசாரம் செய்த கருணாநிதிக்கு மாடியில் நின்று பெண்கள் மலர்களைத் தூவி வரவேற்பு அளித்தனர்.

100-க்கும் மேற்பட்ட பிரசார மேடைகளில் முழக்கமிட்டார் கருணாநிதி.

1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நடந்த ராஜீவ் படுகொலை தி.மு.க மீது பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. தி.மு.க படுதோல்வி அடைந்தது.

1996 சட்டசபைத் தேர்தல் கருணாநிதி விஸ்வருபம் எடுத்தார். டெம்போ வாகனத்தில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். அவர் வேனுக்குப் பின் மூன்று அம்பாசிடர் கார்கள் மட்டுமே அணிவகுத்தன. ஜெ-வை மக்கள் நெருங்கவே முடியாத அளவுக்குப் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்த நேரத்தில், கருணாநிதி பிரசாரம் செல்லும் வழியில் நின்ற மக்களிடம்கூட வாகனத்தை நிறுத்தி அவர்களுடன் கைகுலுக்கிப் பேசிவிட்டுச் சென்றார். மேடையிலும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவிட்டு, அனைவரையும் அமரச் சொல்லிவிட்டு இவர் மட்டும் ஒற்றை ஆளாக மேடையில் நின்று பேசினார். இந்தப் பிரசாரப் பயணத்தின்போது மனைவி தயாளு, மகள் செல்வி உடன் சென்றனர்.

2001, ஏப்ரல் 24-ம் தேதி இரண்டாம்கட்ட பிரசாரத்தைத் தனது கோபாலபுரம் வீட்டில் இருந்து தொடங்கினார். “சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியான ஜெ. தேர்தலில் நிற்கமுடியாது’’ என்ற தகவல் செல்போன் மூலம் பயணத்தில் இருந்த கருணாநிதிக்கு வந்தது. ஜெ-வுக்கு விதிக்கப்பட்ட தடையால் கருணாநிதிக்கு அச்சுறுத்தல் வரலாம் என்பதால், அவருடைய வேனுக்குப்பின் காரில் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் சென்றனர். பிரசார வேன், மேடை என மாறி மாறி உரையாற்றினார் கருணாநிதி.

சின்ன இடி...  செல்ல மழை!  - கருணாநிதி பிரசார  ஃபிளாஷ் பேக்

2006 தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி மீது எழுந்த அதிருப்தி காரணமாக, கருணாநிதி பிரசாரத்துக்கு சென்ற வழி எங்கும் பெரும் கூட்டம் இருந்ததால், குறித்த நேரத்தில் பிரசாரத்தை மேற்கொள்ள முடியாமல் திக்குமுக்காடிவிட்டார். தனக்கு இருந்த வரவேற்பைப் பற்றிப் பிரசார மேடையில், “சின்ன இடி... செல்ல மழை!” என தனக்கே உரிய பாணியில் சிலாகித்தார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் முதுகுத்தண்டு அறுவைச்சிகிச்சை செய்துகொண்டதால் தமிழகத்தின் முக்கியப் பகுதிகளில் மட்டும் வீல் சேரில் அமர்ந்து பிரசாரம் மேற்கொண்டார். கருணாநிதி குறைவான தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டது இந்தத் தேர்தலில்தான். பிரேத்யேக டெம்போ வாகனம் தயார் செய்யப்பட்டு, அதில் பயணம்செய்தார்.

2016 தேர்தலிலும், வேன், மேடை எனப் பிரசார முழக்கத்தை முழங்க தயாராகிவிட்டார் 93 வயது ‘இளைஞர்’.

கருணாநிதி பிரசாரம் தொடங்கும்போது தனது தாய் அஞ்சுகத்தம்மாள் படத்தை வணங்கிவிட்டுக் கிளம்புவது வழக்கம்.  சைதாப்பேட்டை கருணாநிதிக்கு சென்மென்ட் இடம். இங்கிருந்துதான் பிரசாரம் தொடங்குவார். அதே போல் சிந்தாதரிப்பேட்டையில்தான் பிரசாரத்தை முடிப்பார்.
சென்னையில் பிரசாரம் செய்ய திறந்த ஜீப்பையே அவர் அதிகம் விரும்புவார். உடல்நிலை காரணமாக இப்போது டெம்போவைப் பயன்படுத்துகிறார்.

பிரசார மேடைகளில் கூட்டணிக் கட்சியினரின் பெயரைக்கூட மறக்காமல் சொல்லிவிட்டுத்தான் தனது உரையைத் தொடங்குவார். மரபான மேடைப் பேச்சின் அத்தாட்சியாக மீண்டும் தேர்தல் களத்துக்கு வருகிறார் கருணாநிதி.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: சு.குமரேசன்