Published:Updated:

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலைக் குறிவைக்கும் பா.ஜ.க - காங்கிரஸ்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலைக் குறிவைக்கும் பா.ஜ.க - காங்கிரஸ்
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலைக் குறிவைக்கும் பா.ஜ.க - காங்கிரஸ்

த்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா  உள்ளிட்ட மாநிலங்களில் 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை இழந்துவிட்ட செல்வாக்கை மீண்டும் பெற்றாக வேண்டும் என்ற உத்வேகத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும்,  காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு இப்போதே களத்தில் இறங்கியுள்ளன.இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் இருந்த நிலை மாறி, முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி தற்போது ஆட்சியில் உள்ளது. உத்தரப்பிரதேச  மாநிலத்தில் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் தனது பங்குக்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் காய் நகர்த்தி வருகிறது.எல்லாவற்றுக்கும் முன்னோட்டமாக, பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை இல்லாத நிகழ்வாக, தசரா தினத்தில் லக்னோவில் நடைபெறும் ராம்லீலா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.

வழக்கமாக பிரதமர், டெல்லியில்  ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் தசரா கொண்டாட்டத்தில் பங்கேற்பதே நடைமுறையாக இருந்து வந்தது. உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறும் என்பதாலோ என்னவோ, பிரதமர் நரேந்திர மோடி, லக்னோ ராம்லீலா குழுவின் அழைப்பை ஏற்று, ராவண வதம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பிரதமரின் லக்னோ வருகையையொட்டி,  'சர்ஜிகல் ஸ்டிரைக் '-ஐ பாராட்டி, கொண்டாட்டங்கள் நடைபெறும் மைதானத்துக்கு வெளியே சுவரொட்டிகள் இடம்பெற்றிருந்தன. மாறாக, காங்கிரஸ் கட்சியோ, ராணுவத்தினரின் வழக்கமான தாக்குதல் நடவடிக்கையை அரசியலாக்கி, அதன்மூலம் லாபமடைய பா.ஜ.க முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது. அதுதொடர்பான சுவரொட்டிகளை காங்கிரஸ் கட்சி ஒட்டியுள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க-வின் சுவரொட்டி சண்டை ராம்லீலா நடைபெறும் மைதானத்துக்கு அருகில் எதிரொலித்ததை காண முடிந்தது.

மொத்தத்தில், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி என்பது பா.ஜ.க. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கவுரவப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது.அரசியல் கட்சிகள் என்ன நினைத்தாலும், என்னதான் உத்தி வகுத்தாலும் உத்தரப்பிரதேச மாநில மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதே முக்கியம். அதுவே தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்.

- சி.வெங்கட சேது.