Published:Updated:

“நான் ஜெயிப்பது என் கட்சிக்கு செய்கிற துரோகம்!” அடேங்கப்பா தேர்தல் மன்னன்

“நான் ஜெயிப்பது என் கட்சிக்கு செய்கிற  துரோகம்!” அடேங்கப்பா தேர்தல் மன்னன்
“நான் ஜெயிப்பது என் கட்சிக்கு செய்கிற துரோகம்!” அடேங்கப்பா தேர்தல் மன்னன்

“நான் ஜெயிப்பது என் கட்சிக்கு செய்கிற துரோகம்!” அடேங்கப்பா தேர்தல் மன்னன்

ஜெயலலிதா மறைந்ததால் அவருடைய தொகுதியான ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12 தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரும்பு பெண்மணி என் அழைக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த காலத்தில் நின்று ஜெயித்த தொகுதியில் அவரது கட்சியே மூன்றாக பிரிந்து ஓட்டு கேட்பது ஒரு கொடுமை என்றால், மற்றொரு கொடுமை, வெற்றி, தோல்விகளை பற்றி கவலை கொள்ளாமல் சில வேட்பாளர்கள் தொகுதியை அதகளம் செய்துவருவது. 

குடியரசுத் தலைவர் தேர்தலானாலும் சரி, குன்றத்துார் இடைத்தேர்தல் ஆனாலும் சரி மனுவும் கையுமாக ஆஜராகிவிடும் தேர்தல் மன்னன் பத்மராஜன், 'மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்' ஆறுமுகம், 'அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' சக்கரவர்த்தி எனப் 'பெரிய' வேட்பாளர் பட்டாளமே சூடு தகிக்கும் ஆர்.கே நகர் தேர்தல் களத்தை கலகலப்பாக்கிக்கொண்டிருக்கிறார்கள். 

இவர்களில் கடைக்கோடி சட்டமன்றத்திலிருந்து அரசியலமைப்பை ஆளுமை செய்யும் ஜனாதிபதி தேர்தல் வரை நின்று களைத்துவிட்டவர் பத்மராஜன். 'நிரந்தர பொதுச்செயலாளர்' போல 'நிரந்தர வேட்பாளராய்' பல வருடங்களால் தேர்தல் களம் கண்டுவரும் அவரை ஆர்.கே நகர் தொகுதியில் பரபரப்பான ஒரு மதிய வேளையில் சந்தித்துப் பேசினோம்.  

“என்னதாங்க உங்க பிரச்னை, அம்மா தொகுதிக்கும் வந்திட்டீங்களா” 

“வேட்புமனு அறிவிச்ச முதல்நாளே மனுதாக்கல் செய்திட்டேன். முதன்முதலா 1988 ம் ஆண்டு மேட்டூர்ல சட்டமன்றத் தேர்தல்ல நின்னேன். இதுவரை 179 முறை தேர்தல்ல நின்றிருக்கிறேன். ஆர்.கே நகர் தொகுதி, நான் நிற்கிற 178 வது தேர்தல். போனவாரம் கேரளாவில் மலப்புரம் மக்களைவைத் தொகுதிக்கு மனு செய்திருக்கிறேன். இந்தியாவில் எம்.பி தேர்தல்லயும் எம்.எல்.ஏ தேர்தல்லயும் ஒரே நேரத்துல நிக்கிற ஒரே வேட்பாளர் நானாகத்தான் இருக்கும் தெரியுமா” என தன்னைத்தானே தட்டிக்கொடுத்துக்கொண்ட பத்மராஜனிடம் சில கேள்விகளை எழுப்பினோம்.

“தோற்போம் எனத் தெரிந்தும் இப்படி ஊருக்கு ஊர் போய் தேர்தல்ல நிற்கிறீங்களே, வீட்ல யாரும் உங்களை கண்டிக்கிறதில்லையா..?”

(சிரிக்கிறார்...) “என் விருப்பத்துக்கு மனைவியோ மகனோ குறுக்க நின்னதில்லை. சும்மா இல்ல... தேர்தல்ல நிக்கிறதுக்காக இதுவரை 20 லட்ச ரூபாய் வரை செலவு செஞ்சிருக்கேன். இத்தனைக்கும் நான் பஞ்சர் கடை வெச்சி பிழைப்பு நடத்தறவன். ஆனா இதுவரை ஒருமுறைக் கூட மனைவியோ, மகனோ முகம் சுழிச்சதில்லை.. ஆனா என்ன வருத்தம்னா, இத்தனை தேர்தல்ல நின்னும் இதுவரை ஒரு முறைக் கூட டெபாசிட் வாங்கலியேங்கற குறை மட்டும்  அவங்க  மனசுல இருக்கிறது எனக்குத் தெரியும்.” என எந்த உணர்ச்சியுமின்றி சொல்கிறார் பத்மராஜன். 

“நீங்க எதிர்த்து நின்ன விஐபிக்கள்லாம் யார் யாருன்னு சொல்லமுடியுமா...”

கே.ஆர் நாராயணன் துவங்கி இப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரை இவர்களை எதிர்த்து 8 முறை ஜனாதிபதி தேர்தல்ல நின்றிருக்கிறேன். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ் மன்மோகன்சிங், இன்றைய பிரதமர் மோடி வரை 4 பிரதமர்களை எதிர்த்து நின்றிருக்கிறேன். ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி, தமிழகத்துல கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் இவங்களை எதிர்த்திருக்கிறேன். ஒருமுறை எம்.பி தேர்தல்ல நடிகை ஹேமமாலினியை எதிர்த்து நின்னிருக்கிறேன். 

“இதுவரை ஒரு தேர்தலிலாவது வென்றிருக்கிறீர்களா...”

இல்லை... ஜெயிக்கவும் விரும்பவில்லை. காரணம் என் கட்சியின் பெயரே தேர்தல் மன்னன் தோல்விக்கட்சி என்பதுதான். அதனால் நான் ஜெயிப்பது என் கட்சிக்கு நானே செய்கிற துரோகம். யாருக்கு ஓட்டு போடணும் யாருக்கு போடக்கூடாது என்பது . மக்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படியும் பேப்பரில் என்னைப்பற்றி வருகிற தகவல்களை பார்த்து எங்கே மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களோ என்று பயந்தே மனுதாக்கலோடு நிறுத்திக்கொள்வேன். பிரசாரத்திற்கு போகமாட்டேன்.  

“இதுவரை போட்டியிட்ட தொகுதிகளில் ஏதாவது சுவாரஸ்யம் நடந்ததுண்டா...”

சுவாரஷ்யம் இல்லை.. ஆபத்துதான் வந்திருக்கிறது. ஆந்திராவில் ஒருமுறை முன்னாள் பிரதமர் நரசிம்மராவை எதிர்த்து நின்றேன். அப்போது நான் என்னவோ தொகுதியில் ஓட்டுக்களைப்பிரித்து வெற்றிவாய்ப்பை பறித்துவிடுவேனோ (?) என பயந்து என்னை நரசிம்மராவ் ஆட்கள் கடத்திப்போய் காட்டில் வைத்து மிரட்டினர். ஆனால் 'நான் அவ்வளவு ஒர்த் இல்லை' என அவர்களுக்கு புரியவைப்பதற்குள் ஒருவாரம் ஓடிவிட்டது. அவர்களிடம் இருந்து தப்பித்துவந்தது பெரும்பாடாகிவிட்டது. பர்கூரில் ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற தேர்தலில் என்னுடன் ஜெயலலிதாவும் தோற்றது இன்றும் மறக்கமுடியாதது.

தேர்தல் செலவுக்கு என்ன செய்கிறீர்கள்...

நான் சாதாரண பஞ்சர் கடை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் வருமானத்தில் ஒரு சிறுதொகையை அடுத்துவருகிற தேர்தலுக்கு என இப்போது ஒதுக்கிவைப்பேன். இல்லையென்றால் நண்பர்களிடம் கடன் வாங்கி டெபாசிட் கட்டுவேன். ஆனால் எக்காரணத்திற்காகவும் தேர்தலை புறக்கணிக்கமாட்டேன் (!?)

“உங்களோட பிரச்னைதான் என்ன என்ன... இவ்வளவு செலவு செய்து ஏன் தேர்தல்ல நிக்கறீங்க...”

“முதல்லவே சொன்னபடி எனக்கு வெற்றி தோல்விகள் மீது நம்பிக்கையில்லை. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் நினைத்தால் தேர்தலில் நிற்கலாம். தகுதியிருந்தால் எந்த சாமான்யனும் மக்கள் செல்வாக்குடன் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும் என மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் என் நோக்கம். அதனால்தான் சாதாரண பஞ்சர் கடை நடத்திவரும் நான் செலவைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு முறையும் தேர்தலிலும் நிற்கிறேன். 

நான் ஒருதடவை ஒரேநேரத்தில் பல தொகுதிகளில் நின்றேன். அதன்பிறகுதான் தேர்தல் கமிஷன், 'ஒருவர் இரண்டு தொகுதிக்குமேல் தேர்தலில் நிற்கக்கூடாது' என சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. இப்படி சில நல்லவைகளும் என்னால் நடந்திருக்கின்றன. இத்தனை தடவை தேர்தலில் நின்றதற்காக, இதுவரை 3 முறை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறேன். கின்னஸில் இடம்பெற முயற்சித்துவருகிறேன்" - சொல்லிவிட்டு அடுத்த கேள்விக்காக காத்திருக்காமல் பஸ்ஸை பிடிக்க ஓடுகிறார் பத்மராஜன்.

சுயேச்சைகள் பலவிதம் அதில் பத்மராஜன் ஒருவிதம்!

- எஸ். கிருபாகரன்
 

அடுத்த கட்டுரைக்கு