Published:Updated:

'தினகரன் செலவு செய்வது யாருடைய பணம்?' - ஆதரவாளர்களிடம் குமுறிய தீபா #VikatanExclusive

'தினகரன் செலவு செய்வது யாருடைய பணம்?' - ஆதரவாளர்களிடம் குமுறிய தீபா #VikatanExclusive
'தினகரன் செலவு செய்வது யாருடைய பணம்?' - ஆதரவாளர்களிடம் குமுறிய தீபா #VikatanExclusive

'தினகரன் செலவு செய்வது யாருடைய பணம்?' - ஆதரவாளர்களிடம் குமுறிய தீபா #VikatanExclusive

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரசியல் கட்சி வேட்பாளர்களின் அதிரடி வாக்குறுதிகளால் ஆர்.கே.நகர்த் தேர்தல் களம் திணறிக்கொண்டிருக்கிறது. ' தினகரன், மதுசூதனன் எனக் கள நிலவரம் சற்று கடுமையாக இருந்தாலும், என்னை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.கவே என்னை நோக்கி வரப் போகிறது' என்ற நம்பிக்கையில் வலம் வருகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. 

ஆர்.கே.நகரில் நேற்று முதல் பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார் தீபா. தேர்தல் ஆணையம் தனக்கு ஒதுக்கிய படகுச் சின்னத்தை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தினார். கூட்டத்தில் பேசப்போகும் அறிக்கையை முன்கூட்டியே தயாரித்து எடுத்து வந்திருந்தார். அதில் எழுதப்பட்டிருந்ததை வாசித்துவிட்டுச் சென்றுவிட்டார். தேர்தலில் தீபாவின் பிரசார முறை குறித்து, அவரின் ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். " டி.டி.வி.தினகரன், மதுசூதனன், தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், சி.பி.எம் வேட்பாளர் லோகநாதன், பா.ஜ.கவின் கங்கை அமரன் உள்ளிட்டோர் கொளுத்தும் வெயிலிலும் பிரசாரத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், மாலை நேரங்களில் மட்டுமே பிரசாரத்தில் ஆர்வம் காட்டுகிறார் தீபா. ' ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வேன். துரோகிகளின் முகத்திரையைக் கிழிப்பேன்' என நேற்றைய கூட்டத்தில் பேசினார். பூத் வாரியாக இளைஞர்களை நியமித்தாலும், தேர்தல் செலவுகளுக்குப் பணம் ஒதுக்கவில்லை. 'பணம் கொடுத்து வாக்குகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அம்மா உருவாக்கி வைத்த வாக்குகள் அனைத்தும் என் பக்கம் வந்து சேரும்' என்கிறார். ஆனால், ஒவ்வொரு வாக்கையும் குறிவைத்து ஆளும்கட்சியினர் விநியோகத்தைத் தொடங்கிவிட்டனர். 'எப்படியாவது வெற்றி பெற வேண்டும்' என்ற முனைப்பில் அ.தி.மு.கவின் இரு அணிகளும் செயல்படுகின்றன. ' தொப்பிச் சின்னத்தை முடக்குங்கள்' என, பன்னீர்செல்வம் அணியும், ' மின்கம்பத்தை இரட்டை மின் கம்பம் எனப் பிரசாரம் செய்வதால், மின் கம்பத்தை முடக்க வேண்டும்' என தினகரன் அணியும் ஒருவர்மீது ஒருவர் புகார் கூறுகின்றனர். களத்தில் தீபா என்ற ஒருவர் இருக்கிறார் என்பதையே மக்கள் மறந்துபோகும் அளவுக்கு எதிர் அணியின் பிரசாரம் வேகமெடுத்திருக்கிறது. இதைப் பற்றி அவரிடம் எடுத்துக் கூறியிருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 15 நாள்கள்தாம் இருக்கின்றன. அதற்குள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தினால் மட்டுமே சொல்லிக்கொள்வது போல வாக்குகளைப் பெற முடியும். இதை தீபா பேரவை நிர்வாகிகள் உணர்ந்ததுபோல் தெரியவில்லை" என்றார் ஆதங்கத்தோடு. 

"ஆர்.கே.நகரில் நேற்று பொதுக் கூட்டம் முடிந்த பிறகும், பூத் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பேரவை நிர்வாகிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார் தீபா. தினகரன், பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் பிரசார வியூகங்கள் குறித்து விளக்கியபோது, மிகுந்த கோபத்தில் இருந்தார். இதைப் பற்றி எங்களிடம் பேசிய தீபா, ' இந்தத் தேர்தலில் நமக்கு அடையாளத்தைக் கொடுக்கப் போவது படகுச் சின்னம்தான். அ.தி.மு.கவின் அடிப்படை வாக்குகள் அனைத்தும் மீனவ மக்கள் மத்தியில் குவிந்திருக்கிறது. தொகுதியில் 20 சதவீத மீனவ மக்களும் 30 சதவீத அட்டவணைச் சமூக மக்களும் உள்ளனர். இந்த 50 சதவீத வாக்குகளும் எனக்குத்தான் வந்து சேரும். நான் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதாகத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நினைத்தவர்கள், அரசியலில் இருந்து என்னை அப்புறப்படுத்தத் திட்டமிட்டனர். என் பின்னால் மக்கள் திரண்டிருந்த நேரத்தில், சசிகலா காலில் விழுந்தவர்கள் எல்லாம் இப்போது எனக்கு எதிராக வேலை பார்க்கிறார்கள். சசிகலாவை கட்சிப் பதவியேற்க அழைத்தவர்தான் பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

எனக்கு எதிராக தேர்தல் வேலைகளையும் செய்கின்றனர். அவர்கள் யார் என்பதை மக்களிடம் வெளிப்படுத்துவேன். தேர்தல் நாளில் நான் யார் என்பதை தேர்தல் முடிவு உணர்த்தும். ஜெயலலிதா ஆட்சியில் சம்பாதித்த பணத்தைத்தான் தினகரனும் பன்னீர்செல்வமும் செலவு செய்கிறார்கள். என்னை சாதிக்கு அப்பாற்பட்டவளாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். நேரடி எதிரி யார் என்பதையும் மறைமுக எதிரி யார் என்பதையும் ஆர்.கே.நகர்த் தேர்தல் களம் எனக்கு உணர்த்தியிருக்கிறது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்காக வந்து தேர்தல் வேலை பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். பணம் கொடுத்து வேலை வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. உண்மையான அன்போடு உழைப்பவர்களே போதும். என்னை பொம்மையாக வைத்துக் கொண்டு ஆட்டிப்படைக்க சிலர் நினைத்தார்கள். அவர்கள் அனைவரையும் ஒதுக்கித் தள்ளிவிட்டேன். இப்போது எனக்கென்று எந்த உறவும் இல்லை. துரோகத்துக்கு நான் என்றுமே இடம் கொடுக்க மாட்டேன்' என ஆதங்கமும் ஆவேசமுமாகப் பேசினார். ஆர்.கே.நகரை மிகுந்த நம்பிக்கையோடு பார்க்கிறார் தீபா" என விவரித்தார் தீபா பேரவை நிர்வாகி ஒருவர். 
    
'ஜெயலலிதாவிடம் ஆர்.கே.நகர் மக்கள் கொடுத்துள்ள 57 ஆயிரம் கோரிக்கை மனுக்களுக்குத் தீர்வு கொடுப்பேன்' எனப் பிரசாரத்தில் முன்வைக்கிறார் தினகரன். ' அம்மா ஆட்சி மலர வாய்ப்பு கொடுங்கள்' என்கிறது பன்னீர்செல்வம் அணி. ' மக்கள் பிரச்னைகளை உணர்ந்தவன் நான்' என்கிறார் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ். ' துரோகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்' என்கிறார் தீபா. 'யாருடைய வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்கிறார்கள்?' என்பது வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும். 

-ஆ.விஜயானந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு