Published:Updated:

கமிஷனர், தாசில்தார், போலீசார்... ஆர்.கே நகரில் சாட்டையைச் சுழற்றிய தேர்தல் ஆணையம்!

சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும், அதைத் தடுக்கவேண்டும் என்று கோரியும், தேர்தல் ஆணையத்துக்கு பல கட்சிகள் புகார் மனுக்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட கட்சியை வெற்றிபெற வைக்க, போலீஸ் அதிகாரிகளில் சிலரும், தேர்தல் அதிகாரிகளில் சிலரும் துணைபோவதாக தி.மு.க வேட்பாளர் என்.எம். கணேஷ் (எ) மருது கணேஷ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் போட்டியிடும் இ. மதுசூதனன் போன்றோர் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

சசிகலா அணியான அ.தி.மு.க அம்மா அணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் தரப்போ, ஓ.பி.எஸ் அணியினரின் செயல்பாடு குறித்து பதிலுக்கு புகார் அனுப்பியுள்ளனர். ஓ.பி.எஸ் அணியினர் தங்களது 'இரட்டை மின்விளக்கு சின்னத்தை இரட்டை இலை சின்னம் போன்று தவறாகச் சித்தரித்து, வாக்காளர்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதாக அதில் தினகரன் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். அதுபோன்று தவறாக சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என ஓ.பி.எஸ் தரப்பினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். ஆனால், தினகரன் தரப்பினர் அனுப்பியுள்ள புகார் மனு மீது தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, 'வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, தேர்தல் தொடர்பான முறைகேட்டில் ஈடுபடுவது போன்றவை மீதுதான் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பாயும். தேர்தல் ஆணையத்தால் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட சின்னம் குறித்து இனி விசாரணை நடத்த வாய்ப்பில்லை" என்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதன்,  தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன், பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் ஜெ. தீபா, நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு குறிப்பிடும்படியான புகார்கள் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்கள் அனைவரும் ஆர்.கே. நகர் தொகுதி முழுவதும் சுற்றிவந்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி தி.மு.க. அளித்த புகாரை ஏற்று தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி ஜார்ஜ் மாற்றப்பட்டு, கடந்த மார்ச் 25-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனராக கரன் சின்ஹா நியமிக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன், தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் ரவுடிகளால் ஆபத்து உள்ளது என்றும், குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள் அதற்கு உடந்தையாக உள்ளனர் என்றும் புகார் தெரிவித்தார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெறும் பணப்பட்டுவாடாவைத் தடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார். தேர்தல் அதிகாரிகள் சிலரின் பெயர்களையும் மதுசூதனன் குறிப்பிட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, மனோஜ் பாண்டியன் ஆகியோர் புகார் மனு அளித்தனர். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணைய உத்தரவில் "சென்னை ஆர்.கே. நகர் தண்டையார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ண பிரபு, புதுவண்ணாரப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு ஆகியோர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும். தண்டையார்பேட்டை மண்டல தேர்தல் பதிவு அலுவலர் விஜயகுமார், உதவி தேர்தல் அலுவலர் (தாசில்தார் அந்தஸ்து) சேகர் ஆகியோர் ஆர்.கே.நகர் தொகுதி எல்லையில் பணியாற்றாத வகையில் உடனடியாக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை ஒருபுறம் இருக்க, ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 38-வது வார்டில் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ ஒன்று, சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலானது. தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் இது கொண்டு செல்லப்பட்டது. வீடியோவில் சிக்கிய ஆசாமியை போலீசார் பிடித்து, விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கருணாமூர்த்தி என்ற அந்த நபர், டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளதால் தினகரனுக்கு இந்தச் சம்பவம் ஒரு கரும்புள்ளி போன்று அமைந்து விட்டதாகக் கூறப்படுகின்றது.

- ந.பா.சேதுராமன்