Published:Updated:

புதுக்கோட்டை:பிரசாரம் ஓய்ந்தது!

புதுக்கோட்டை:பிரசாரம் ஓய்ந்தது!
புதுக்கோட்டை:பிரசாரம் ஓய்ந்தது!
புதுக்கோட்டை:பிரசாரம் ஓய்ந்தது!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தொகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

புதுக்கோட்டை தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலில் அதிமுக சார்பில் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளராக சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 20 பேர் போட்டியிடுகிறார்கள்.திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

புதுக்கோட்டை தொகுதியில் கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வந்தது.கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சிகளின் தலைவர்களும்,தொண்டர்களும் மும்முரமாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.

நேற்று தலைவர்களும்,வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில்,நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

பிரசாரம் முடிவடைந்ததை தொடர்ந்து,அமைச்சர்களும் கட்சி பிரமுகர்களும் மற்றும் தேர்தல் பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அரசியல் கட்சியினரும் நேற்று மாலை புதுக்கோட்டையை விட்டு வெளியேறினார்கள்.

தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்யும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.புதுக்கோட்டை தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்து 980 ஆகும். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 97ஆயிரத்து 370 பேர்.பெண் வாக்காளர்கள் 97 ஆயிரத்து 604 பேர்.

இவர்கள் வாக்களிப்பதற்காக 224 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அதிக பட்சமாக 16 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களைத்தான் பொருத்த முடியும்.

புதுக்கோட்டை தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 224 வாக்குச்சாவடிகளிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

வாக்குப்பதிவையொட்டி புதுக்கோட்டை தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.ஓட்டு எண்ணிக்கை 15-ம் தேதி நடைபெறும்.