Published:Updated:

'20 பேர், 2 ஆயிரம் ஆட்கள்,  20 ஆயிரம் ரூபாய் !' இதுதான் ஆர்.கே.நகர் கணக்கு

'20 பேர், 2 ஆயிரம் ஆட்கள்,  20 ஆயிரம் ரூபாய் !' இதுதான் ஆர்.கே.நகர் கணக்கு
'20 பேர், 2 ஆயிரம் ஆட்கள்,  20 ஆயிரம் ரூபாய் !' இதுதான் ஆர்.கே.நகர் கணக்கு

ஆர்.கே.நகரில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் இருக்கிறார்கள்... பறக்கும் படை, தேர்தல் செலவினப் பார்வையாளர், கண்காணிப்பு வீடியோ பணிக்குழு, நுண்பார்வையாளர்கள், தேர்தல் நன்னடத்தை சீராய்வுக்குழு, தன்னார்வ உதவிக்குழு, காவல்துறை, துணை ராணுவப்படை என்று நீள்கிறது தேர்தல் ஏற்பாட்டிற்கான பட்டியல். ஆயிரம் இருந்தும், வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் முதல் நாலாயிரம் ரூபாய் வரை வழங்குவதைத் தடுக்கும் எந்த வழிமுறையும் முழுமையாக எடுபடவில்லை என்றே தெரிகிறது. வாக்களிப்பதற்கு பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ சட்டப்படி குற்றம்; கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையையும் தாண்டி சில இடங்களில் பணப்பட்டுவாடா நடந்து கொண்டுதான் இருப்பதாக ஆர்.கே.நகரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சியின் அ.தி.மு.க. நிதிக்குழு தலைவராக ஐந்தாண்டு காலம் இருந்தவர் ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர் சந்தானம். ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் மதுசூதனனின் ஆதரவாளரான இவர், இப்போது தினகரன் அணியில் உள்ளார். மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் சைதை துரைசாமியுடன் ரிப்பன் பில்டிங்கில் தாக்கல் செய்த இவரிடம்தான் ஆர்.கே.நகரின் குறிப்பிட்ட பகுதிக்கான பட்ஜெட்டை தினகரன் அணியினர் ஒப்படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டில் இவரைப் பிடித்து ஓ.பி.எஸ். அணியும், தி.மு.க.வும் போலீசில் ஒப்படைத்தது... கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட பிற கட்சியினர் முடிந்தவரை மல்லுக்கட்டியதில் சந்தானத்தை போலீசார் அமுக்கிப் பிடித்தனர்.. பின்னர் சொந்த ஜாமீனில் அவர் வெளியில் வந்து விட்டார். சந்தானத்தோடு பிடிபட்ட இன்னொரு ஆசாமி மீது மட்டும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது."வாக்காளர்களுக்கு தடை ஏதுமின்றி, பணப் பட்டுவாடா செய்யலாம்; பிற கட்சியினரோ, போலீஸாரோ முடிந்தால் அதைத் தடுக்கலாம்" என்பதே இப்போது தொகுதியில் காணப்படும் நிலவரம்... 'ஒரு தரப்பில் நாலாயிரம் கொடுக்கும்போது, அது நம்முடைய வாக்குகளைப் பாதிக்கும்' என்ற எண்ணத்தில் மற்ற கட்சிகள், ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை கொடுக்கும் முடிவில் இப்போது இறங்கி வந்துள்ளன. இப்படி பலகட்சிகள் 'கொடுத்துப் பெறும்' முடிவுக்கு வந்து விட்டதால், பணம் கொடுக்கும் அடுத்த கட்சியைக் காட்டிக் கொடுக்கும் வேலையை அனைத்துக் கட்சியினருமே கைவிட்டு விட்டனர். 'நான் உன்னைத் தடுக்க மாட்டேன், நீ என்னைத் தடுக்காதே' என்ற புரிந்துணர்வுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. சுயேச்சைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மட்டுமே, "பணத்தைக் காட்டி மயக்காதே, பணத்திற்கு வாக்குகளை விற்காதே" என்ற கோஷத்தை உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். பிரதான கட்சிகளின் சார்பில், 'வாக்குக்குப் பணம் கொடுப்பதை தடுக்கக் கோரும்' ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் கடந்த சில நாட்களாக தொகுதியில் இல்லாமல் போயிருக்கிறது.


                   

 குறிப்பிட்ட தெருவில் எத்தனை வாக்குகள் நம் வாக்குகள் என்பதை அறிந்துகொண்டு, சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவருக்கு வேட்பாளரின் பிரதிநிதிகள் போன் செய்கிறார்கள். "சார், வீட்டில் இருக்காரா? இல்லையென்றால் பரவாயில்லை... ஒரு தம்பி  உங்களைப் பார்க்க மதியம் இரண்டு மணிக்கு வருவார்" என்று எளிமையாக தெரிவிக்கிறார்கள். மதியம் இரண்டு மணி அல்லது எப்போது வருவதாகச் போனில் சொன்னாரோ அந்த நேரத்தில், சரியாக ஒருவர் பணத்துடன் சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்று பணம் கொடுத்துவிடுவதாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களாக இந்த முறைதான் கையாளப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதில் ஆரம்பத்தில் ஒருநடைமுறை கடைபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒருவரிடம் ஒரு தெருவுக்கான பணத்தைக் கொடுத்து, அவர் மூலம் பட்டுவாடா நடைபெற்றது. ஆனால், முழுமையாக உரியவர்களிடம் பணம் போய்ச்சேர வில்லையாம். இதனால், தற்போது வேறுமுறையைப் பின்பற்றுகிறார்களாம். "லட்சக் கணக்கில் பணம் சிக்கியதாக வரும் செய்தியில் உண்மை இல்லை என்று தெரிகிறது. கைச்செலவுக்கும், தேர்தல் பணிக்குழுவின்  சாப்பாட்டு செலவுக்கும் அவர்களிடம் கொடுத்து வைத்திருக்கும் பணத்தைத்தான் ரெய்டு என்ற பெயரில் பிடிக்கிறார்களாம். மற்றபடி பணத்தை மொத்தமாக யாரிடமும், எந்தக்கட்சியும் கொடுத்து வைத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது."இரண்டாயிரம் பேர், ஒவ்வொருவரிடமும் இருபதாயிரம் ரூபாய், நூறு பேரை இணைக்கும் சி.யூ.ஜி. சிம் குரூப் போன், இருபது லீடர்கள்" என்று பகுதிவாரியாக நியமித்து பட்டுவாடா வேலை நடக்கிறது. கார்களை சோதனை போட்டாலும் பயன் இல்லை, எங்களை சோதனை போட்டாலும் பயனில்லை" என்கின்றனர் அப்பகுதி அரசியல்வாதிகள்.

-ந.பா.சேதுராமன்