Published:Updated:

“தி.மு.க., ஓ.பி.எஸ்.லாம் கொடுக்குறதுக்குள்ள நிறுத்திப்புட்டாங்களே!'' ஆர்.கே.நகர் தாய்க்குலங்களின் குரல் #VikatanExclusive

“தி.மு.க., ஓ.பி.எஸ்.லாம் கொடுக்குறதுக்குள்ள நிறுத்திப்புட்டாங்களே!'' ஆர்.கே.நகர் தாய்க்குலங்களின் குரல் #VikatanExclusive
“தி.மு.க., ஓ.பி.எஸ்.லாம் கொடுக்குறதுக்குள்ள நிறுத்திப்புட்டாங்களே!'' ஆர்.கே.நகர் தாய்க்குலங்களின் குரல் #VikatanExclusive

ஜெயலலிதா வேட்பாளராக நின்றதில் இருந்து தமிழகத்தின் பரபரப்பு ஸ்பாட்டாக மாறிவிட்டது ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி. இந்தத் தொகுதி மக்களுக்கு கழிப்பிடம் இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை என இன்றளவும் அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடும் நிலை. ஆர்.கே. நகர்ப் பகுதியில் பயணித்தால் புழுதியில் மிதந்து, வாகன நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டும். மீடியா வெளிச்சத்தில் ஜொலிக்கும் ஆர்.கே.நகர்... தேர்தல் காலத்தில் மட்டுமே அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தால் குலுங்குகிறது. ஜெயலலிதா இங்கு வெற்றிபெற்ற பின்பும், மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று குமுறுகின்றனர் ஆர்.கே. நகர் மக்கள். 

ஆர்.கே.நகரில் ஏப். 12-ல் இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்துவிட்டது. இந்தத் தொகுதியில் உள்ள பெண்கள் தேர்தல் ரத்து பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதையறிய சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.ரீனா (வ.உசி.நகர்): ‘'ஜெயலலிதா ஆர்.கே.நகர்ல நின்னு ஜெயிச்சப்பவும் சரி, இப்பவும் சரி இந்தப் பகுதியில தண்ணீர்ப் பிரச்னை, பாதாளச் சாக்கடைப் பிரச்னை நிறைய இருக்கு. அப்பவே பணம் கொடுத்ததால் ஓட்டுப் போட்டாங்க. இப்ப தினகரன் கட்சியில் இருந்து ஒரு ஓட்டுக்கு ரூ. நாலாயிரம் கொடுத்தாங்க. திமுக.வில் இருந்து ஒரு ஓட்டுக்கு ரூ.இரண்டு ஆயிரம் கொடுத்தாங்க. ஓ.பி.எஸ். பணம் தர்றதுக்கு ரெடியாத்தான் இருந்தார். அதுக்குள்ள தேர்தல் ரத்துனு அறிவிச்சதும், நடையைக் கட்டிட்டாரு. இங்க இருக்கிற மக்கள் தேர்தல் அறிவிச்ச தேதியில இருந்து உனக்குக் கொடுக்கல, எனக்குக் கொடுக்கலனு ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போட்டுட்டு இருக்காங்க. அதே மாதிரி இந்த இடத்துல 'இது தர்றாங்களாம். அந்த இடத்துல அது தர்றாங்களாம்'னு அங்கேயும் இங்கேயும் ஓடுறாங்க. நேத்து ராத்திரியில இருந்துதான் நிம்மதியா இருக்கோம். தேர்தலுங்கிற பேர்ல கார்களைக் கொண்டுவந்து நிறுத்திக்கிட்டு அடாவடித்தனம்தான்  பண்ணினாங்க. தேர்தல் ரத்தானது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த சந்துல இருந்து அந்த சந்துல போற வரைக்கும் ரெண்டு கட்சியோட பிரசாரம் தாங்க முடியல. பொதுவா தேர்தல் முடிஞ்சதும் யாரும் இங்க வந்து பார்க்குறதில்ல. மக்கள் எப்படி இருக்காங்கனு எந்த அரசியல்வாதி பாக்குறாங்க. நாங்க எப்பவும் போல சிரமத்துலேயேதான் இருக்கோம்’'


அங்கம்மாள் (தண்டையார்பேட்டை):

‘'ஜெயலலிதா இங்க நின்னு ஜெயிச்சதும் சொன்னபடியே எல்லாமே செஞ்சாங்க. ரோடுதான் இங்க பிரச்னை. தண்ணிக்கூட பரவாயில்ல. ஏதோ வருது. இப்ப தேர்தல்னதும் எல்லா கட்சியும்தான் பணம் கொடுத்தாங்க. தொப்பிக்காரவங்க ரூ. 4 ஆயிரம் தந்தாங்க. இன்னும் யார், யாரோ ஓட்டுப் போடுறதுக்காகக் கொடுத்தாங்க. அந்தம்மா ஏன் இப்படி செத்துப் போச்சுனு இப்பவும் எங்களுக்கு எல்லாம் ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. இந்தப் பகுதியைப் பொறுத்தவரை ஜெயலலிதா இருந்த போதும் சரி, இப்பவும் சரி.. எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியல. எதாவது நடந்தாதானே தெரியும். அப்படியேதான் இருக்கோம். அடிப்படை வசதியில்லாம'' 


சசிகலா:

“இங்க காலங்காலமாக கஞ்சா விற்பனை களைகட்டிக்கிட்டு இருக்கு. இதை எந்தக்கட்சியும் கண்டுக்கிறதில்ல. போலீசும் கண்டுக்கிறதில்ல. செயின் பறிப்பு  பட்டப்பகலிலேயே நடக்கிறது. இந்தப் பகுதியில் மட்டும் மூணு டாஸ்மாக் கடைங்க இருக்கு. மதியம் 12 மணிக்குத்தான் கடை திறக்கும்னு சொல்லியிருக்காங்க. ஆனா, விடியக்காலையில் இருந்தே பிளாக்கில் விற்பனை ஜோரா நடக்குது. குழந்தைங்களோட நாங்க ரோட்டுல போறப்ப எங்க குழந்தைங்க, கஞ்சா கசக்குறவங்க, தண்ணியடிக்கிறவங்களைப் பார்த்துட்டு ஆயிரம் கேள்விகள் கேட்குறாங்க. என்ன பதில் சொல்ல முடியும்? எட்டாவது படிக்கிற பசங்கக்கூட ராத்திரியில தெருவோரம் உட்கார்ந்து எந்த பயமும் இல்லாம கஞ்சா அடிக்கிறாங்க. ஏதாவது கேட்டா  கத்தியக் காட்டி மிரட்டுறானுங்க. 

பொம்பளைப் பிள்ளைங்க நிம்மதியாக வெளியில போக முடியல. பக்கத்துல ராயபுரத்துல வண்டியை ரோட்டோரம் நிறுத்திட்டு ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றதுக்குள்ள வண்டியில இருந்த ஹேண்ட்பாக்கைத் திருடிட்டாங்க. தேர்தல நிறுத்தினது நல்லது. தேர்தல் அறிவிச்சாலும் பிரசாரம்னு சொல்லிக்கிட்டு யாரும் தொகுதிப் பக்கம் வரக்கூடாது. தேர்தல் மீண்டும் அறிவிச்சதும் அந்த கும்பல் மறுபடியும் வந்து தொந்தரவு கொடுப்பாங்க. பத்து நாளா இங்க இருந்து காசை அள்ளி எறைச்சு ஓட்டு வாங்குறதுதான் அரசியலா?  வராத கோபம் வருது. பேசாத வார்த்தையெல்லாம் பேச வேண்டியிருக்கு. பிரசாரம் சமயத்துல எங்களோட அன்றாட வேலை எல்லாம் பாதிச்சிருச்சு. ரொம்ப சிரமப்பட்டோம்.  இப்பவே இவ்வளவு தொந்தரவு பண்றவங்க, எப்படி மக்களுக்கு நன்மை செய்யப் போறாங்க. அவங்க கோடி கோடியா கொள்ளையடிக்கிறதுக்கு நாம ஏன் ஓட்டுப் போடணும். நோட்டாவுக்கு ஓட்டுப் போடலாம்னு தோணுது’'. 


கலாவதி:

‘'ஜெயலலிதாம்மா விருப்பப்படி யார் நடக்குறாங்களோ அவங்களுக்குத்தான் ஓட்டுப் போடலாம்னு இருந்தோம். ஊர்ல இருக்கேன். ஏப். 12 தேர்தல்ன்றதால ஓட்டுப் போட்டுட்டு  போயிடலாம்னு நேத்து வந்தேன். பாத்தா தேர்தல் ரத்துனு சொல்றாங்க. ஏதோ ரெய்டு, கோடி கோடியா பணம் பிடிச்சாங்கனு சொல்றாங்க. எவ்வளவுனு யாருக்குத் தெரியும்.  இவங்கள்ல யாரு நல்லவங்கனு சொல்ல முடியல. அந்தம்மா இருந்தவரை எல்லாமே செய்வாங்கனு நம்பிக்கை இருந்தது. இப்ப அந்த நம்பிக்கை எல்லாம் இல்ல. தேர்தல்ல ஜெயிச்சா என்னை மாதிரி வீடு இல்லாதவங்களுக்கு ஏதாவது உதவுவாங்கனு நினைச்சிருந்தேன். இப்ப மறுபடியும் எப்பதான் தேர்தல் வைக்கப் போறாங்கனு தெரியல’'. 


விஷ்ணியா, டபீதா மற்றும் பிரியா (பூண்டி தங்கம்மாள் தெரு):

''அம்மா தேர்தல்ல நின்னு ஜெயிச்சப்ப தேர்தல் வாக்குறுதியை எல்லாம் நிறைவேற்றினாங்க. அரசு மகளிர் கல்லூரி கொண்டு வந்தாங்க. அவங்க பேரைச் சொல்லிக்கிட்டு இவங்க எல்லாம் வர்றாங்க. பெரியளவுல ஏதும் செய்வாங்கனு எங்களுக்கு நம்பிக்கை இல்ல. ரெய்டு வந்ததாலதான் தேர்தல் ரத்துப்  பண்ணிட்டாங்க. மீண்டும் தேர்தல் எப்ப நடக்கும்னு தெரியல. இருந்தாலும் யார் வந்தாலும் அம்மா மாதிரி வராது'’.

ஆர்.கே. நகர்த் தொகுதியை விட்டு வெளியே வருவதற்குள் டிராபிக் ஜாமில் சிக்கித் தவித்து, முகமெல்லாம் புழுதியாக வந்து சேர்ந்தோம்.

- ஆர். ஜெயலெட்சுமி. 
படங்கள்: மீ. நிவேதன்.