Election bannerElection banner
Published:Updated:

பிளவை நோக்கி ஆம்ஆத்மி: சமரச முயற்சி பலிக்குமா?

பிளவை நோக்கி ஆம்ஆத்மி: சமரச முயற்சி பலிக்குமா?
பிளவை நோக்கி ஆம்ஆத்மி: சமரச முயற்சி பலிக்குமா?

பிளவை நோக்கி ஆம்ஆத்மி: சமரச முயற்சி பலிக்குமா?

ஆம் ஆத்மி... 2015-ம் ஆண்டு டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும், ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த கட்சி. ஊழலை ஒழிக்க வீதியில் இறங்கி போராடிய காந்தியவாதி அன்னா ஹசாரே-க்கு கிடைத்த மக்கள் செல்வாக்கைத் தொடர்ந்து, உருவான அரசியல் இயக்கம்தான் ஆம் ஆத்மி. இந்தக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். 2015-ம் ஆண்டு டெல்லி சட்டசபைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அம்மாநில முதல்வராகப் பதவியேற்றார்.

டெல்லி சட்டசபைத் தேர்தலில், மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பி.ஜே.பி-க்கு ஆம் ஆத்மியின் இந்த வெற்றி, மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் பல்வேறு விஷயங்களில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுக்கும், கெஜ்ரிவால் அரசுக்கும் இடையே மோதல்கள் உருவாகின. டெல்லி காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சிக்குள்ளேயே பூசல்கள் அவ்வப்போது எழுந்து, பின்னர் அடங்கி விடும்.

ஆனால், அண்மையில் முடிவடைந்த டெல்லி நகரசபைத் தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பூசல் பூதாகரமாகியுள்ளது. தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள குமார் விஸ்வாஸ் உடன் சமரசப் பேச்சு நடத்தும் முயற்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலை சந்திக்கவிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆம் ஆத்மி பொறுப்பாளராக குமார் விஷ்வாஸை நியமித்து, அக்கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான குழு முடிவெடுத்துள்ளது. விஸ்வாஸ் குறித்து வெளிப்படையாக விமர்சனம் செய்த சட்டமன்ற உறுப்பினர் அமானத்துல்லா கான்-ஐ கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்வது என்றும் அக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் கான், பி.ஜே.பி- ஆர்.எஸ்.எஸ்-ன் முகவராக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளது. அமானத்துல்லா கானை கட்சியில் இருந்து நீக்கியிருப்பதாக துணை முதல்வர் மனிஷ் சிஸோடியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கட்சிக்கு நெருக்கடியான கால கட்டத்தில், தங்களுக்கு ஆதரவு அளித்து வரும் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். கட்சிக்கும் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்படும் என்றும் சிஸோடியா தெரிவித்தார்.

என்றாலும், டெல்லி நகரசபைத் தேர்தலில் கட்சி அடைந்த தோல்விக்கு கெஜ்ரிவாலின் தன்னிச்சையான போக்கே காரணம் என்றும், இந்த தோல்வியைத் தொடர்ந்து கட்சியை சுய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் குமார் விஸ்வாஸ் குற்றம்சாட்டியுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களே ஆம் ஆத்மியின் தோல்விக்குக் காரணம் என்று கூறி விட முடியாது என்று குறிப்பிட்ட விஷ்வாஸ், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுக்கப் போவதாகத் தெரிவித்தார்.

கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர குமார் விஷ்வாஸ் முயற்சி மேற்கொள்வதாக அமானத்துல்லா கான் தெரிவித்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் பிரச்னை உருவானது. எனினும், கட்சியை உடையாமல் காப்பாற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

பி.ஜே.பி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஏதாவது பிரச்னை ஏற்படாதா? அவற்றின் மூலம் ஆட்சியில் குழப்பத்தை விளைவிக்கலாமா? என்று மத்தியில் ஆளும் பி.ஜே.பி-க்கு எதிரான விமர்சனங்களை சில அரசியல் கட்சிகள் முன் வைத்து வருகின்றன. ஆனால், டெல்லி விஷயத்தில், பி.ஜே.பி-யின் தூண்டுதல் இல்லாமலேயே ஆம் ஆத்மி அரசு பின்னடைவைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. கட்சியையும், அரசையும் காப்பாற்ற என்ன செய்யப்போகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். பொறுத்திருந்து பார்ப்போம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு