Published:Updated:

'ஜெயலலிதாவுக்கு வரும் கூட்டம் ஓட்டுப்போடும் கூட்டம் அல்ல!''

இது ஈஸ்வரன் கணக்கு

பிரீமியம் ஸ்டோரி

திரும்பிய பக்கமெல்லாம் மோடி... தாமரை என்று பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகமாகவே மாறிவிட்டது பொள்ளாச்சியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அலுவலகம். அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பொள்ளாச்சி தொகுதியில் பி.ஜே.பி. சின்னத்திலேயே போட்டியிடுகிறார். அவரைச் சந்தித்தோம்.

''எப்படி இருக்கிறது உங்களது தொகுதி?''

''மின்வெட்டுப் பிரச்னை, வறட்சி நிதி கொடுக்காதது என்று எங்கள் தொகுதி மக்கள் அ.தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இன்னொரு பக்கம் காங்கிரஸா... மோடியா என்று கேட்டால், மோடி என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.''

'ஜெயலலிதாவுக்கு வரும் கூட்டம் ஓட்டுப்போடும் கூட்டம் அல்ல!''

''உங்களது கொங்கு சமூகம் பல பிரிவுகளாக உடைந்து நிற்கிறது. இது உங்களுக்கு பலவீனம்தானே?''

''பெருமாநல்லூரில் நடந்த எங்கள் கட்சியின் மாநாட்டுக்குப் பின்னர் அந்த கேள்வியே எழவில்லை. 100 சதவிகிதம் மக்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள் என்பதற்கு அந்த மாநாடே சாட்சி. பொள்ளாச்சியில் ஜெயலலிதா பிரசாரத்துக்கு வந்தபோது பெஸ்ட் ராமசாமி, தனியரசு ஆகியோரை மேடையேற்றினார்கள். அவர்கள் இருவரால் கொங்கு சமுதாயத்துக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. எங்களுக்கும் எந்த இழப்பும் இல்லை. பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறேன். இந்தத் தொகுதியில் உள்ள அத்தனை பிரச்னைகளும் எனக்கு அத்துபடி. தேர்தலைக் குறிவைத்து நான் மக்கள் பிரச்னைக்காகப் போராடுபவன் இல்லை. என்னைப் பற்றி என் மக்களுக்குத் தெரியும். நிச்சயம் அவர்கள் என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவார்கள்!''

''பொள்ளாச்சியில் ஜெயலலிதாவுக்கு அதிகப்படியான கூட்டம் கூடியதே?''

''அந்தக் கூட்டம் எப்படி வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து  கூட்டி வந்தனர். அந்தக் கூட்டம் எல்லாம் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடும் கூட்டம் அல்ல.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பொள்ளாச்சியில் எம்.பி-யாக இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்தான். அவர் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் கூட்டி வந்த கூட்டத்தைப் பற்றியோ... ஜெயலலிதாவின் அவதூறுப் பிரசாரத்தைப் பற்றியோ எங்களுக்கு கவலை இல்லை.''

''இதுவரை தனி சின்னத்தில் போட்டியிட்ட உங்கள் கட்சி, இப்போது பி.ஜே.பி. சின்னத்தில் போட்டியிடுவது உங்களுக்கு பின்னடைவுதானே?''

''இது மோடியை பிரதமராக்க நடக்கும் தேர்தல். அரசியல் கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டியாகக் கருதவில்லை. தாமரை சின்னத்துக்குப் போடும் ஓட்டு, நாட்டைக் காப்பற்றப் போடும் ஓட்டு. எனவே நாங்கள் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அரசியல் கட்சி முக்கியமா... நாடு முக்கியமா எனும்போது நாடுதானே முக்கியம்? இது நாட்டு நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. நிச்சயம் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது.''

''சிறுபான்மையினருக்கு எதிரானவர் மோடி என்ற விமர்சனம் பரவலாக உள்ளதே... அது உங்களின் வெற்றியை பாதிக்காதா?''

''ஒரு சிலர்தான் அப்படி தவறான கருத்தைப் பரப்புகிறார்கள். பெருவாரியாக நாட்டின் பொருளாதாரம் முன்னேறினால்தான் தங்களுக்கும் தங்கள் வாரிசுகளுக்கும் வாழ்க்கை என்ற உணர்வு அனைவரிடத்திலும் இருக்கிறது. பெருவாரியான சிறுபான்மை மக்கள் இந்தத் தேர்தலில் மோடியை ஆதரிக்க முடிவெடுத்துள்ளார்கள்!''

''தி.மு.க-வின் எதிர்ப்பை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?''

''எங்களுடைய பிரசாரம் தொடங்கிய பிறகு யாரும் எங்களுக்குப் போட்டியாகவே தெரியவில்லை. யாரைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை. தாமரை சின்னத்தை கிராமம் கிராமாக சேர்த்துக்கொண்டிருக்கிறோம். நிச்சயம் ஜெயிப்போம்.''

''தொகுதி உடன்பாட்டில் உங்கள் கட்சிக்கு சில பிரச்னைகள் வந்ததே... அதெல்லாம் சரியாகிவிட்டதா?''

''அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதியைக் கேட்பதும், அதற்காகப் போராடுவதும் தேர்தல் நேரத்தில் இயற்கை. கூட்டணி என முடிவெடுத்து தொகுதிகள் முடிவான பிறகு எதையும் பார்க்கக் கூடாது. என்னுடைய தொகுதி மட்டுமல்ல... கொங்கு மண்டலத்தில் உள்ள அத்தனைத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜெயிக்க வேண்டும். அதுதான் எங்களின் லட்சியம்!''

- ச.ஜெ.ரவி, படம்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு