Published:Updated:

வெள்ளை நிற தாவணி.. பச்சை நிற பாவாடை...

மக்களை அள்ளிவந்த மணல் லாரிகள்!

பிரீமியம் ஸ்டோரி

தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த ஆண்டின் கோடைகாலப் பொழுதுபோக்கே அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரம்தான்.

ஜெயலலிதா பிரசாரத்துக்காக வரும் ஹெலிகாப்டரைப் பார்ப்பதற்கே மக்கள் மத்தியில் ஏக போட்டி. ஜெயலலிதா பிரசாரம் நடக்கும் இடங்கள் எல்லாம் இன்ஸ்டென்ட்டாக ஒரு மினி திருவிழாவையே  நடத்துகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

வெள்ளை நிற தாவணி.. பச்சை நிற பாவாடை...

கடந்த 13-ம் தேதி தம்பிதுரையை ஆதரித்துப் பேச  கரூர் வந்தார் ஜெயலலலிதா. ஒரு வாரத்துக்கு முன்பே கரூர் லோக்கல் சேனல்களில் அ.தி.மு.க-வினரால் அலப்பறைகள் தொடங்கிவிட்டன. 'கரூர் வருகிறார் புரட்சித்தலைவி அம்மா’ என ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறப்பதையும் சாதனைகளைப் பட்டியிலிடுவதையும் 10 நிமிடத்துக்கு ஒருமுறை போட்டு (24 மணி நேரமும் ஸ்க்ரோலிங் வேறு) விளம்பரம் செய்தவண்ணம் இருந்தனர். ஆட்டோவுக்குக் கொம்பு முளைத்ததுபோல முன்னால் இரண்டு ஸ்பீக்கருடன் 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா’ என ஹை பிட்ச்சில் ஒலிக்கவிட்டு, 'அம்மா வருகிறார்... வாரீர். உங்கள் ஆதரவை அ.தி.மு.க-வுக்குத் தாரீர்’ என சவுண்ட் கொடுத்தனர்.

கரூரில் உள்ள திருமானிலையூரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பிரசார மேடைக்கு மதியம் 2 மணிக்கு ஜெயலலிதா வருவதாக இருந்தது. ஆனால், காலை 8 மணி முதலே பிரசாரம் நடக்கும் இடத்துக்கு மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். ஜெயலலிதா பிரசாரக் கூட்டத்துக்கு எப்போதும் அந்தந்த ஊரில் உள்ள தனியார் பேருந்துகளைப் பிடித்து மக்களைத் திரட்டி வருவார்கள். கரூரில், மணல் மாஃபியா ராஜ்ஜியம் என்பதால், கரூரில் உள்ள ஒரு பெரிய புள்ளியின் உத்தரவின் பெயரில் அன்று மணல் அள்ள வந்த அனைத்து லாரிகளிலும் மக்களை அள்ளி வந்தனர். சுமார் 100 லாரிகள்.

வெள்ளை நிற தாவணி.. பச்சை நிற பாவாடை...

கரூர் கூட்டத்துக்கு நிறைய இளம்பெண்களை அழைத்துவர ஏற்பாடு. அந்தப் பெண்களுக்கு எல்லாம் ஜெயலலிதா வரும் சில நாட்களுக்கு முன்பே பச்சை நிறத்தில் பாவாடையும், வெள்ளை நிறத்தில் தாவணியும் வழங்கப்பட்டன. அதில் தாவணியின் ஓரத்தில் அ.தி.மு.க. கொடி வருமாறு டிசைன் செய்திருந்தனர். தாவணி போட மாட்டேன் என அடம்பிடித்த இளசுகளுக்கு சுடிதார் துப்பட்டாவில் அ.தி.மு.க. கொடி. ஆண்களுக்கு 'கரூர் நாடாளுமன்றத் தொகுதி’ என அச்சடிக்கப்பட்ட சந்தன நிற டி-சர்ட் வழங்கப்பட்டிருந்தது. இதுபோக பிளாஸ்டிக்கில் செய்த இரட்டை இலையைக் கொடுத்துப் பிரசார கூட்டத்துக்கு உள்ளே அனுப்பினார்கள். இப்படி டிசைன் டிசைனாக ஐடியாக்களை யோசித்துத் தீயாக வேலை செய்திருந்தனர். லாரியில் இருந்து தாவணிப் பெண்கள் குதிக்க, அதைப் பார்க்க ஆண்கள் திரண்டுவர... போலீஸ் தலையிட்டு அவர்களை விரட்டியடித்தது.

வெள்ளை நிற தாவணி.. பச்சை நிற பாவாடை...

ஒவ்வொரு லாரியில் இருந்தும் இறங்கியவர்களுக்கு தண்ணீர், மோர் பாக்கெட்டுகளுடன் புளி சாதம், எலுமிச்சை சாதம், பிரியாணி என வகை வகையான பொட்டலங்கள் வழங்கப்பட்டன. உணவு பொட்டலங்களுடன் ரகசிய குறியீடு அச்சிட்ட ஒரு சீட்டும் வழங்கப்பட்டது. அந்த சீட்டு வைத்திருப்பவர்களைத்தான் பிரசாரத்தின் முடிவில் 'கவனிப்பார்களாம்’.

பிரசாரம் நடக்கும் இடத்துக்கு உள்ளே சென்றால், பிரமாண்டமாக மூன்று செட். 'நேற்று’ என்று தலைப்பிட்ட செட்டில் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் தீபம் ஏந்தியிருப்பதுபோல அமைத்திருந்தனர். 'இன்று’ என்ற தலைப்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா நின்றுகொண்டிருக்கிறார். 'நாளை’ என்று எழுதிய செட்டில், செங்கோட்டையில் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றிவைத்து சல்யூட் அடிக்கிறார்.

மேடையில் நின்றிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மேடையில் நின்று மக்களுக்கு கிளாஸ் எடுத்துக்கொண்டிருந்தார். ''அம்மா வந்ததும் எல்லோரும் ஆரவாரமாகக் கைத்தட்டணும். யாரும் சேர் மேல ஏறி நிற்கக் கூடாது. அம்மா பேசும்போது கத்தாதீங்க. அம்மா பேசி நிறுத்தும் இடங்களில் எல்லாம், பலமா உங்கள் கரவொலியை எழுப்புங்கள்'' எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.

வழக்கம்போல ஜெயலலிதாவுக்கு முன்னர் வரும் ஒரு ஹெலிகாப்டரைப் பார்த்ததுமே கூட்டம் பலமாக கத்தத் துவங்கிவிட்டது. விவரம் அறிந்தவர்கள், ''இது அமைச்சர்கள் வரும் ஹெலிகாப்டருப்பா. இதுக்கு அடுத்தாப்புல வர்றதுலதான் அம்மா வருவாங்க'' என சொல்லிக்கொண்டிருந்தபோதே. ஜெ. ஹெலி. கண்ணில் தென்பட்டது.

ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தரை இறங்கிய ஹெலிகாப்டரை நோக்கி நத்தம் விஸ்வநாதனும் செந்தில்பாலாஜியும்  தம்பிதுரையும் ஓடியதைப் பார்க்க வேண்டுமே! ஜெயலலிதா இறங்குவதற்கு வசதியான படிக்கட்டுகளை கறுப்புப் பூனைகள் தூக்கிக்கொண்டு ஓடினர். அங்கே ஜெயலலிதாவுக்கு 'பொக்கே’ கொடுத்துவிட்டு, மீண்டும் மேடை நோக்கி ஓடிவந்தார்கள் நத்தமும் பாலாஜியும். தம்பிதுரை இப்போதும் கடைசியாகத்தான் ஓடிவந்தார். ஜெயலலிதா நிதானமாக  வாகனத்தில் ஏறி மேடை நோக்கி வந்தார். அவருடன் ஒரே ஒரு 20 வயது பெண் மட்டும் அந்த காரில் இருந்தார். ஜெயலலிதா மேடையில் ஏறி இரட்டை இலை சின்னத்தைக் காண்பித்தவுடன் ஆரவாரம்.

கரூரில்தான் முதன் முதலில் பி.ஜே.பி. பற்றி திட்டி வாய் திறந்தார் ஜெயலலிதா. (மோடி, ரஜினியைச் சந்தித்த அதே தினம்). எட்டு முறை ''செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?'' என தனது டிரேட் மார்க் வசனத்தைப் பேசினார். 'எனது தலைமையிலான அரசு’ என்று 18 முறை சொன்னார்.

ஜெயலலிதா ''பி.ஜே.பி-யால் தமிழக மக்களுக்கு ஒரு நன்மையும் கிடையாது. பி.ஜே.பி. வந்தாலும், காங்கிரஸ் வந்தாலும் நமக்கு காவிரி தண்ணீரை விடமாட்டார்கள். தமிழக மக்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என பி.ஜே.பி-யைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். கர்நாடாகவில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற மாட்டார்கள். வாக்காளர்களே வரும் தேர்தல் இந்தியாவின் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல. இந்தியாவின் தலைவிதியை, உங்கள் தலைவிதியை மாற்றி அமைக்கப்போகும் தேர்தல். எனக்கு எல்லாமே நீங்கள்தான். தமிழக மக்கள்தான் என் மக்கள்'' என இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களைப் பற்றி ஒரு ரவுண்டு வந்தார்.

ஜெயலலிதா ஹெலிகாப்டரில் ஏறி கிளம்பியதும், மேடையில் கட்டிய வாழைத் தார், பழங்களை எல்லாம் சூறையாடிவிட்டுச் சென்றனர் மக்கள்.

மதிய திருவிழா இனிதே முடிந்தது.  

        - நா.சிபிச்சக்கரவர்த்தி, பி.கமலா

படங்கள்: க.தனசேகரன்

காக்கிகளின் கட்சி பாசம்!

'தேர்தலை நியாயமாக நடத்துவோம்’ என்று தேர்தல் கமிஷன் மூச்சுக்கு 300 தடவை முழங்கிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் விதிமுறை மீறல்கள் குறைந்தபாடில்லை. இது பெரம்பலூர் தொகுதி கூத்து.

வெள்ளை நிற தாவணி.. பச்சை நிற பாவாடை...

முசிறியில் நடந்த ஜெயலலிதாவின் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் வேலையைக் காக்கிகள் எடுத்துக்கொண்டனர். பாதுகாப்பு வசதிகளை செய்து தருவதோடு நிறுத்திக்கொள்ளாமல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறி கட்சிக் கொடிகள், தொப்பி, இரட்டை இலைகள் கொண்ட விசிறிகள்... ஆகியவற்றை விநியோகம் செய்தனர். என்ன செய்யப்போகிறது தேர்தல் கமிஷன்.

- எம்.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு