Published:Updated:

இடதுசாரிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்!

சொல்கிறார் பழ.நெடுமாறன்!

பிரீமியம் ஸ்டோரி

''தமிழர் நலன் சார்ந்த போராட்​டங்களில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கொள்கைக​ளைக் கொண்ட கட்சிகளோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால், இதுபோன்ற கொள்கை முரண்பட்ட கூட்டணிகளை ஆதரிக்க இயலவில்லை'' - மதுரை வந்திருந்த பழ.நெடுமாறனை சந்தித்தபோது இப்படித்தான் அதிரடியாக ஆரம்பித்தார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தால், ஈழத் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும் என்றும், ராஜபக்ஷே மீது போர்க்குற்ற விசாரணை நடக்கும் என்றும் சொல்கிறார்களே?''

இடதுசாரிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்!

''தமிழ்நாட்டு பி.ஜே.பி. தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்னையில் தீவிரமாகப் பேசுகிறார்கள். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகித்துச் செயல்பட்டார்கள். அதே கட்சியில் சுஷ்மா ஸ்வராஜ், சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பேசிவருகிறார்கள். தமிழக பி.ஜே.பி. தலைவர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளில் ஈழத் தமிழர் பிரச்னை சம்பந்தமாக குறிப்பிட்டிருக்கும்போது, பி.ஜே.பி. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் பிரச்னை சம்பந்தமாக எதுவுமே குறிப்பிடவில்லையே? அவர்கள் ஈழத் தமிழர்  பிரச்னையை முக்கியமாக நினைக்கவில்லை. ஏன், தமிழக மீனவர் பிரச்னையைக்கூட அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் மட்டும் ஈழத் தமிழர் பற்றி பேசுவது தமிழ்நாட்டு மக்களைத் திருப்திப்படுத்துவதற்காகத்தான். அகில இந்தியத் தலைமை இந்தப் பிரச்னையை அடியோடு புறக்கணித்துவிட்டது.''

''அப்படியென்றால் ஈழத் தமிழர்களின் விடுதலை, கச்சத்தீவை திரும்பப்பெறுவது, தமிழீழம் அமைய தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்துவது என்ற கோரிக்கைகளை வலியுறுத்திவரும் அ.தி.மு.க-வை நீங்கள் ஆதரிப்பீர்களா?''

''ஈழத் தமிழர் பிரச்னைக்காக சட்டமன்றத்தில் தீர்மானங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றினார் என்பது உண்மையே. ஏழு சிறைவாசிகளின் விடுதலை விஷயத்தில் அக்கறை காட்டினார் என்பதும் உண்மையே. அதே நேரத்தில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாக அரசு அனுமதியோடு கட்டப்பட்ட முற்றத்தின் பூங்காவை இடித்து நாசம் செய்தது ஏன்? அதுமட்டுமா...

ஈழத் தமிழரை ஆதரித்துப் பேசியதாகப் பல தலைவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. பிரபாகரன் படம் தாங்கிய பதாகைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஈழத் தமிழர் ஆதரவுக் கூட்டங்கள் நடத்துவதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று மண்டப உரிமையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் அச்சிடக் கூடாது என்று அச்சகங்கள் மிரட்டப்படுகின்றன.

ஈழத் தமிழருக்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது மட்டும் போதும் என முதல்வர் நினைக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சியாகக்கூட வர முடியாததற்கு ஈழத் தமிழர் பிரச்னைதான் காரணம் என்பதை ஜெயலலிதா உணர்ந்திருக்கிறார். அந்த நிலை தனக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஈழத் தமிழர் சம்பந்தமாக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றினாரே தவிர, உருப்படியான செயல்களை செயல்படுத்தத் தவறிவிட்டார்.''

''தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிவிட்டதே... தமிழர்கள் இனி அவர்களை ஆதரிக்கலாமா?''

''ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் செய்த துரோகத்தை யாரும் மறந்துவிட முடியாது. அவர்கள் செய்த துரோகத்தை மூடி மறைக்க தி.மு.க. உதவியது. தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு எதிரான போராட்டங்களை நீர்த்துப் போகவைப்பதில் தி.மு.க. அக்கறை காட்டியதே தவிர, இந்தப் பிரச்னையில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட குற்றத்தில்  ராஜபக்ஷேவுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே அளவு பங்கு மன்மோகன் சிங்குக்கும், கருணாநிதிக்கும் உள்ளது. அப்போது தான் செய்த தவறை மறைத்து, காங்கிரஸ் மீது மட்டும் பழியைப் போட்டுவிட்டு தான் தப்பிவிடலாம் என்று நினைக்கிறார். இப்படிப்பட்ட கட்சியை தமிழர்கள் ஆதரிக்கக் கூடாது.''

''அப்படியென்றால் தமிழர்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்?''

''தமிழகத்தில் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்திருப்பது இடதுசாரிகள் மட்டுமே. காலம் கடந்து நிகழ்ந்திருந்தாலும், சரியான முடிவு. அதை நான் வரவேற்கிறேன். கடந்த காலங்களில் கொள்கையற்ற கூட்டணிகளில் அங்கம் வகித்தபோதும், ஆளுங்கட்சி செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி கண்டிக்க கம்யூனிஸ்ட்கள் ஒருபோதும் தவறியது இல்லை. இப்போது இரண்டு கம்யூனிஸ்ட்களும் கூட்டணி அமைத்து மக்களை அணுகியிருப்பது, தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் உள்ள கட்சிகளில் கம்யூனிஸ்ட்களைப்போல தொண்டு, தியாகம் செய்த கட்சிகள் வேறு இல்லை. அரசியலுக்கு வந்தவுடன் பல தலைவர்கள்  கோடீஸ்வரர்களாகி ஆடம்பர வாழ்க்கை வாழும்போது, தோழர் நல்லகண்ணு, சங்கரய்யா போன்றவர்கள் எளிமை வாழ்க்கை வாழ்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே உட்கட்சி ஜனநாயகம் உள்ளது. ஈழத் தமிழர் பிரச்னைகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் நல்ல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழகத்தில் பெரியார், ராஜாஜி, காமராஜர், ஜீவா, அண்ணா போன்றோர், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர் நலன் சார்ந்த பிரச்னைகளில் ஒற்றுமையாகச் செயல்பட்டார்கள். அந்த பொற்காலம் தமிழகத்தில் மீண்டும் வர வேண்டும் என்றால் இடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்.''

- செ.சல்மான், படம்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு