Published:Updated:

ரவிக்குமார் விரலுக்கு மோதிரம் கிடைக்குமா?

ரவிக்குமார் விரலுக்கு மோதிரம் கிடைக்குமா?

பிரீமியம் ஸ்டோரி

திருவள்ளூர் தொகுதிக்காக வீறாப்பு காட்டி போராடிப் பெற்றது விடுதலைச் சிறுத்தைகள். அங்கு களம் காண்கிறார் கட்சியின் பொதுச்செயலாளரான எழுத்தாளர் துரை.ரவிக்குமார். வேட்புமனு வைபவம் முடியும் தருணத்தில்தான் மோதிரம் சின்னம் உறுதியானது. அதுவரை வேட்பாளரின் பெயரை மட்டுமே சொல்லி பிரசாரம் செய்துவந்த விடுதலைச் சிறுத்தைகள், இப்போது சின்னத்தைப் பிரபலப்படுத்த, தொகுதியின் மூலை முடுக்கெங்கும் சுற்றி வருகின்றனர்.

ரவிக்குமார் விரலுக்கு மோதிரம் கிடைக்குமா?

வேனில் சென்று பிரசாரம் செய்தாலும், பல பகுதிகளில் நடந்துசென்று ஓட்டுக் கேட்கிறார் ரவிக்குமார். வயதானவர்களைக் கண்டால், வணக்கம் செலுத்தி அவர்களின் நலனை அக்கறையுடன் விசாரிக்கிறார். ''நானும் உங்கள் வீட்டுப்பிள்ளைதான். எனக்கு மோதிரம் சின்னத்தில் ஓட்டுப் போடுங்க'' என்று கூறும் ரவிக்குமார், வீட்டில் உள்ளவர்களின் நலனையும் விசாரிக்கிறார். இந்த அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. ''தமிழகத்தில் முதல் தொகுதியாக திருவள்ளூர் உள்ளது. இந்தத் தொகுதியை முதன்மைத் தொகுதியாக மாற்றுவதே எனது லட்சியம்'' என்று ஒவ்வொரு பிரசாரத்திலும் முழங்குகிறார். எதுகை, மோனை, அடுக்கு மொழியிலும் பேசி அசத்துகிறார்.  

''கும்மிடிப்பூண்டி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இருந்தும், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. காரணம், தொழிற்சாலைகள் எதிர்பார்க்கும் தகுதியும் திறமையும் இளைஞர்களிடம் இல்லை. அதற்கு உரிய பயிற்சி இளைஞர்களுக்கு கட்டாயம் அளிக்க ஏற்பாடு செய்வேன். அதோடு, திருவள்ளூர் தொகுதியில் பெண்களின் கல்விநிலை பின்தங்கி காணப்படுகிறது. இதற்குத் தீர்வுகாண அரசு கல்லூரிகள் அமைக்கப்படும். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் பெண்களைக் கணக்கெடுத்து, அவர்களின் கல்வியைத் தொடர நடவடிக்கை எடுப்பேன். பெண்களின் கல்விநிலை உயர்ந்தாலே, வீடும் இந்தத் தொகுதியும் நிச்சயம் முன்னேறும்'' என்று சென்டிமென்டாக ரவிக்குமார் பேசுவது, பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

''இந்தத் தொகுதியில் விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாக மாறிவருகிறது. இதனால், விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. என்னை எம்.பி-யாகத் தேர்ந்தெடுத் தால் விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்'' என்று விவசாயிகள் மத்தியில் பேசுகிறார்.

வேட்பாளர் ரவிக்குமார் இப்படி பட்டித்தொட்டி எங்கும் ஓட்டு சேகரிக்க... அவரது  கூட்டணிக் கட்சியினரோ வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உள்ளூர் நிர்வாகிகள் வீட்டில் உள்ளவர்களின் பெயரை உரிமையோடு சொல்லி, 'மோதிரம் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க’ என்கின்றனர்.  

ரவிக்குமாரின் கையில் திருவள்ளூர் தொகுதி மக்கள் மோதிரத்தை அணிவிப்பார்களா?

- எஸ்.மகேஷ்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு