Published:Updated:

ஹரியானா மாநிலத் தேர்தல்... நடப்பது என்ன? A டு Z தகவல்கள் #VikatanInfographics

ஹரியானா மாநிலத் தேர்தல், இன்று (அக்டோபர் 21) நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், தொகுதி மற்றும் வாக்காளர்கள் விவரங்களை, பின்வரும் கட்டுரைத் தொகுப்பில் காணலாம்.

ஹரியானா மாநிலத் தேர்தல்
ஹரியானா மாநிலத் தேர்தல் ( ஓவியம்: அரஸ் )

ஹரியானா மாநிலம் 90 தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் 15 தொகுதிகள் மிகவும் பதற்றத்திற்குரிய தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,82,98,714. இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 98,33,323 மற்றும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 84,65,152. மாநிலம் முழுவதும் 19,425 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைப் பொறுத்தவரை, ஹரியானா மாநில வரலாற்றிலேயே மிக அதிக அளவாக 76.54 விழுக்காடு வாக்குகள் பதிவாயின.

இந்தத் தேர்தலில் தேசியக் கட்சிகளின் சார்பில் 279 வேட்பாளர்களும், மாநிலக் கட்சிகளின் சார்பில் 145 வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சார்பில் 369 வேட்பாளர்களும் மற்றும் 376 சுயேச்சை வேட்பாளர்கள் என 1,169 வேட்பாளர்கள் 90 தொகுதிகளில் களம் காண்கின்றனர்.

தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களில் 117 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதிலும், 70 வேட்பாளர்களின் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. இந்த அளவானது, கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களின் மீதிருந்த வழக்குகளைவிட அதிக எண்ணிக்கையாகும்.

ஐந்து வேட்பாளர்களின் மீது பெண்களுக்கெதிரான தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. அதிலும் இருவர் மீது பாலியல் வன்முறைக் குற்றவழக்குகள் (IPC Section-376) உள்ளன.

புதிய வாக்காளர்களாக இந்த ஆண்டு 6,35,797 ஆண் வாக்காளர்களும், 5,69,218 பெண் வாக்காளர்களும் பதிவு செய்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹரியானா மாநிலத் தேர்தலில் A டு Z தகவல்களைப் பின்வரும் படத்தில் காணலாம்.

Haryana Assembly Elections 2019
Haryana Assembly Elections 2019

வேட்பாளர்களின் கல்வித் தகுதி:

5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 574. கல்லூரி மற்றும் கல்லூரி மேற்படிப்பு படித்தவர்கள் 469. டிப்ளோமா படித்தவர்கள் 35. முனைவர் பட்டம் பெற்றவர்கள் 15. பள்ளி செல்லாதவர்கள் 44. இதில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 19 பேர். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 25 பேர்.

மொத்த வேட்பாளர்களில் 481 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் தோராய சொத்து மதிப்பு 4.31 கோடி.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90.9 விழுக்காடு வேட்பாளர்கள் ஆண்கள்தான். 9.1 விழுக்காடு பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 17 தனித் தொகுதிகளும், 73 பொதுப்பிரிவு தொகுதிகளும் உள்ளன.

2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 47 தொகுதிகளைக் கைப்பற்றி பி.ஜே.பி ஆட்சியமைத்தது. மேலும், 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 10 தொகுதிகளையும் பி.ஜே.பி கைப்பற்றியது.

வாக்காளர்கள்
வாக்காளர்கள்

இன்று (அக்டோபர் 21-ம் நாள்) நடைபெற்று வரும் ஹரியானா தேர்தலில் யார் வெற்றி பெறுவார், யார் ஆட்சியமைப்பார் என்பதை அக்டோபர் 24-ம் தேதி தெரிந்துவிடும்.