Published:Updated:

மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் 600 தீவிர குற்றவழக்கு வேட்பாளர்கள்..!

மகாராஷ்டிரா மாநில தேர்தல் இன்று (அக். 21) நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், தொகுதி மற்றும் வாக்காளர்கள் விவரங்களைப் பின்வரும் கட்டுரைத் தொகுப்பில் காணலாம்.

Maharashtra assembly elections 2019
Maharashtra assembly elections 2019

மகாராஷ்டிரா மாநிலம் 288 தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் 176 தொகுதிகள் மிகவும் பதற்றத்திற்குரிய தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 8,94,46,211. இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 4,63,15,246 மற்றும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 4,27,05,777. மாநிலம் முழுவதும் 95,473 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

கடந்தாண்டைவிட 6,000 வாக்குச்சாவடிகள் இம்முறை அதிகமாக அமைக்கப்படவுள்ளன.
தேர்தல் ஆணையம்

இந்தத் தேர்தலில் தேசியக் கட்சிகளின் சார்பில் 716 வேட்பாளர்களும், மாநிலக் கட்சிகளின் சார்பில் 309 வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சார்பில் 803 வேட்பாளர்களும் மற்றும் 1,409 சுயேச்சை வேட்பாளர்கள், இதர வேட்பாளர்கள் 2 பேர் என 3,239 வேட்பாளர்கள் 288 தொகுதிகளில் களம் காண்கின்றனர்.

தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களில் 916 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதிலும் 600 வேட்பாளர்களின் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. இந்த அளவானது, கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களின் மீதிருந்த வழக்குகளைவிட அதிக எண்ணிக்கையாகும்.

67 வேட்பாளர்களின் மீது பெண்களுக்கெதிரான தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. அதிலும் நால்வர் மீது பாலியல் வன்முறை குற்ற வழக்குகள் (IPC Section-376) உள்ளன. 19 வேட்பாளர்களின் மீது கொலை வழக்குகள் (IPC Section-302) உள்ளன.

2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த மாநிலத்தில் 64 விழுக்காடு வாக்குப் பதிவாகியிருந்தது. 66 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலில் A டு Z தகவல்களைப் பின்வரும் படத்தில் காணலாம்.

Infographics About 
Maharashtra Assembly Elections 2019
Infographics About Maharashtra Assembly Elections 2019

வேட்பாளர்களின் கல்வித் தகுதி:

5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 1,629. கல்லூரி மற்றும் கல்லூரி மேற்படிப்பு படித்தவர்கள் 1,246. டிப்ளமோ படித்தவர்கள் 76. முனைவர் பட்டம் பெற்றவர்கள் 40. பள்ளி செல்லாதவர்கள் 120. இதில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 84 பேர். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 36 பேர்.

மொத்த வேட்பாளர்களில் 1,007 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் தோராய சொத்து மதிப்பு 4.21 கோடி.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 92.4 விழுக்காடு வேட்பாளர்கள் ஆண்கள்தான். 7.6 விழுக்காடு பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 54 தனித் தொகுதிகளும், 234 பொதுப்பிரிவு தொகுதிகளும் உள்ளன.

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 185 தொகுதிகளைக் கைப்பற்றி பி.ஜே.பி தலைமையிலான கூட்டணி ஆட்சியமைத்தது. மேலும், 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 41 தொகுதிகளை பி.ஜே.பி தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.

மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல் 2019
மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல் 2019

நடைபெறும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார், யார் ஆட்சியமைப்பார் என்பதை அக்டோபர் 24-ம் தேதி தேர்தல் முடிவு வரும்போது பொறுத்திருந்து பார்க்கலாம்...