Published:Updated:

அசுரன்... பஞ்சமி நிலம்... ராமதாஸ்... ஸ்டாலின்... தேர்தல் கணக்கில் மோதும் தலைகள்!

நாங்குநேரி, விக்கிரவாண்டி என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்றபோதிலும், விக்கிரவாண்டியில் மட்டும் தேர்தல் களம் கூடுதல் பரபரப்புடன் இருந்தது. காரணம், அங்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மேற்கொண்ட தீவிர பிரசாரம்.

ராமதாஸ், ஸ்டாலின்
ராமதாஸ், ஸ்டாலின் ( Vikatan )

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இரு தொகுதிகளிலும் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என இரு கட்சிகளும் களத்தில் இறங்கி தங்கள் பலத்தைக் காட்டின. ஆனாலும், விக்கிரவாண்டி தேர்தல் களம் சற்று தனித்துக் காணப்பட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்
vikatan

விக்கிரவாண்டியில் அ.தி.மு.க வேட்பாளரும், தி.மு.க வேட்பாளரும் மோதுகிறார்கள் என்றபோதிலும், தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்குமான மோதல்போலவே காணப்படுகிறது தேர்தல் களம். தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ‘வன்னியர் உள்இடஒதுக்கீடு’ அறிக்கையிலிருந்தே இந்த மோதல் தொடங்கியது.

வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர் சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார், ஸ்டாலின்.

மேலும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தி.மு.க ஆட்சியின்போது அளிக்கப்பட்ட பதவிகள், இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவிகள், வன்னியர் வாரியம் அமைக்கப்பட்டது குறித்தும் குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலின்.

ராமதாஸ்
ராமதாஸ்

ஸ்டாலினின் இந்த அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ‘தேர்தலின்போது கொண்டாடவும் தேர்தலுக்குப் பிறகு தூக்கியெறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா?’ என்ற கேள்வியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

அந்த அறிக்கையில், ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்வியடைவது மட்டுமல்லாமல், டெபாசிட்கூட வாங்க முடியாதோ என்ற அச்சம்தான் ஸ்டாலினை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது. ஏ.கோவிந்தசாமியின் மகன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பியபோது அவருக்கு வாய்ப்பு வழங்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் ஆட்சியைப் பிடிப்பது பகல் கனவு’ என்று கடுமையாக விமர்சித்தார் ராமதாஸ்.

மேலும், `கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அவருடன் சண்டையிட்டே வன்னியர்களுக்கான உரிமைகளைப் பெற வேண்டியிருந்தது. மத்திய அமைச்சரவையில் தி.மு.க இடம்பெற்றிருந்தபோது, வன்னியர்களுக்குச் சரியான பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. தி.மு.க மாவட்டச் செயலாளர்களில் போதுமான பிரதிநிதித்துவம் வன்னியர்களுக்கு அளிக்கப்படவில்லை’ என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அதைத் தொடர்ந்து, `தி.மு.க-வை வம்புக்கு இழுக்காதீர்’ என்று தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அதில், `டாக்டர் ராமதாஸுக்குத் தி.மு.க மீது திடீர் கோபம் ஏன்? நமக்கு அடிமையாகக் கிடந்த வன்னியர் பெருமக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து, அவர்களை கலெக்டர்களாக, எஸ்.பி-க்களாக, குரூப்-1 அதிகாரிகளாக, டாக்டர்களாக, இன்ஜினீயர்களாக கருணாநிதி ஆக்கிவிட்டாரே என்ற கோபமா?

அ.தி.மு.க-வுக்கு விருந்து வையுங்கள். அது, உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அப்படி விருந்து வைத்ததற்காக வன்னியர் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல அரிய திட்டங்களை நிறைவேற்றிய தி.மு.க-வைக் கொச்சைப்படுத்தாதீர்கள். உங்கள் மகனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்கிக் கொடுத்த தி.மு.க-வை வம்புக்கு இழுக்காதீர்கள்’ என்று கடுமையாக எதிர்வினையாற்றினார், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

அசுரன்
அசுரன்
ஷா கமிஷன் அறிக்கையில், மிசா கைதிகள் பட்டியலில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை? காரணம்!

அடுத்ததாக, ‘அசுரன்’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘இது படம் அல்ல, பாடம்’ என்று தன் ட்விட்டரில் பதிவிட்டார், ஸ்டாலின். அதில், ‘பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாகவைத்து சாதியச் சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள்” என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன், அசுரன் பட நாயகன் தனுஷைத் தொடர்புகொண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார், ஸ்டாலின்.

உடனே, ராமதாஸ் ஒரு ட்வீட் போட்டார். “பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன், படம் அல்ல... பாடம்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத்தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!” என்று பதிவிட்டார் ராமதாஸ். அதனால், ‘முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதா?’ என்ற கேள்வி அதிர்ச்சியுடன் கிளம்பியது.

அசுரன்
அசுரன்
ஸ்டாலின் Vs ராமதாஸ்... பற்றி எரியும் விவகாரம்... ரசிக்கும் அ.தி.மு.க!

அதற்கு, முரசொலி அலுவலகம் அமைந்திருப்பது பஞ்சமி நிலம் அல்ல என்று பட்டா நகலை இணைத்து ட்வீட் வெளியிட்டார் ஸ்டாலின். அதில், ‘மருத்துவர் ராமதாஸ், தற்போது முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழிவழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை. அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார். அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும் அவர் மகனும் அரசியலைவிட்டு விலகத் தயாரா?' என்று சவால்விட்டார் ஸ்டாலின்.

ராமதாஸ் விடவில்லை. அடுத்து ஒரு ட்வீட் போட்டார். `முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஸ்டாலின் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குக் காட்ட வேண்டிய ஆதாரம், நிலப்பதிவு ஆவணமும் மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா? முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார். அப்படியென்றால், இடையில் சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?

முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில், அதற்குமுன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது, உண்மை விளம்பி ஸ்டாலினுக்குத் தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்குச் சொந்தமான மனை என்கிறார், ஸ்டாலின். அப்படியானால், அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்
"சிறையில் ஸ்டாலின் என்மேல்தான் விழுந்தார்!" - மிசா விவகாரத்தில் வெடிக்கும் கி.வீரமணி

நில அபகரிப்பு தி.மு.க-வினருக்கு முழுநேரத் தொழில்தானே? அநாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அ.தி.மு.க ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை, 2007-ல் தி.மு.க ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்துகொண்ட நியாயவான்கள்தானே தி.மு.க தலைமை” என்று அடுக்கடுக்கான கேள்விகளுடன் சாடினார் ராமதாஸ்.

இந்த அறிக்கை மோதல்கள், ட்விட்டர் மோதல்கள் அனைத்துமே விக்கிரவாண்டியில் கணிசமாக இருக்கும் வன்னியர் சமூகத்தினரின் வாக்குகளைக் குறிவைத்தே நடப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ம.க-வுக்கு அதிக செல்வாக்குள்ள வட தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றியதால், இந்த முறை தம்முடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பா.ம.க இருக்கிறது. ஆகையால், வன்னியர் வாக்குகளைக் குறிவைத்து ஸ்டாலின் வெளியிட்ட உள்ஒதுக்கீடு, மணிமண்டபம் பற்றிய அறிவிப்புகள், பா.ம.க-வைப் பதற்றமடையச் செய்ததாகவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரலாம் என்று சொல்லப்படுகிறது. 2021-ல் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இந்தச் சூழலில், இது வெறும் இடைத்தேர்தல்தானே என்று நினைத்துவிடாமல், இதில் வென்றுகாட்டி தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன. குறிப்பாக, தன் செல்வாக்கு அதிகமுள்ள விக்கிரவாண்டியில் அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பா.ம.க-வுக்கு இருக்கிறது.

அசுரனில் சொல்லப்படும் பஞ்சமி நிலம்!- ஸ்டாலினின் ட்வீட்டும் ராமதாஸின் கேள்வியும்