Published:Updated:

தி.மு.க வழியில் சிவசேனா... தேர்தல் களத்தில் சவாலைச் சந்திப்பாரா, ஆதித்யா தாக்கரே?

தாக்கரே வாரிசுகள்
News
தாக்கரே வாரிசுகள்

பதவி வேண்டாம் என்பது பால் தாக்கரேவின் கொள்கை. சொன்னதுபோல , பால் தாக்கரே கடைசிவரை தேர்தலில் நின்றதில்லை.

தி.மு.க-வுக்கும் சிவசேனாவுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. முன்னாள் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவுக்குப் பிறகு, அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவரானார். தொடர்ந்து, தி.மு.க இளைஞரணித் தலைவராக ஸ்டாலினின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டார். அதுபோல, சிவசேனா கட்சியிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தலைவர் பதவிக்கு வர முடியும்.

பால் தாக்கரே காலத்தில், தன் மகன் உத்தவ் தாக்கரேயைவிட, தம்பி மகன் ராஜ் தாக்கரேவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். பால் தாக்கரேயின் மனைவியும் ராஜ் தாக்கரேயின் தந்தை ஸ்ரீகாந்தின் மனைவியும் சகோதரிகள். இதனால், இரு குடும்பமும் ஒன்றாக, மும்பை பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்திலேயே வசித்தன. பால் தாக்கரேயின் அரசியல் வாரிசாகவே ராஜ் தாக்கரேயைப் பார்க்கத் தொடங்கினர் மராட்டிய மக்கள்.

பால்தாக்கரே, உத்தவ் மற்றும் ஆதித்யா
பால்தாக்கரே, உத்தவ் மற்றும் ஆதித்யா

ஒருகட்டத்தில், பால் தாக்கரே, ராஜ் தாக்கரேயை ஒதுக்க, அவர் சிவசேனாவில் இருந்து விலகி, நவநிர்மான் சேனா என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இதனால், பால் தாக்கரேயின் மறைவுக்குப் பிறகு , அவரின் மகன் உத்தவ் தாக்கரேயின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிவசேனா வந்தது.

தி.மு.க-வில் இளைஞரணி இருப்பதுபோல சிவசேனாவில் யுவ சேனா என்ற பிரிவு உண்டு. பால்தாக்கரே உயிரோடு இருந்தபோதே, கடந்த 2010-ம் ஆண்டு யுவசேனாவின் தலைவராக உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே நியமிக்கப்பட்டார். அப்போது, ஆதித்யா இளைஞர்தான்... வயது 20 மட்டுமே!

கட்சிப் பதவியைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதுதானே அரசியல் வாரிசுகளின் நோக்கமாக இருக்க முடியும். ஆதித்யா தாக்கரே மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை களம் காண்கிறார், 29 வயதே நிரம்பிய ஆதித்யா. ஒர்லி தொகுதியில் போட்டியிடும் ஆதித்யா தாக்கரே, சமீபத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தந்தை உத்தவ் தாக்கரே, தாயார் ரேஷ்மி, மூத்த சகோதரர் தேஜாஸ் ஆகியோர், ஆதித்யா வேட்பு மனு தாக்கல் செய்தபோது உடனிருந்தனர். பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.16.5 கோடிக்கு சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தொழில், 'பிசினஸ்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அசையா சொத்துகள் ரூ. 4.76 கோடிக்கும், அசையும் சொத்துகள் ரூ.11.38 கோடிக்கும், நகைகள் ரூ.64.65 லட்சத்துக்கும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஆதித்யா, தனக்கு சொந்தமாக ரூ. 6.5 லட்சம் மதிப்பில் பி.எம்.டபிள்யு கார் இருப்பதாக தெரிவித்திருப்பது மட்டும் இடிக்கிறது. ஆதித்யா தாக்கரே மீது எந்தக் கிரிமினல் வழக்கும் இல்லை. கால்பந்து வீரர், கவிஞர், எழுத்தாளர் எனப் பல அடையாளங்கள் ஆதித்யாவுக்கு உண்டு. மும்பை மாவட்ட கால்பந்து சங்கத் தலைவராகவும் உள்ளார்.

வேட்புமனுத்தாக்கல் செய்த ஆதித்யா தாக்கரே
வேட்புமனுத்தாக்கல் செய்த ஆதித்யா தாக்கரே

கடந்த 1966-ம் ஆண்டு பால்தாக்கரே, சிவசேனா காட்சியைத் தொடங்கினார். 'தேர்தலில் நிற்க மாட்டேன், அரசுப் பதவி வேண்டாம்' என்பது பால்தாக்கரேயின் கொள்கை. சொன்னதுபோல கடைசிவரை, பால்தாக்கரே தேர்தலில் நின்றதில்லை. அரசுப் பதவியும் வகித்ததில்லை. யார் முதல்வராக இருந்தாலும் பால்தாக்கரேயின் கண்ணசைவில்தான் ஆட்சி நடைபெறும். ஆனால், இனிமேல் பால்தாக்கரேயின் குடும்பத்தினரே ஆட்சி அதிகாரத்தில் அமரப்போகின்றனர்.

மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றிபெற்றால், யாருக்கு அதிகத் தொகுதி கிடைக்கிறது என்பதன் அடிப்படையில், முதல்வர் பதவியில்கூட ஆதித்யா அமர வைக்கப்படலாம். 20 வயதிலிருந்து ஆதித்யா கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டவர். கட்சிக்காகப் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். 'தன்னைவிட வருங்காலத்தில் ஆதித்யா சிறந்த தலைவராக உருவெடுப்பார்' என்பது உத்தவ் தாக்கரே எண்ணம். பால் தாக்கரேயின் குடும்பத்திலிருந்து முதன்முறையாகத் தேர்தலில் களம் காண்பது ஆதித்யாதான். இதனால், வெற்றிவாய்ப்புள்ள சிறிய தொகுதியான ஒர்லியில் அவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தத் தொகுதியில், கடந்த 1990-ம் ஆண்டுமுதல் சிவசேனாவே வெற்றிபெற்றள்ளது. 2010-ம் ஆண்டு மட்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சச்சின் ஆகிர் வெற்றிபெற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, சச்சின் ஆகிர் தற்போது சிவசேனாவில் ஐக்கியமாகியுள்ளார். இவரின் உதவியுடன் ஒர்லி தொகுதியில் வெற்றிபெற்றுவிடலாம் என்பது ஆதித்யாவின் கணக்கு. பால் தாக்கரேயின் பேரன் தேர்தலில் போட்டியிடுவதால், அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாது என்று சிவசேனா கருதியது. அந்தக் கட்சி, இப்படி நினைப்பதற்கு ஒரு ஃபிளாஷ்பேக் கதையும் உண்டு.

சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே

கடந்த 2006-ம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலத்தில், பாராமதி தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி திடீரென இறந்துவிட்டார். பாராமதி தொகுதி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரின் சொந்தத் தொகுதி. எனவே, இடைத்தேர்தலில் தன் மகள் 37 வயதான சுப்ரியா சுலேவை சரத்பவார் களம் இறக்கினார். சுப்ரியா சுலேவுக்கு அதுதான் முதல் தேர்தல். அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா வலுவான கட்சியாக இருந்தது. சுப்ரியாவை எதிர்த்து சிவசேனா வேட்பாளரை நிறுத்தினால், அவரின் வெற்றி கேள்விக்குறிதான்? ஆனால், சுப்ரியாவை எதிர்த்து சிவசேனா வேட்பாளரை நிறுத்தவில்லை.

``சுப்ரியா, மகராஷ்டிராவின் மகள். அவர், டெல்லி செல்ல வேண்டும்" என்று பெருந்தன்மையோடு பால் தாக்கரே அப்போது கூறினார். அதனால், பால்தாக்கரேயின் குடும்பத்திலிருந்து முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிடும் ஆதித்யா தாக்கரேயை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ், வேட்பாளரைக் களமிறக்காது என்று சிவசேனாவினர் கருதினர்.

ஆனால், தேசியவாத காங்கிரஸ் மும்பையின் பிரபல வழக்கறிஞர் சுரேஷ் மானேவை, ஆதித்யாவுக்கு எதிராக நிறுத்தியுள்ளது. ஆகவே, ஆதித்யா தாக்ரே சந்திக்கும் முதல் தேர்தலே சவால் நிறைந்ததாகவே இருக்கப்போகிறது!