Published:Updated:

`பா.ஜ.க-வுடன் நெருக்கமா இருக்கேன்; எனக்கு வாக்களியுங்கள்!'- வேட்பு மனுத்தாக்கல் செய்தார் ஏ.சி.சண்முகம்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

``வேலூர் தொகுதியில் தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டு பிரயோஜனம் இல்லை. நாடாளுமன்றத்துக்கு ஏற்கெனவே சென்றுள்ள 37 எம்.பி-க்கள் தூரத்திலிருந்து மோடியைக் கும்பிடுகிறார்கள்’’ என்று அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் விமர்சனம் செய்திருக்கிறார்.

வேட்புமனு தாக்கல் செய்த ஏ.சி.சண்முகம்.
வேட்புமனு தாக்கல் செய்த ஏ.சி.சண்முகம்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று காலை 11.40 மணியளவில், தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அமைச்சர்களுடன் ஏ.சி.சண்முகம்
அமைச்சர்களுடன் ஏ.சி.சண்முகம்

மாற்று வேட்பாளராக ஏ.சி.சண்முகத்தின் மனைவி லலிதா லட்சுமி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஏ.சி.சண்முகம், ``அனைத்துக் கட்சிகளும் மீண்டும் அதே வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன. அப்படியிருக்க வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தைக் கூறுமாறு பலதரப்பட்ட மக்கள் என்னிடம் கேட்டார்கள். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் வலுவான ஆட்சி அமைந்திருக்கிறது. 37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றாலும் அவர்கள் கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறார்கள். டெல்லியில் அவர்களின் கனவு பலிக்கவில்லை. வேலூர் மக்கள் தெளிவாக சிந்திக்கிறார்கள். தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேலூர் மக்கள் தயாராக இல்லை. தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டாலும் பிரயோஜனம் இல்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சி இருக்கிறது. ஆளும்கட்சியான பா.ஜ.க-வுடன் நெருக்கமாக உள்ள எனக்கு வாக்களித்தால் மட்டுமே இந்தத் தொகுதிக்கு நல்லது செய்ய முடியும். தமிழகத்தில் 37 தொகுதிகளில் அளித்த வாக்குகள் வீணாகிப் போய்விட்டன. இந்தத் தொகுதியிலும் உங்கள் வாக்குகளை வீணாக்கிவிடாதீர்கள். தேசியத் தலைவர்கள் எனக்காகப் பிரசாரம் செய்யவருவார்கள். பிரதமரும் வருவார்’’ என்றார்.

தமிழகத்தில் 37 தொகுதிகளில் அளித்த வாக்குகள் வீணாகிப் போய்விட்டன. இந்தத் தொகுதியிலும் உங்கள் வாக்குகளை வீணாக்கிவிடாதீர்கள்.
ஏ.சி.சண்முகம்

இதைத்தொடர்ந்து, அமைச்சர் கே.சி.வீரமணி பேசுகையில், ``ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவின் குடும்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அவர்களை மக்கள் ஏற்கவில்லை. இந்தக் கட்சியை சசிகலாவின் குடும்பத்தினர் வழிநடத்தினால் அழிவுக்குச் சென்றுவிடும். மக்கள் ஆதரவு இல்லாமல் போனதால் தினகரன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை’’ என்றார்.

ஏ.சி.சண்முகத்துக்கு இன்று திருமணமான நாள் என்பதால், காலையிலேயே வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்லியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்திருக்கிறார். அதன்பிறகு, நல்ல நேரம் பார்த்து வேட்புமனுத் தாக்கல் செய்ததாக அவருடைய ஆதரவாளர்கள் கூறினர். ``வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளான இன்று மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்துள்ளனர்'' என்று வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.