Published:Updated:

இடைத்தேர்தல் பட்ஜெட்...இரண்டு தொகுதி மக்களுக்கு ஜாக்பாட்!

இதைத் தவிர தீபாவளி பண்டிகையும் விரைவில் வருவதால் வாக்காளர்களை குஷிப்படுத்தி வாக்குகளை வாங்க ஆளும்கட்சி மும்முரமாக இருக்கிறது. ஓட்டுக்கு இரண்டாயிரம் வரை வழங்க நிர்ணயம் செய்துள்ளார்கள்.

அ.தி.மு.க நேர்காணல்
அ.தி.மு.க நேர்காணல்

தேர்தல் என்றாலே திருவிழாக் கொண்டாட்டமாகவே பார்க்கப்படும். அதிலும் இடைத்தேர்தல் என்றால் தமிழகத்தில் சொல்ல வேண்டியதில்லை. ஆளும்கட்சியோ, எதிர்க்கட்சியோ கரன்சியைக் களத்தில் இறக்கி வாக்காளர்களை வசப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கிவிடுவார்கள். இந்தக் கலாசாரம் தமிழகத்தில் எழுதப்படாத நடைமுறை என்றாகிவிட்டது.

தி.மு.க நேர்காணல்
தி.மு.க நேர்காணல்

அக்டோபர் 21-ம் தேதி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாங்குநேரி தொகுதியில் ஆளும் அ.தி.மு.கவும், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.கவும், ஆளும் அ.தி.மு.கவும் நேரடியாக மோத உள்ளன. தேர்தல் நடைபெற உள்ள இரண்டு தொகுதிகளுமே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வசம் இருந்த தொகுதிகள் என்பதால், இரண்டில் ஒன்றையாவது வென்றாலே, அது தங்களுக்கு பலம் என்று கருதுகிறது அ.தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதியில் விழுப்புரம் மாவட்ட தி.மு.க பொருளாளராக இருக்கும் புகழேந்தியை அந்தக் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதேபோல் அ.தி.மு.க சார்பில் நாங்குநேரியில் நாராயணன் என்பவரையும், விக்கிரவாண்டியில் கானை ஒன்றியச் செயலாளர் முத்தமிழ்செல்வன் என்பவரையும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் விக்கிரவாண்டிக்கு பொன்முடி தலைமையில் தேர்தல் பொறுப்புக்குழுவை தி.மு.க அறிவித்துள்ளது. ஆளும் அ.தி.மு.க நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளுக்கும் எந்தெந்த மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்னும் இரண்டு நாள்களில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பிக்க உள்ளது. முதல்கட்டமாக இரண்டு தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கும் வேலையை கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. ஆனால், நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் அந்த மாவட்ட தி.மு.க வினர் பணிகளைத் தொடங்க முடியாமல் இருக்கிறார்கள்.

புகழேந்தி- ஸ்டாலின்
புகழேந்தி- ஸ்டாலின்

விக்கிரவாண்டி தொகுதியில் பூத் கமிட்டிக்கு முதல் ரவுண்டில் தி.மு.க சார்பில் ரூ.5000 கொடுக்க உள்ளார்கள். அடுத்த ரவுண்டிலிருந்து ரூ.10,000 என்று முடிவு செய்துள்ளார்கள். அதே தொகுதியில் ஆளும்கட்சியினர் முதல் ரவுண்டில் ரூ.10,000 வழங்க முடிவு செய்துள்ளார்கள்.``50 கோடி வரை செலவு செய்து வேட்பாளரை நான் ஜெயிக்க வைக்கிறேன்” என்று அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதி கொடுத்துள்ளார் என்கிறார்கள். தி.மு.க தரப்பில் அறிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் இடைத்தேர்தல் செலவு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் குறித்து தி.மு.கவினர் கூறுகையில், ``விக்கிரவாண்டியில் நாம் ஜெயித்தாக வேண்டும். எனவே, 50 கோடி ரூபாய் என்றாலும் செலவு செய்யலாம் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்'' என்றனர். அதேபோல் நாங்குநேரி தொகுதியில் முப்பது முதல் நாற்பது கோடி ரூபாய் வரை செலவாகலாம் என ஆளும்கட்சி பட்ஜெட் போட்டுள்ளது. அந்தத் தொகுதியின் கரன்சி பொறுப்பை அமைச்சர் தங்கமணி எடுத்துக்கொள்ளப்போகிறார்.

இதைத் தவிர தீபாவளி பண்டிகை வேறு வருவதால் வாக்காளர்களை குஷிப்படுத்தி வாக்குகளை வாங்க ஆளும்கட்சி மும்முரமாக உள்ளது. அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். ``ஓட்டுக்கு ரூ.2000 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 80 சதவிகித வாக்காளர்களுக்கு முழுமையாக பண விநியோகத்தை நடத்தி முடித்திட தலைமை திட்டமிட்டுள்ளது'' என்கிறார்கள். விக்கிரவாண்டியில் தி.மு.க தரப்பும் ரூ.2000 கொடுக்க முடிவு செய்துள்ளது.

DMK and ADMK head offices
DMK and ADMK head offices

இதனால், தி.மு.க கொடுக்கும் தொகையை விட கூடுதலாக பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடியும் ஆளும்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி எவ்வளவு செலவு செய்யமுடியுமோ அவ்வளவு செய்துகொள்ளட்டும் என்று தி.மு.க ஒதுங்கிவிட்டது. இதனால் இரண்டு தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு அக்டோபர் மாதம் ஜாக்பாட் அடிக்க உள்ளது.