தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி தமிழகம் முழுவதிலும் நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். சென்னையில் தனது வாக்கைப் பதிவுசெய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தி.மு.க-வைப் பொறுத்தவரை வரை இனிமேல்தான் அவர்களின் கச்சேரியைத் தொடங்கப்போவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதை 2 மணிக்கு மேல் ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளை தி.மு.க-வினர் செய்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதை நீங்களும் பார்ப்பீர்கள்.

ஒவ்வொரு ஓட்டுக்கும் 500, 1,000 என சென்னையில் பல இடங்களில் பணம் பட்டுவாடா நடக்கிறது. அதையெல்லாம் காவல்துறை கண்டும் காணாமல் இருக்கிறது. என்னதான் பணம் கொடுத்தாலும்கூட, இந்த ஆட்சிக்கு புத்தி வர வேண்டும், இனியாவது திருந்த வேண்டும் என்று மக்கள் எங்களுக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டனர்" என்றார்.
