Published:Updated:

இடைத்தேர்தல் கள நிலவரம்... உற்சாக அ.தி.மு.க... உறக்கத்தில் தி.மு.க!

இரண்டு தொகுதிகளிலும் ஆளும்கட்சியின் ஆளுமை அதிகரித்துவரும் நேரத்தில் அதைத்தடுக்க முடியாமல் தி.மு.க தரப்பு திண்டாடிவரும் நிலைமை உருவாகியுள்ளது.

தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன்  வேட்பாளர் புகழேந்தி
தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் வேட்பாளர் புகழேந்தி

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிவிட்டது. ஆரம்பகட்டத்திலேயே இரண்டு தொகுதிகளிலும் ஆளும்கட்சியின் ஆளுமை அதிகரித்துவரும் நிலையில், அதைத்தடுக்க முடியாமல் தி.மு.க தரப்பு திண்டாடிவரும் நிலைமை உருவாகியுள்ளது.

அ.தி.மு.க வேட்பாளர்கள்.
அ.தி.மு.க வேட்பாளர்கள்.

விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் விழுப்புரம் மாவட்டத் தி.மு.க பொருளாளர் புகழேந்தி களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். இவரின் சொந்தத் தொகுதி விக்கிரவாண்டி அல்ல. அதே நேரம் அ.தி.மு.க சார்பில் காணை ஒன்றியச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். இவரது சொந்த தொகுதி விக்கிரவாண்டி என்பதும், இவர்கள் குடும்பம் ஏற்கெனவே ஊராட்சி மன்றத் தேர்தலில் தொடர் வெற்றியை பெற்றுவந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நாங்குநேரி தொகுதி தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி களத்தில் நிற்கிறது. இந்தக் கட்சியின் வேட்பாளராக ரூபி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்துவருகிறார். சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம். அதே நேரம் அ.தி.மு.க சார்பில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த நாராயணன் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெளியூர் வேட்பாளர்களைக் களத்தில் நிறுத்தியுள்ளது. ஆனால், ஆளும்கட்சி உள்ளுர் வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருக்கிறது. தேர்தல் போட்டியில் மண்ணின் மைந்தர்கள் என்கிற இந்த கோஷத்தை ஆளும்கட்சி தங்களுக்கு சாதகமாகக் கையாண்டு வருகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் எளிதாக வெற்றி பெறவேண்டிய தி.மு.க, ஆரம்பத்திலேயே தடுமாற்றத்துக்குள்ளாகியிருக்கிறது என்கிறார்கள் அந்தக் கட்சியினர்.

“உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்!”- இடைத்தேர்தல் வேகத்தில் சி.வி.சண்முகம்
அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்
அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்

“விக்கிரவாண்டி தொகுதியின் பொறுப்பாளராக பொன்முடி இருக்கிறார். அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் என்று அறிவிப்பு வந்தபோதே பொன்முடி, புகழேந்தியிடம் நீதான் வேட்பாளர் என்று சொல்லிவிட்டார். ஆனால், அந்தத் தொகுதிக்குள் இரண்டு ஒன்றியம் வருகிறது. ஒரு பேரூராட்சி வருகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும் தி.மு.க நிர்வாகிகளாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக்கூட பொன்முடி மறந்தும் பரிசீலனை செய்யவில்லை என்கிற வருத்தம் உள்ளுர் தி.மு.க உடன்பிறப்புகளிடம் உள்ளது. அதேநேரம் தி.மு.க வேட்பாளரை அறிவித்த பிறகே, அ.தி.மு.க தரப்பு வேட்பாளரை அறிவித்தது. அப்போதே மாவட்ட அமைச்சரான சி.வி.சண்முகம் சொந்த தொகுதியிலிருந்து ஒருவரை களத்தில் இறக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்த சாய்ஸ்தான் முத்தமிழ்ச்செல்வன். உண்மையில் இந்தத் தொகுதியில் பரவலாக செல்வாக்கு பெற்ற குடும்பம் அவர்களுடையது. அதோடு விக்கிரவாண்டி தொகுதியில் 2016-ல் ஏற்பட்ட தோல்விக்கு இந்த முறை பழிதீர்த்துவிட வேண்டும் என்பதில் சி.வி.சண்முகம் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் இதுவரை எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத புதிய யுக்தியாக கூட்டணி கட்சிகளான பா.ம.க மற்றும் தே.மு.தி.க இரண்டு கட்சிகளுக்கும் தனித்தனியாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டத்தில் சி.வி.சண்முகம் “விஜயகாந்த் உடல்நலம் நன்றாக இருந்திருந்தால் இன்றைக்கு தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவராக மாறியிருப்பார். உங்களுக்கு அ.தி.மு.க உள்ளாட்சி தேர்தலில் உரிய மரியாதை வழங்கும்” என்று உணர்ச்சி ததும்ப பேசியிருக்கிறார்.

`விஜயகாந்த் மட்டும் நன்றாக இருந்திருந்தால்..!' - விக்கிரவாண்டியில் உருகிய சி.வி.சண்முகம்
C.V.Shanmugam
C.V.Shanmugam
T.Silambarasan

தி.மு.க-வில் பொன்முடி தரப்போ ஜெயித்துவிடுவோம் என்று அதிதீ நம்பிக்கையில் இருந்துவருகிறது. கள நிலவரம் தி.மு.க -வைவிட அ.தி.மு.க-வுக்கே சாதகமாக இருந்துவருகிறது. பொன்முடியோ வேட்பாளரான புகழேந்தியைத் தனது வீட்டின் வேலைக்காரர் போன்று கீழே அமர வைத்துள்ளார். தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் களத்தில் இறங்கி வேலைபார்ப்பதைவிட வீட்டில் அமர்ந்து வேலைபார்க்கும் காட்சியே அதிகமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்றவில்லை என்றால் விக்கரவாண்டியை தி.மு.க பறிகொடுக்க வேண்டியிருக்கும்” என்கிறார்கள்.

நாங்குநேரி தொகுதியைக் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவேண்டும் என்று அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோதே அதை ரசிக்கவில்லை தி.மு.க. நம்மிடம் அவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்களா என்று அப்போது தி.மு.க-வுக்குள் முணுமுணுப்பு எழுந்தது. மறுபுறம் காங்கிரஸ் கட்சிக்குள்ளோ தேர்தல் செலவு முழுவதையும் பார்க்கும் அளவுக்கு கரன்சி உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்று வாய்மொழியாகச் சொல்ல பல கதர் சட்டைக்காரர்கள் கவலையடைந்துவிட்டனர். “நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லி தலைமை வேட்பாளர்களுக்குக் கணிசமான அளவில் நிதி உதவி செய்ததே. அதேபோல் இந்த ஒரு தொகுதிக்கு செய்யக்கூடாதா... காசு இருக்கிறது என்பதற்காக சென்னையில் வசிப்பவர்களை இங்கு வேட்பாளராக நிறுத்தினால் மக்களிடம் எப்படி வாக்கு வாங்க முடியும்” என்று புலம்புகிறார்கள். அந்தத் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள தி.மு.க-வினரோ “எங்கள் கட்சி போட்டியிட்டாலே கைக்காசை செலவழிக்க முடியாத அளவுக்கு நாங்கள் திண்டாட்டத்தில் இருக்கிறோம். இதில் அடுத்த கட்சியினரின் வெற்றிக்காக நாங்கள் எதற்குச் சொந்தமாக செலவழிக்க வேண்டும்” என்று பட்டும்படாமல் பணியாற்றி வருகிறார்கள். இதனால் அந்தத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் திண்டாடி வருகிறார்.

ரூபி மனோகரன் பிரசாரம்
ரூபி மனோகரன் பிரசாரம்

ஆனால், அ.தி.மு.க தரப்பிலோ உள்ளுர் வேட்பாளர் அந்தத் தொகுதியில் கணிசமாக இருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தனி டிராக்கில் களத்தில் வேலை செய்கிறார்கள். தங்கமணியைப் பொறுப்பாளராக வேறு போட்டிருப்பதால் பணத்துக்குப் பஞ்சமில்லை. கிறுஸ்துவ மக்கள் கணிசமாக அந்தத் தொகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் வாக்கு காங்கிரஸ் கட்சிக்குச் சென்றால் அதை ஈடுகட்ட இந்து சமூகத்தினர் வாக்குகளைக் கவர வேண்டும் என்று பி.ஜே.பி ஆதரவையும் இன்று பெற்றுவிட்டார்கள். இந்த இரண்டு தொகுதிகளுமே தி.மு.க எளிதாக வெற்றி பெறவேண்டிய தொகுதிகள். ஆனால், அந்த அதீத நம்பிக்கையே இந்தத் தேர்தலில் அவர்களுக்கு எதிராகவும் இருந்துவிடும் என்று அச்சப்படுகிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். இதைக் கவனித்தில் கொண்டு ஸ்டாலினும், கூட்டணி கட்சியை அனுசரித்து காங்கிரஸ் கட்சியும் களத்தில் மாற்றங்கள் செய்தால் மட்டுமே இரண்டு தொகுதிகளும் அவர்கள் வசம் இருக்கும் என்பதே, இப்போது இரண்டு தொகுதிகளின் நிலையாக இருக்கிறது.