Published:Updated:

`மெஜாரிட்டி இருந்தா மட்டும் போதாது!' - தர்ணாவில் ஈடுபட்ட திண்டுக்கல் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்

பாலபாரதி, செந்தில் குமார் எம்.எல்.ஏ
பாலபாரதி, செந்தில் குமார் எம்.எல்.ஏ

`எங்களுக்கு வேட்புமனு கொடுக்கலை. அதனால தேர்தல் செல்லாது'

திண்டுக்கல் ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. மொத்தமுள்ள 19 உறுப்பினர்களில் தி.மு.க 8 இடங்களிலும், சி.பி.எம் 2 இடங்களிலும், ம.தி.மு.க 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க 6 இடங்களிலும், சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான இடங்கள் 10 உறுப்பினர்கள். இந்நிலையில், தி.மு.க கூட்டணிக்கு 11 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே, தலைவர் பதவியைப் பிடித்துவிடலாம் தி.மு.கவினர் தயாராக வந்தனர். சுயேச்சை உறுப்பினர்கள் இன்று அலுவலகம் வரவில்லை.

வெளியேறிய அதிகாரி
வெளியேறிய அதிகாரி

அ.தி.மு.க திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ஜெயசீலன், 10 வது வார்டில் வெற்றி பெற்றிருந்தார். அவர், தானும் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார். அதற்கான வேட்புமனுவைத் தேர்தல் அலுவலர் கொடுத்தார். அதை வாங்கிய ஜெயசீலன் கிழித்துப் போட்டு, சுயேச்சை உறுப்பினர்களை தி.மு.கவினர் கடத்தி விட்டனர். அவர்களை மீட்க வேண்டும். அதுவரை தேர்தல் நடத்தக்கூடாது எனத் தர்ணாவில் ஈடுபட்டார்.

இந்தத் தகவல் கேள்விப்பட்டு ஒன்றிய அலுவலகம் முன்பாக முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, பழநி எம்.எல்.ஏ சி.பி.செந்தில்குமார் மற்றும் 500-க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் திரண்டனர். தேர்தல் நடத்தாவிட்டால் சாலைமறியல் செய்வோம் எனத் தி.மு.கவினர் அறிவித்தனர்.

ராஜா
ராஜா

இதனால் தேர்தல் அதிகாரி, தேர்தலை நடத்தினார். தி.மு.க கூட்டணியில் 5 வது வார்டில் வெற்றி பெற்ற ராஜா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, ராஜாவை ஒன்றியத் தலைவராக அறிவித்த தேர்தல் அலுவலர், அலுவலகத்தை விட்டு உடனடியாக வெளியேறினார். `எங்களுக்கு வேட்புமனு கொடுக்கவில்லை. எனவே, தேர்தல் செல்லாது' என அ.தி.மு.கவினர் அதிகாரிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

ஜெயசீலன், அ.தி.மு.க
ஜெயசீலன், அ.தி.மு.க

தி.மு.க கூட்டணி பெரும்பான்மை இருந்தும், பதவியேற்க விடாமல் அ.தி.மு.க சதி செய்கிறது என்ற தகவல் பரவியதால் தி.மு.கவினர் அதிகளவில் கூடினார்கள். இதனால், இரண்டு மணி நேரம் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒன்றிய அலுவலகம் பகுதி பரபரப்பாக இருந்தது.

அடுத்த கட்டுரைக்கு