Published:Updated:

கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்... தமிழகத்தின் 11 எம்.எல்.ஏ-க்கள் பதவி தப்புமா?

கர்நாடகத்தில், 17 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கிலும் தீர்ப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பி.எஸ் தகுதிநீக்க வழக்கு
ஓ.பி.எஸ் தகுதிநீக்க வழக்கு

கர்நாடகாவில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏ-க்கள், கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்து, எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றார்.

கர்நாடக சட்டப்பேரவை
கர்நாடக சட்டப்பேரவை

ராஜினாமா கடிதம் சமர்ப்பித்த 17 எம்.எல்.ஏ-க்களையும் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்ததோடு, தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிகிறவரை தேர்தலில் போட்டியிடத் தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, 17 எம்.எல்.ஏ-க்களும் உச்ச நீதிமன்றம் சென்றனர். தகுதிநீக்கத்தைப் பற்றி அவர்கள் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. இடைத்தேர்தலில் போட்டியிட சபாநாயகர் விதித்த தடை தவறானது என்றே வாதிட்டனர்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தொடுத்திருந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்ற அமர்வு, 17 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்பதை உறுதிசெய்தது. அதேநேரத்தில், சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடியும்வரை அவர்கள் தேர்தலில் போட்டியிட சபாநாயகர் விதித்திருந்த தடையை ரத்துசெய்துள்ளது.

கர்நாடக எம்.எல்.ஏக்கள்
கர்நாடக எம்.எல்.ஏக்கள்

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் காலியான 17 இடங்களில், 15 இடங்களுக்கு வருகிற டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், இடைத்தேர்தலில் போட்டியிட இருந்த தடை தற்போது நீங்கியுள்ளது. இனி, பா.ஜ.க-வின் சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏ-க்களுக்கு இடம் கிடைக்க வேண்டும். அதற்குப் பிறகு, வெற்றிபெற வேண்டும். டிசம்பர் 5ல் இடைத்தேர்தல் நடக்கும்பட்சத்தில், பெரும்பான்மையைத் தக்கவைக்க பா.ஜ.க-வுக்கு இந்த 15 தொகுதிகளில், ஏழு இடங்களில் ஜெயித்தே ஆக வேண்டும். பா.ஜ.க-வின் ஆட்சியை இந்த இடைத்தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்.

கர்நாடகா எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு, கடந்த ஜூலையில்தான் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்தில் தற்போது துணை முதல்வராக உள்ள ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு, கடந்த 2017 அக்டோபரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க மேல் முறையீடு செய்தது. அங்கு, இந்த வழக்கு கடந்த 2018 ஏப்ரலில் இருந்து விசாரிக்கப்படுகிறது.

அதற்குப் பின், இந்த ஆண்டு ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட கர்நாடகா எம்.எல்.ஏ-க்கள் 17 பேர் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில், நான்கே மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் மிகவிரைவிலேயே ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ -க்களின் தகுதிநீக்க வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்படுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரசுக் கொறடா உத்தரவை மீறி முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுத்தற்காக, தினகரன் ஆதரவு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கத்தை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது.

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

அதேவேளையில், 2017 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம், எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ -க்கள், அ.தி.மு.க கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். கொறடா உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்ட ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்படவில்லை.

இதை எதிர்த்தே தி.மு.க வழக்கு தாக்கல் செய்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டுவருகிறது.

ஆர்.எஸ். பாரதி
ஆர்.எஸ். பாரதி

இதுபற்றிப் பேசிய தி.மு.க எம்.பி ஆர்.எஸ். பாரதி, "ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு, புதிய தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான மூன்று பேர் அமர்வு முன்பு இறுதிக்கட்ட விசாரணையில் இருக்கிறது. எஸ்.ஏ. போப்டே தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, வழக்கின் விசாரணை எப்போது வேண்டுமானாலும் முடிந்து தீர்ப்பு வரக்கூடும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

அ.தி.மு.க ஆட்சியை வீழ்த்துவதற்கு தி.மு.க வசம் உள்ள கடைசி அஸ்திரமாக இந்த வழக்கு முன்பு பார்க்கப்பட்டது. ஆனால், 22 தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின், 125 என்ற பலமான எண்ணிக்கையை அ.தி.மு.க அரசு பெற்றிருக்கிறது. தி.மு.க கூட்டணியின் பலம் 108 ஆகவே இருக்கிறது. சுயேச்சை எம்.எல்.ஏ தினகரனைச் சேர்த்தாலும், எதிர்ப்போரின் பலம் 109 ஆக மட்டுமே இருக்கும். ஒருவேளை இந்த 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்தாலும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி உடனே கவிழ்ந்துவிடும் வாய்ப்பில்லை.

18 எம்.எல்.ஏ-க்கள் பதவியை ரத்துசெய்த சபாநாயகர், 11 பேருக்கு தயக்கம் காட்டுவது ஏன்?